சவூதி அரச குடும்ப பெண்ணுடன் ஜோர்தான் முடிக்குரிய இளவரசர் ஆடம்பரத் திருமணம்

உலகத் தலைவர்கள் மற்றும் அரச குடும்பத்தினர் பங்கேற்ற ஆடம்பர வைபவத்தில் ஜோர்தானின் முடிக்குரிய இளவரசர் இரண்டாவது ஹுஸைன் பின் அப்துல்லா, சவூதி அரேபியாவின் முன்னணி வர்த்தகக் குடும்பத்தைச் சேர்ந்த பெண்ணுடன் கடந்த வியாழக்கிழமை (01) திருமணம் புரிந்தார்.

ஜோர்தான் தலைநகர் அம்மானில் உள்ள சஹரான் மாளிகையில் இடம்பெற்ற இந்த திருமண வைபவத்திற்கு பிரிட்டன் இளவரசர் தொடக்கம் அமெரிக்க முதல் பெண்மணி ஜில் பைடன் வரை சுமார் 140 விருந்தினர்கள் கலந்துகொண்டிருந்தனர்.

29 வயதான சவூதி கட்டடக் கலைஞரான ரஜ்வா அலைப், 28 வயது முடிக்குரிய இளவரசரை மணமுடித்ததன் மூலம் ஜோர்தானின் முடிக்குரிய இளவரசியாக பட்டம் சூடிக்கொண்டார்.

மணமகள் சவூதி முடிக்குரிய இளவரசர் முஹமது பின் சல்மானின் தாய்வழியில் உறவினராவார். இவர்கள் புகழ்பெற்ற அல் சுதைரி குடும்பத்தைச் சேர்ந்தவர்களாவர்.

சவூதி அரேபிய மன்னர் சல்மான் “ஏழு சுதைரிகளில்” ஒருவராவார். இந்த ஏழு சகோதாரர்களும் மன்னர் அப்துல் அசீஸ் மற்றும் ஹுசா பின்த் அஹமட் அல் சுதைரிக்கு பிறந்தவர்களாவர். இவர்கள் சவூதி மன்னர் குடும்பத்தில் செல்வாக்கு மிக்கவர்களாவர்.

இந்நிலையில் இந்தத் திருமணம் சவூதி மற்றும் ஜோர்தான் இடையிலான உறவை பலப்படுத்துவதாக உள்ளது.

சஹரான் மாளிகைக்கு ஜோர்தான் மன்னர் மற்றும் ராணியினால் விருந்தினர்களை வரவேற்பதுடன் ஆரம்பித்த நிகழ்வில் ஜோர்தானிய ஆயுதப்படையினரின் இசை வாத்தியங்களை இசைத்தனர். தொடர்ந்து இஸ்லாமிய முறைப்படியான திருமண நிகழ்வு மாளிகையின் தோட்டத்தில் இடம்பெற்றது.

மாளிகைக்கு வெளியில் புதிய தம்பதி வாகனத் தொடரணியில் செல்வதை பார்க்க ஜோர்தானிய தேசிய கொடியுடன் மக்கள் காத்திருந்தனர். பின்னர் தலைநகர் அம்மானை சுற்றி புதிய தம்பதியினர் வாகனத் தொடரியில் அழைத்துச் செல்லப்பட்டனர்.

ஜோர்தான் மற்றும் சவூதி அரேபியாவுக்கு இடையே பல வருடங்கள் நீடித்த பதற்றம் அண்மையிலேயே தணிந்தது. கடந்த ஆண்டு ஜோர்தானுக்கு விஜயம் மேற்கொண்ட சவூதி முடிக்குரிய இளவரசர், ஜோர்தானுடனான உறவை புதிய கட்டத்திற்கு எடுத்துச் செல்ல விரும்புவதாக குறிப்பிட்டிருந்தார்.


Add new comment

Or log in with...