டெங்கு நுளம்பு ஒழிப்புக்கு மக்கள் ஒத்துழைப்பு அவசியம்

நாட்டில் டெங்கு வைரஸ் நோய்க்கு உள்ளாகின்றவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. இதனை சுகாதாரத் துறையினரின் தரவுகளும் வைத்தியசாலைகளுக்கு சிகிச்சை பெற வருகின்ற நோயாளர்கள் எண்ணிக்கையில் ஏற்பட்டுள்ள அதிகரிப்பும் உறுதிப்படுத்துகின்றன.

அதாவது 'இவ்வருடத்தின் முதல் ஐந்து மாதங்களில் 41 ஆயிரத்து 581 பேர் இந்நோய்க்கு உள்ளானவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களில் 25 பேர் உயிரிழந்துள்ளனர்' என்று சுட்டிக்காட்டியுள்ள சுகாதார அமைச்சின் தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு, 'இவ்வருடத்தின் முதல் ஐந்து மாதங்களிலும் டெங்கு நோயாளர்களாக அடையாளம் காணப்பட்டிருப்பவர்களில் 49 வீதத்தினர் மேல்மாகாணத்தை சேர்ந்தவர்கள்' என்றும் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, தற்போது டெங்கு நோய்க்கு உள்ளாகின்றவர்களின் எண்ணிக்கை மற்றும் பிரதேசங்களை அடிப்படையாகக் கொண்டு நாட்டிலுள்ள 11 மாவட்டங்களில் 67 சுகாதார மருத்துவ அதிகாரி அலுவலகங்கள் அதியுயர் டெங்கு அபாய வலயங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக டெங்கு ஒழிப்பு பிரிவின் விஷேட மருத்துவ நிபுணர் நிமல்கா பன்னிலஹெட்டி தெரிவித்துள்ளார்.

இந்த அபாய வலயங்கள் கொழும்பு, கம்பஹா, களுத்துறை, கண்டி, யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, திருகோணமலை, காலி, இரத்தினபுரி, கேகாலை, பொலன்னறுவை ஆகிய மாவட்டங்களிலேயே காணப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டிள்ளார். அதேநேரம் டெங்கு வைரஸ் நோய்க்கு உள்ளானவர்களாக தற்போது அடையாளம் காணப்படுபவர்களில் பெரும்பகுதியினர் அதன் மூன்றாம் வகைக்கு உள்ளானவர்களாக விளங்குவதும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

டெங்கில் நான்கு வகைகள் உள்ளன. அவற்றில் 2017 ஆம் ஆண்டின் பின்னர் இரண்டாம் வகைதான் இந்நாட்டில் பரவலாகப் பதிவானது. அதனால் இரண்டாம் வகை டெங்குக்கு இந்நாட்டில் பெரும்பாலானவர்கள் உள்ளாகியுள்ளதோடு, அதற்கு எதிரான நோயெதிர்ப்பு சக்தியையும் அவர்கள் தம் உடலில் பெற்றுக் கொண்டுள்ளனர். இதன் பயனாக இரண்டாம் வகை டெங்கு நோயின் தாக்கமும் வீரியமும் முன்பை விடவும் பெரிதும் பலவீனம் அடைந்து காணப்படுகின்றது.

தற்போதைய சூழலில் டெங்கு நோயின் மூன்றாம் வகை தலைதூக்கியுள்ளது. கடந்த 12 வருட காலப்பகுதியில் தற்போதுதான் இவ்வகை டெங்கு தீவிரமடைந்திருக்கின்றது. ஆனால் இரண்டாம் வகைக்கு எதிரான நோயெதிர்ப்பு சக்தி பெரும்பாலானவர்களின் உடலில் வளர்ச்சி பெற்று இருப்பது போன்று மூன்றாம் வகைக்கு எதிரான நோயெதிர்ப்பு சக்தி வளர்ச்சி பெற்று இல்லை. ஏனென்றால் மூன்றாம் வகையின் தாக்கத்திற்கு உள்ளானால் தான் அதற்கு எதிரான நோயெதிர்ப்பு சக்தியும் உடலில் வளர்ச்சி பெறும்.

ஆனால் தற்போது பெரும்பாலானவர்களின் உடலில் டெங்கின் மூன்றாம் வகைக்கு எதிரான நோயெதிர்ப்பு சக்தி வளர்ச்சி பெற்றிராததன் விளைவாகவே இன்றைய காலகட்டத்தில் டெங்குக்கு உள்ளாகின்றவர்களின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுவதோடு அதன் தாக்கமும் தீவிரமாகக் காணப்படுவதாக சுட்டிக்காட்டியுள்ள டெங்கு ஒழிப்பு பிரிவின் பணிப்பாளர், இந்நிலை தொடருமாயின் சில சமயம் இந்த டெங்கு நோய்த் தாக்கம் ஒரு சுகாதார பிரச்சினையாகக் கூட மாறலாம் என்பதையும் அவர் குறிப்பிடவும் தவறவில்லை.

அதனால் டெங்கு வைரஸைக் காவிப்பரப்பும் நுளம்புகள் பெருகுவதைத் கட்டுப்படுத்துவதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். இது காலத்தின் அவசியத் தேவையாக விளங்குகிறது. இந்நிலையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, டெங்கு ஒழிப்புக்கான நடவடிக்கைகளைத் துரிதப்படுத்துமாறு ஏற்கனவே அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்திருக்கின்றார். அதற்கு ஏற்ப நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இந்த டெங்கு வைரஸ் வகையும் நுளம்புகளால் காவிப்பரப்பப்படக் கூடியதாக இருப்பதால் அதன் பெருக்கத்தையும் பரவுதலையும் கட்டுப்படுத்துவதற்கு பொதுமக்களின் ஒத்துழைப்பும் ஆதரவும் இன்றியமையாததாகும்.

அதன் காரணத்தினால் மழைநீர் தேங்குவதற்கு வசதி அளிக்கும் சிரட்டை, பொலித்தீன், டயர், யோகட் கப் உள்ளிட்ட பிளாஸ்ரிக் பொருட்கள் அடங்கலான கைவிடப்பட்ட திண்மக்கழிவுப் பொருட்களை முறையாகவும் தொடராகவும் அப்புறப்படுத்துவதில் ஒவ்வொருவரும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். இதன் நிமித்தம் இவ்வாறான பொருட்களில் மழைநீர் தேங்குவதால் ஏற்படும் பாதிப்பின் ஆபத்தை உணரத் தவறலாகாது.

ஆகவே கைவிடப்படும் திண்மக் கழிவுப்பொருட்களை அப்புறப்படுத்தி வீட்டையும் வீட்டு சுற்றாடலையும் சுத்தமாகவும் உலர் நிலையிலும் வைத்திருப்பதில் ஒவ்வொருவரும் தம் பங்களிப்பை அளிக்க வேண்டும். அதுவே டெங்கு வைரஸின் அச்சுறுத்தலை கட்டுப்படுத்தவும் தவிர்க்கவும் வழிவகுக்கும்.


Add new comment

Or log in with...