இலங்கை பெட்மின்டன் சங்கத்தின் உப தலைவராக அலியார் பைசர் தெரிவு

கிழக்கு மாகாண விளையாட்டுத் துறையின் முன்னோடி ஆசிரியர் அலியார் பைசர் இலங்கை பெட்மின்டன் சங்கத்தின் உப தலைவராக 2023/2027 ஆகிய 4 ஆண்டு காலப் பகுதிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இலங்கை பெட்மின்டன் சங்கத்தின் வருடாந்த பொதுக்கூட்டமும் நிர்வாகசபை தேர்தலும் விளையாட்டு அமைச்சின் அதிகாரிகள் மற்றும் முன்னாள்  உயர் நீதிமன்ற நீதிபதிகள் அடங்கிய தேர்தல்  குழுவின் தலைமையில் இலங்கை பெட்மின்டன் சங்க கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

உப தலைவர் பதவிக்காக 16 பேர் கடந்த ஏப்ரல் மாதம் வேட்பு மனு தாக்கல்  செய்திருந்தனர். இவர்களில் ஒருவரது வேட்புமனு நிராகரிக்கப்பட்டதுடன் மூவர் தமது வேட்புமனுவை  வாபஸ் வாங்கிக் கொண்டனர்.

7 பேர் உப தலைவர்களாக தெரிவு செய்யப்பட வேண்டும் என்பதற்கு இணங்க அலியார் பைசர் அதிகப்படியான வாக்குகளை பெற்று தெரிவு செய்யப்பட்டார். வடக்கு, கிழக்கை சேர்ந்த ஒரு சிறுபான்மை இனத்தவர் தேசிய விளையாட்டு சங்கமான இலங்கை பெட்மின்டன் சங்கத்துக்கு உப தலைவராக தெரிவு செய்யப்பட்டிருப்பது இதுவே முதற் தடவையாகும்.

அலியார் பைசர் கிழக்கு மாகாண பெட்மின்டன் சங்கத்தின் ஸ்தாபகராக பொதுச் செயலாளராக மற்றும் அம்பாறை மாவட்ட பெட்மின்டன் சங்கத்தின் ஸ்தாபகராகவும் பொதுச் செயலாளராகவும் கடமையாற்றி வருகின்றார்.

இவர் பெட்மின்டன் துறையில் பல்வேறு தகமைகளையும் செயற்பாட்டு உத்திகளையும்  கொண்டுள்ளார்.  உலக பெட்மின்டன் சம்மேளனத்தின் BWF Level-பயிற்சியாளராகவும், ஆசிய பெட்மின்டன்  சம்மேளனத்தின் BAC Level- llபயிற்சியாளராகவும், இலங்கை பெட்மின்டன்  சங்கத்தின் SLBA Level-l பயிற்சியாளராகவும் விளையாட்டு அமைச்சின் தேசிய விளையாட்டு விஞ்ஞான நிறுவனத்தின் விசேட வெளிநாட்டு புலமைப்பரிசில் மூலம்  மலேசியாவில் பயிற்சியளிக்கப்பட்ட NISS உயர் பயிற்சியாளராகவும் தகைமைகளை பெற்றுள்ளார்.

இவரது வினைத்திறனையும் தகைமைகளையும் அறிந்த இலங்கை பெட்மின்டன் சங்கம் 70 ஆவது பெட்மின்டன் சாம்பியன்ஷிப் சுற்றுப்போட்டியில் பிரதிப் பணிப்பாளராக  நியமனம் செய்து கௌரவப்படுத்தியது.

இலங்கை 2032 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகள் மற்றும் பொதுநலவாய  போட்டிகளின் அடைவு மட்டத்தை எவ்வாறு அடைய  வேண்டும் என்பதற்கான Strategic Plan ஐ வரைந்து பெட்மின்டன் வளர்ச்சிக்கான திட்டத்தினை சமர்ப்பித்து எல்லோருடைய கௌரவத்தினையும் பெற்றுக் கொண்டார். அலியார் பைசர் அவர்கள் சர்வதேச ஒலிம்பிக் கவுன்சிலினால் நடத்தப்பட்ட Special Sports Administrator பயிற்சி நெறியில் சித்தியடைந்ததுடன் Athlete 365 மற்றும் Competition Manipulation பாட நெறிகளில்  உயர்சித்தியை  பெற்றுள்ளார்.

இவரது தகைமைகளையும்  விளையாட்டின் மீது கொண்டுள்ள ஆர்வத்தினையும் கருத்தில் கொண்டு இலங்கை தேசிய ஒலிம்பிக் கவுன்சில் 2022/2026 கல்வி குழு உறுப்பினராக கடந்த வருடம் தெரிவு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.கு

-நூருல் ஹுதா உமர்


Add new comment

Or log in with...