இலங்கையின் கடல் வளங்களை முழுமையாக பயன்படுத்த திட்டம்

-இலங்கை, மாலைதீவு கடற்றொழில் அமைச்சர்கள்  ஆய்வு

இலங்கையை சூழவுள்ள கடல் பரப்பில் இலங்கை கடற்றொழிலாளர்கள் முழுமையான நன்மைகளைப் பெறும் வகையில், மாலைதீவில் பயன்பாட்டிலுள்ள தொழில் முறைகள் கையாளப்படவுள்ளன.

இதுகுறித்து கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மாலைதீவு கடற்றொழில் மற்றும் விவசாயத் துறை அமைச்சர் ஹுசைன் ரஸீட் ஹசனுடன் கலந்துரையாடினார்.

இலங்கைக்கு வந்துள்ள மாலைதீவு கடற்றொழில் மற்றும் விவசாயத்துறை அமைச்சர் நேற்று (05) கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை அமைச்சில் சந்தித்துக் கலந்துரையாடினார்.

இதன்போது, இலங்கைக்கும் மாலைதீவுக்கும் இடையிலான நீண்ட நட்புறவுகள் நினைவுபடுத்தப்பட்டது.

இதன்போது கருத்து தெரிவித்த கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, கடற்றொழிலை பிரதானமான பொருளாதாரமாகக் கொண்டுள்ள மாலைதீவின் அனுபங்கள், தொழில்நுட்பங்களை பகிர்ந்து கொள்ள ஆர்வமாக உள்ளோம். இதற்கான திறன் விருத்தி நிகழ்ச்சித் திட்டங்களை முன்னெடுப்பது ஆரோக்கியமானது.

குறிப்பாக, அரபிக் கடலில் மீன்பிடிக்கச் செல்வதற்கான பயணப் பாதையாக மாலைதீவு கடல் பரப்பை இலங்கை கடற்றொழிலாளர்கள் பயன்படுத்த அனுமதிப்பது அவசியம். ஆழ்கடல் மீன்பிடியில் ஈடுபடுகின்ற இலங்கை கடற்றொழிலாளர்கள் அசாதாரண சூழலை எதிர்கொள்ளும் சந்தர்ப்பங்களில் அவர்களை பாதுகாப்பதற்கான இணைந்த பொறிமுறை ஒன்றின் அவசியம்.

அதேபோன்று சீநோர் நிறுவனத்தின் ஊடாக உற்பத்தி செய்யப்படும் மீன்பிடிப் படகுகளுக்கு மாலைதீவில் சந்தை வாய்ப்பை உருவாக்கிக் கொள்வதும் சிறந்தது. நீர்வேளாண்மை மூலம் உற்பத்தி செய்யப்படுகின்ற மீன்களுக்கான உணவுகளை பெற்றுக்கொள்வது மற்றும் தரமான உணவுகளை இலங்கையில் உற்பத்தி செய்தல் தொடர்பாகவும் அமைச்சர் தனது கருத்தை வெளிப்படுத்தினார்.

இந்நிலையில் கருத்து தெரிவித்த மாலைதீவு கடற்றொழில் அமைச்சர், நட்பு நாடு என்ற வகையில் சாத்தியமான அனைத்து வகையான ஒத்துழைப்புக்களும் உதவிகளும் தொடரும். மாலைதீவு கடற் பரப்பை பயணப் பாதையாக பயன்படுத்த விரும்பினால் 72 மணி நேரத்துக்கு முன்னர் மாலைதீவு அதிகாரிகளுக்கு தெரியப்படுத்திய பின்னர் பயணிக்க முடியும். இலங்கை கடற்றொழில் அமைச்சரின் ஏனைய எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதற்கான சாத்தியங்கள் தொர்பாக ஆராயப்படும் எனவும் தெரிவித்தார்.

குறிப்பாக, மாலைதீவின் பிரதான மீன்பிடி முறையான தூண்டில் முறையை இலங்கையில் விருத்தி செய்வதன் மூலம் கரையோர மீன்பிடியை விருத்தி செய்வதுடன் இலங்கையை சூழவுள்ள கடல் வளத்தை முழுமையாக பயன்படுத்தும் நிலை ஏற்படும். ஆழ்கடல் தொழிலில் ஏற்படுகின்ற கால விரயம் மற்றும் உற்பத்தி செலவு போன்றவற்றையும் மீதப்படுத்த முடியும் எனவும் தெரிவித்தார்.


Add new comment

Or log in with...