இளையராஜாவுக்கு நேரில் சென்று பிறந்தநாள் வாழ்த்துக் கூறிய தமிழக முதல்வர் ஸ்டாலின்

நேற்று 80 ஆவது பிறந்தநாளை கொண்டாடிய இசைஞானி இளையராஜாவிற்கு அரசியல் கட்சித்தலைவர்கள் பலரும் வாழ்த்து கூறினர். முதல்வர் மு.க. ஸ்டாலின் நேரில் சென்று வாழ்த்துக் கூறினர். அமைச்சர்கள் உள்ளிட்டோரும் இளையராஜாவை நேரில் சென்று வாழ்த்துத் தெரிவித்தனர். ஞானதேசிகன் என்னும் இயற்பெயரைக் கொண்ட இளையராஜா இசையமைப்பாளர், பாடகர் மற்றும் பாடலாசிரியர் என பன்முகம் கொண்டவர்.

உண்மையிலேயே இசைஞானி இளையராஜாவின் பிறந்த நாள் ஜூன் 3 ஆம் திகதிதான். அதேநாள் தான் தி.மு.க தலைவர் கலைஞர் கருணாநிதியின் பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது. இளையராஜாவிற்கு இசைஞானி என்ற பட்டத்தை கொடுத்தவர் கலைஞர் கருணாநிதி. அவர் மீது இருந்த மதிப்பு மரியாதையால் தனது பிறந்தநாளை ஜூன் 2 ஆம் திகதி கொண்டாடி வருகிறார் இளையராஜா.

அதற்கான காரணத்தையும் அவரே கூறியுள்ளார். “கலைஞர் ஐயா தமிழுக்கு ஏராளமான சேவைகளைச் செய்துள்ளார். அந்த அளவுக்கு நான் ஒன்றும் செய்து விடவில்லை. அதனால் கலைஞரை மட்டுமே தமிழக மக்கள் ஜூன் 3 ஆம் திகதி வாழ்த்த வேண்டும். அதனால்தான் இந்த முடிவை எடுத்தேன்” என்று அவர் பலமுறை தெரிவித்துள்ளார்.

பண்ணைபுரம் என்னும் கிராமப்புறத்தை பிறப்பிடமாகக் கொண்ட இளையராஜா 14 வயதில், அவர் தனது மூத்த சகோதரர் பாவலர் வரதராஜன் தலைமையிலான ‘பாவலர் பிரதர்ஸ்’ என்ற இசைக்குழுவில் சேர்ந்தார். தமிழ் திரைப்பட உலகில் கடந்த 40 ஆண்டுகாலமாக இசை இராஜாங்கம் நடத்தி வரும் இளையராஜாவின் பிறந்த நாள் நேற்று கொண்டாடப்பட்டது.

மஞ்சள்நிற பொன்னாடை அணிவித்து அறிஞர் அண்ணாவின் புத்தகத்தை கொடுத்து இளையராஜாவை வாழ்த்தினார் முதல்வர் ஸ்டாலின்.


Add new comment

Or log in with...