உலக ரக்பி இலங்கையில் ஜூலை மாதம் விசாரணை

எதிர்வரும் ஜூலையில் இலங்கை ரக்பி மீதான விசாரணை நடத்தப்படும் என்று உலக ரக்பி சம்மேளனம் விளையாட்டுத் துறை அமைச்சுக்கு அறிவித்துள்ளது.

இலங்கை ரக்பி தொடர்பில் விளையாட்டுத் துறை அமைச்சு கடந்த சில மாதங்களில் எடுத்த கடுமையான நடவடிக்கைகளைத் தொடர்ந்தே உலக ரக்பி சம்மேளனம் இந்த அறிவிப்பை விடுத்துள்ளது.

உலக ரக்பி சம்மேளனத்தால் கடந்த மே 11 ஆம் திகதி இலங்கை ரக்பி சம்மேளத்திற்கு தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் சந்தேகங்களை தெளிவுபடுத்துவதற்காக உலக ரக்பி சம்மேளனத்திற்கு விளையாட்டுத் துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க கடிதம் ஒன்றை எழுதியிருந்தார்.

அதற்கு பதிலளிக்கும் வகையில் ஆசிய ரக்பி சம்மேளனத்துடன் இணைந்து விசாரணை ஆரம்பிக்கப்படும் என்று உலக ரக்பி சம்மேளனம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் உலக ரக்பி சம்மேளனம் அமைச்சுக்கு எழுதியிருக்கும் கடிதத்தில் கூறியிருப்பதாவது.

“இலங்கையை அதன் சொந்த உள்நாட்டு சட்டக் கட்டமைப்பைக் கொண்ட இறையாண்மை கொண்ட நாடாக அங்கீகரிக்கும் அதேநேரம், உலக ரக்பி விதிகளுக்கு இணங்குவதை உறுதிசெய்யும் பொருட்டு, உலக ரக்பி நிறுவனம் இலங்கை ரக்பியின் ஆளுகையைச் சுற்றியுள்ள பிரச்சினைகள் குறித்து மேலும் அறிவை பெற வேண்டியுள்ளது.

எனவே இந்த விடயத்தில் உலக ரக்பி நிறுவனம் முழுமையான மீளாய்வை நடத்தும் என்பதோடு இதனை முறையான வகையில் நடத்துவது குறித்து ஆசிய ரக்பி நிறுவனத்துடன் தொடர்பை ஏற்படுத்தும். இந்தப் பிரச்சினைகளுக்கு நெருங்கிய தரப்புகளுடன் இலங்கை ரக்பி செயற்பட வேண்டிய தேவை உள்ளது என்பதில் சந்தேகம் இல்லை.

இந்த மறுஆய்வுச் செயல்பாட்டின் ஒரு பகுதியாக அமைச்சுடன் தொடர்புகொள்வதும் எங்கள் நோக்கமாகும், மேலும் இந்த விடயங்களை மதிப்பாய்வு செய்வதற்கான சந்திப்பை நீங்கள் வழங்கியதற்கு மிகவும் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம்.

ஜூலை ஆரம்பத்தில் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ள நாம் எதிர்பார்த்திருப்பதோடு சந்திப்புக்கு பொருத்தமான நேரத்தை உறுதி செய்ய உங்கள் அலுவகத்துடன் தொடர்புகொள்வோம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.


Add new comment

Or log in with...