தோனிக்கு அறுவை சிகிச்சை

மும்பை மருத்துவமனையில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணித் தலைவர் மகேந்திர சிங் தோனிக்கு அறுவை சிகிச்சை நிறைவடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

இம்முறை ஐ.பி.எல் இறுதிப் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி சென்னை சுப்பர் கிங்ஸ் அணி சம்பியன் பட்டத்தை 5ஆவது முறையாக வென்றது.

சென்னை அணித் தலைவர் தோனி இந்த பருவம் முழுவதும் முழங்கால் வலியுடன் விளையாடி வந்தார். போட்டிகளில் துடுப்பெடுத்தாடும்போது ஓட்டம் பெற ஓடுவதற்கு மிகவும் சிரமப்பட்டார்.

இந்நிலையில், இறுதிப் போட்டி முடிவடைந்தவுடன் கடந்த புதன்கிழமை (31) மும்பை சென்ற தோனி, அங்குள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டார்.

இதனைத் தொடர்ந்து, வியாழக்கிழமை (01) அவருக்கு முழங்காலில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

மும்பையின் கோகிலாபென் மருத்துவமனையின் எலும்பு அறுவை சிகிச்சை நிபுணர் மருத்துவர் தின்ஷா பர்திவாலாவிடம் மருத்துவ ஆலோசனை பெற்ற தோனி, அவரது ஆலோசனையின்படி முழங்கால் அறுவை சிகிச்சை செய்துகொண்டுள்ளார்.

இந்தத் தகவலை உறுதி செய்துள்ள சென்னை அணியின் நிர்வாகி ஒருவர், “அறுவை சிகிச்சைக்கு பின் தோனி நலமுடன் இருக்கிறார்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அறுவைச் சிகிச்சைக்குப் பின்னர் ஏற்கனவே மருத்துவமனையில் இருந்து வெளியேறியிருக்கும் தோனி, சிறிது காலம் ஓய்வில் இருப்பார் என்று தெரியவருகிறது. அதேபோன்று தோனி மீண்டும் பழைய வேகத்துடன் ஓடுவதற்கு 2 மாதங்கள் வரை ஆகும் என்று தகவல் வெளியாகியுள்ளது.


Add new comment

Or log in with...