மேடையில் தடுக்கி விழுந்த ஜோ பைடன்

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கொலொராடோவில் உள்ள அமெரிக்க விமானப்படை அகடமியில் பட்டமளிப்பு நிகழ்வின்போது மேடையில் கால் தடுக்கி கீழே விழுந்துள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதியாக பதவி வகிக்கும் மிக வயதானவர் என்று பதிவாகியுள்ள 80 வயதான பைடன், தமது காவலர்களின் உதவியோடு மீண்டும் எழுந்து நின்றார். அவருக்கு காயம் ஏற்படவில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

921 பட்டதாரிகளுக்கு பட்டமளிப்பதற்காக பைடன் மேடையில் சுமார் ஒன்றரை மணி நேரம் நின்று கொண்டிருந்தார்.

இந்நிலையில் அவர் நன்றாக உள்ளார் என்று வெள்ளை மாளிகை ஊடகப் பணிப்பாளர் பென் லாபோல்ட் குறிப்பிட்டுள்ளார். “அவர் பட்டதாரிகளுக்கு கைலாகு கொடுக்கும்போது மேடையில் மணல் மூட்டை ஒன்று இருந்தது” என்று அவர் ட்விட்டரில் தெரிவித்தார்.

கடந்த வியாழக்கிழமை (01) சம்பவம் நிகழ்ந்த பின் அன்று மாலை வெள்ளை மாளிகைக்கு திரும்பிய பைடன், “நான் மணல் மூட்டையில் சிக்கிவிட்டேன்” என்று செய்தியாளர்களிடம் நகைச்சுவையாகக் குறிப்பிட்டார்.

மேடையில் நகரும்போது கறுப்பு நிற மணல் மூட்டை ஒன்றில் பைடனின் கால் தடுக்கியது என்று முன்னதான வெள்ளை மாளிகை ஊடகப் பிரிவு குறிப்பிட்டிருந்தது.

மேடையில் தொலைத்தொடர்பு கருவியை நிறுத்துவதற்காக வைக்கப்பட்ட இரு மணல் மூட்டைகளில் ஒன்றிலே அவரது கால் தடுக்கியதோடு விமானப் படை அதிகாரி ஒருவர் மற்றும் அவரது காவலர்கள் இருவர் பைடனை மீண்டும் எழுந்து நிற்க உதவியது சம்பவம் குறித்த வீடியோ காட்சியில் தெரிகிறது. எந்த உதவியும் இன்றி அவர் இருக்கைக்கு சென்றதோடு நிகழ்வு முடிந்த பின்னர் தனது வாகனத்திற்கு அவர் ஓடிச் செல்வதை காண முடிந்தது.

பைடன் இரண்டாவது தவணைக்காக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ள நிலையில் அவர் அந்தப் பொறுப்புக்கு அதிக வயது கொண்டவர் என்ற விமர்சனங்களும் எழுந்துவருகின்றன.

முன்னதாக அவர் சைக்கிளில் செல்லும்போதும் படிக்கட்டில் ஏறும்போதும் தடுக்கி விழுந்த நிலையில் அவ்வாறான சம்பவம் மீண்டும் நிகழ்ந்திருப்பது இந்த விமர்சனத்தை வலுப்படுத்துவதாக உள்ளது.

2024 ஜனாதிபதி தேர்தலில் தனது பிரதான போட்டியாளராக குதித்திருக்கும் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், ஐயோவாவில் தனது பிரசாரக் கூட்டம் ஒன்றில் பைடன் தடுக்கி விழுந்ததை கேலி செய்துள்ளார்.

“எல்லாமே பைத்தியக்காரத்தனமானது. அவருக்கு காயம் ஏற்பட்டிருக்காது என்று பிரார்த்திக்கிறேன்” என 76 வயதான டிரம்ப் குறிப்பிட்டுள்ளார். பைடனின் வயதை டிரம்ப் அடிக்கடி கேலி செய்கின்றமை குறிப்பிடத்தக்கது.

பைடன் கடைசியாக கடந்த பெப்ரவரியில் உடல் பரிசோதனைக்கு முகம்கொடுத்திருந்தார். அப்போது வெள்ளை மாளிகை மருத்துவரான கெவின் ஓகோனர் கூறும்போது, “ஜனாதிபதி தமது கடமைகளை செய்வதற்கு தகுதியுடன் இருப்பதோடு, எந்தவித விதிவிலக்குகள் அல்லது தடங்கலும் இன்றி் தனது அனைத்து பொறுப்புகளையும் முழுமையாக நிறைவேற்றுகிறார்” என்று தெரிவித்திருந்தார்.

ஜனாதிபதி தனது முதுகுத்தண்டில் தேய்மானம் மற்றும் அவரது கால்களின் நரம்பு சேதம் காரணமாக நடப்பதற்கு சிரப்படுவதாக குறிப்பிட்ட ஓகோனர், ஆனால் அவரது உடல்நிலை நவம்பர் 2021 க்கு முந்தைய உடல் நிலையில் இருந்து மாறாமல் உள்ளது என்றார்.

எனினும் பைடன் பொதுவெளியில் இவ்வாறு தடுக்கி விழும் முதல் ஜனாதிபதியல்ல. 2012 ஆம் ஆண்டு நிகழ்வொன்றின்போது ஜனாதிபதி பராக் ஒபாடா படிக்கட்டில் ஏறும்போது தடுக்கி விழுந்ததோடு 1975 இல் ஜனாதிபதி கிரால்ட் போர்ட் ஏயார்போஸ் வன் விமானப் படிக்கட்டில் தடுக்கி விழுந்தார்.


Add new comment

Or log in with...