COPF குழு தலைவர் "நான் எந்தப் பக்கமும் நிற்கவில்லை"

சபாநாயகர் மஹிந்த யாப்பா சபையில் தெரிவிப்பு

அரச நிதிக் குழு (COPF) தலைவர் நியமனம் தொடர்பில் நான் எந்த தரப்பின் பக்கமும் நிற்கவில்லை. அந்தக் குழு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு சொந்தமானது. பாராளுமன்ற உறுப்பினர்களே முடிவுகளை எடுக்க வேண்டும் என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன சபையில் தெரிவித்தார்.

பாராளுமன்ற அரச நிதிக்குழுவின் தலைவர் நியமனம் தொடர்பில், எதிர்க்கட்சியின் பிரதம கொரடா லக்ஸ்மன் கிரியெல்ல எம்பி நேற்று சபையில் தெரிவித்த கூற்றுக்குப் பதிலளிக்கும் போதே சபாநாயகர் இவ்வாறு தெரிவித்தார்.

லக்ஷ்மன் கிரியெல்ல எம்.பி. அது தொடர்பில் நேற்று சபையில்

தெரிவிக்கையில், நிதிக்குழுவின் தலைவர் பதவி எதிர்க்கட்சிக்கு வழங்கப்பட வேண்டும் என பல மாதங்களாக நாம் கோரி வருகின்றோம்.

இறுதியாக, ஜனாதிபதியே பாராளுமன்றத்திற்கு வருகை தந்து ஹர்ஷ டி சில்வாவை நியமித்துள்ளார்.இதன்மூலம் சபாநாயகரிடமிருந்து எதையும் செய்ய முடியாவிட்டால் ஜனாதிபதியிடம் சொல்லுங்கள் என்றே கூறப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

நிதிக் குழுவின் தலைவர் பதவி எதிர்க்கட்சிக்கு சொந்தமானது. அது கொடுக்கப்படவில்லை. போராட்ட காலத்தில் சிறிது காலம் அது வழங்கப்பட்டது. எனினும் பின்னர் திரும்ப எடுத்துக் கொள்ளப்பட்டது.

ஆளும்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் சிறப்புரிமைகளை பாதுகாக்க வேண்டியவர் சபாநாயகர் என்பதால், அரசாங்கத்தின் பக்கமின்றி நீங்கள் எங்கள் பக்கமே இருக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

இதற்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன சபையில் பதிலளிக்கையில், நான் யாருடைய பக்கமும் நிற்கவில்லை. அந்தக் குழு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு சொந்தமானது. பாராளுமன்ற உறுப்பினர்களே முடிவெடுக்க வேண்டும் என்றார்.

இதன்போது, குறுக்கிட்ட ஆளும் கட்சியின் பிரதம கொரடா பிரசன்ன ரணதுங்க , எதிர்க்கட்சியின் பிரதம கொரடா தவறான விளக்கமளித்துள்ளார். இந்த விடயத்தில் சபாநாயகர் எடுத்த நிலைப்பாட்டினால் பாராளுமன்றத்தின் கௌரவம் பாதுகாக்கப்பட்டுள்ளது என்றார்.

 

லோரன்ஸ் செல்வநாயகம்


Add new comment

Or log in with...