இலங்கையில் நாளாந்தம் 55 பேரின் உயிரைப் பறிக்கும் புகையிலை!

உலக புகையிலை எதிர்ப்பு தினம் கடந்த 31 ஆம் திகதி கொழும்பில் பௌத்த சமய அமைச்சின் அனுசரணையுடன் பௌத்த கலாசார அமைச்சின் கேட்போர் கூடத்தில் அனுஷ்டிக்கப்பட்டது.

பௌத்த அமைச்சின் மேலதிக செயலாளர், பொலிஸ், மற்றும் இத்துறை சார்ந்த முப்படை அதிகாரிகள், பாதுகாப்புப் படையினர், கொழும்பில் உள்ள பாடசாலை மாணவர்கள் ,இளைஞர் யுவதிகள் மும்மதத் தலைவர்கள் இந்நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர்.

இங்கு பிரதான உரையை ஆற்றிய பேராசிரியர் கலாநிதி என்.ஆர். அமரசிங்க தெரிவித்தாவது:

இலங்கையில் புகைத்தலினால் நாள் ஒன்றுக்கு 400 மில்லியன் ரூபா விரயமாகின்றது. இந்நிதியை நாம் மீதப்படுத்தினால் எமது நாட்டு இளைஞர், யுவதிகளுக்கு தொழிற்பேட்டை நடத்தி அதன் ஊடாக நுாற்றுக்கணக்கான குடும்பங்கள் வாழ முடியும்.

இலங்கையில் தினமும் 55 பேர் புகையிலை உட்கொண்டு புற்றுநோய், இதயநோய், சுவாசநோய் போன்றவற்றால் பீடிக்கப்பட்டு மரணிக்கின்றனர் .ஒரு வருடத்திற்கு 20 ஆயிரம் பேர் வரை இலங்கையில் மரணமடைகின்றனர். உலகில் வருடத்திற்கு 1.2 மில்லியன் பேர் புகைத்தலினால் இறக்கின்றார்கள்.

இளம் பெண்கள் தங்களது எதிர்கால கணவனைத் தேர்ந்தெடுக்கும் போது முதலில் அவன் சிகரட் புகைப்பவராக இருந்தால் அவரை நீங்கள் திருமணம் முடிக்காதீர்கள். புகைப்பவரை மணந்தால் உங்களது வாழ்க்கை நாசமாகிவிடும்.

புகைப்பிடிப்பவரிடமிருந்து உங்களுக்கு பிறக்கும் குழந்தைகள் கூட நோய்வாய்ப்பட்டு விடும். அவர் பெறுகின்ற வருமானத்தினால் கூட உங்களது வாழ்க்கையை கட்டிக் காக்க முடியாது. இதுவே உண்மையாகும்.

சிகரட் புகைப்பவரின் உடம்பில் 7200 நஞ்சுப் பொருட்கள் உள்ளன. அவரது ஆயுள் குறைந்து கொண்டே செல்கிறது. இலங்கையில் பொதுஇடங்களில், பஸ் நிலையங்கள், புகையிரத நிலையங்கள், அரச கட்டடங்கள், அரச சிற்றுண்டிச்சாலைகளில் புகைக்க முடியாது. அதற்கான சட்ட திட்டம் இலங்கை அரசாங்கத்தினால் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அரச நிறுவனங்களின் கட்டடங்களின் புகைப்பதற்கு வசதி செய்திருப்பின் அல்லது சிகரெட் விற்பனை செய்வாராயின் அவருக்கு எதிராக 2 வருட சிறைவாசம், தண்டப்பணம் விதிக்க முடியும். அதற்காக நீதிமன்றில் வழக்குகளும் உங்களால் தாக்கல் செய்ய முடியும்.

அதேபோன்று சிகரட் புகைப்பவரை விளம்பரப்படுத்தினால் அதற்கும் 2 மில்லியன் ரூபா தண்டப்பணம் விதிக்க முடியும் எனவும் பேராசிரியர் அமரசிங்க தெரிவித்தார்.

இன்று உலக புகை எதிா்ப்பு திணத்தினை முன்னிட்டு அவர் அங்கு ஆற்றிய விரிவுரையில் தெரிவித்தார்.

நாம் சுனாமி,கொவிட் காரணமாக உயிரிழந்வர்களை வருடா வருடம் நினைவு கூருகின்றோம். ஆனால் வருடா வருடம் புகைத்தலினால் 20 ஆயிரம் பேர் இறப்பதை நாம் தடுத்தல் வேண்டும். புகைத்தலை நிறுத்தியவர்களை நாம் பாதுகாத்தல் வேண்டும் என்றும் அவர் கூறினார்.

இந்நிகழ்வின் போது மதுசாரம் போதைப் பொருள் நிறுவனம், மேல் மாகணாத்தின் சமூகசேவை சுற்றாடல் சம்பந்தமான பிரதிப் பொலிஸ் மா அதிபர் உட்பட அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

அஷ்ரப் ஏ சமத்...


Add new comment

Or log in with...