மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கிச் சூடு; 62 வயது நபர் காயம்

- புதிய தலைவராக பதவியேற்க புறப்பட்ட வேளையில் சம்பவம்
- முன்புறமாக ஒரு சூடு பக்கவாட்டில் 3 சூடுகள்

மீகொடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பட்டகொட பிரதேசத்தில் இன்று (05) காலை 7.35 மணியளவில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் அதே பிரதேசத்தைச் சேர்ந்த 62 வயதான ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பத்தரமுல்லை கூட்டுறவு காப்புறுதிக் கூட்டுத்தாபனத்தின் புதிய தலைவராகப் பதவியேற்கச் சென்ற தர்ஷன் சமரவிக்ரம என்பவர் மீதே இத்துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான நபர் தனது வீட்டிற்கு அருகில் கெமுனு மாவத்தை வீதியில் யாரும் இல்லாத பகுதியில் காரில் சென்ற வேளையில், மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இருவர் கைத்துப்பாக்கியால் சுட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த காரில் முன்புற கண்ணாடியில் ஒரு துப்பாக்கிச்சூடும், வலது பக்க கண்ணாடியில் 3 சூடுகளும் என 4 துப்பாக்கிச்சூடுகள் காணப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த 62 வயதுடைய நபர் தற்போது ஹோமாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மீகொடை பொலிஸார் தெரிவித்தனர்.

வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நபரின் வலது கையில் காயம் ஏற்பட்டுள்ளதாகவும், அவரது நிலைமை கவலைக்கிடமாக இல்லை எனவும் ஹோமாகம ஆதார வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கானவர் இதற்கு முன்னர் கூட்டுறவு காப்புறுதிக் கூட்டுத்தாபனத்தின் பணிப்பாளர் சபை உறுப்பினராக கடமையாற்றி ஒருவர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்திற்கான காரணமோ, சந்தேகநபர்கள் தொடர்பிலோ இதுவரை எவ்வித தகவலும் கிடைக்கவில்லையென பொலிஸார் தெரிவித்தனர்.

ஆயினும் புதிய பதவியை பெறுவதற்கு வேறு தரப்பினர் முயற்சித்துள்ளதாகவும் அதன் தோல்வியே துப்பாக்கிச் சூட்டுக்கு காரணமாக இருக்கலாம் எனவும் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

சந்தேகநபர்களை கைது செய்வது தொடர்பான மேலதிக விசாரணைகளை, மீகொடை பொலிஸார் முன்னெடுத்துளளனர்.

 


Add new comment

Or log in with...