நெருக்கடியிலிருந்து நாட்டை மீள கட்டியெழுப்பும் உந்துசக்தியாக ஜனாதிபதியின் ஜப்பான் விஜயம்

- பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்க

ஜப்பான் விஜயத்தின் போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனது வெளிவிவகார மற்றும் பொருளாதார கொள்கைகளை உலகிற்கு தெளிவாக எடுத்துரைத்திருப்பது, பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கான இலங்கையின் முயற்சிகளுக்கு பெரும் உந்துசக்தியாக அமைந்துள்ளது என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார்.

இலகு ரயில் திட்டத்தை மீண்டும் பெற்றுக் கொள்வதற்கும் இந்நாட்டின் அபிவிருத்தித் திட்டங்களுக்கு ஜப்பானின் ஆதரவை மேலும் அதிகரித்துக் கொள்வதற்கும்   ஜப்பானிய பிரதமருடனான கலந்துரையாடலில் ஜனாதிபதி மேற்கொண்ட தலையீடானது ஒரு மேம்பட்ட இராஜதந்திர அணுகுமுறை என்றும் அவர் வலியுறுத்தினார்.

நாட்டில் அபிவிருத்தித் திட்டங்கள் மற்றும் வெளிநாட்டு முதலீடுகளை மேம்படுத்துவதற்காக உயர்மட்ட வெளிநாட்டு இராஜதந்திரிகள் மற்றும் வர்த்தக சபைகளுடன் கலந்துரையாடலின் போது ஜனாதிபதியின் வெளிப்படையான கருத்துக்கள் நாட்டின் நற்பெயரை உயர்த்த உதவியது என்றும் அவர் கூறினார்.

ஜனாதிபதி ஊடகப் பிரிவினால் தயாரிக்கப்படும்  '101 கதா' நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலே பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்க இதனைக் குறிப்பிட்டார்.

ஜப்பானில் நடைபெற்ற ஆசியாவின் எதிர்காலம் தொடர்பான 28ஆவது நிக்கெய் சர்வதேச மாநாட்டில் ஜனாதிபதியின் உரை குறித்து கருத்து தெரிவித்த சிரேஷ்ட பேராசிரியர், ''ஆசியா, உலகின் எதிர்காலமாக மாறியுள்ளது'' எனவும்,  உலக அரசியலில் சுதந்திரமான ஆசியா உருவாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கருத்துக்கள் ஜப்பான் உள்ளிட்ட பிராந்திய வல்லரசுகளால் பாராட்டைப் பெற்றுள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

மேலும் கருத்துத் தெரிவித்த சிரேஷ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்க

''ஒரு முதிர்ந்த அரசியல்வாதி மற்றும் இராஜதந்திரி என்ற வகையில், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உலகில் உள்ள அனைத்து குழுக்களையும் சமமான  முறையில் கையாள்கிறார். தொலைநோக்குப் பார்வையுடன் பணியாற்றுகிறார். எனவே  கடந்த காலங்களில் எடுக்கப்பட்ட தொலைநோக்கற்ற தீர்மானங்களை சீர்செய்ய  ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நடவடிக்கை எடுத்துள்ளார். இலகுரக ரயில் திட்டம் கைவிடப்பட்டமையே ஜப்பானுடன் ஓரளவு விரசல் ஏற்பட காரணமாக அமைந்தது. இந்த விடயத்தை, தம்மை  புறக்கணிப்பதாகவோ அல்லது சிறுமைப்படுத்துவதாகவோ தான் ஜப்பான் கருதியது. என் கருத்துப்படி, அந்த திட்டம் உண்மையில் நம் நாட்டிற்கு உகந்த விடயமாகும்.

ஒரு நாடு துரிதமாக வளர்ச்சியடைய வேண்டுமானால், நகர்ப்புற நெரிசலான பகுதிகளில் உள்ள நெரிசலை நீக்க வேண்டும். இல்லையெனில், ஒரு நாட்டை அபிவிருத்தி செய்வது கடினம். நமது வலயத்தில் உள்ள தாய்லாந்து, வேகமாக வளர்ச்சியை நோக்கி நகர்கிற அதேவேளை வீதிக் கட்டமைப்பை உரிய வகையில்  தயார்செய்து வருகிறது.

ஜப்பானின் இலகுரக ரயில் திட்டத்தை முன்னெடுத்திருந்தால், அது நம் நாட்டுக்கு சிறந்த ஒன்றாக அமைந்திருக்கும். ஆனால் கடந்த காலத்தில் எடுத்த முட்டாள்தனமான முடிவால் அந்த வாய்ப்பை இழந்தோம். ஆனால் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இது தொடர்பில் வருத்தம் தெரிவித்துள்ளார். அந்த நிலையில் ஜப்பானுடன் தனக்கு ஏதேனும் தவறான புரிதல் இருந்தால் அதனை மாற்றிக் கொண்டுள்ளது. 

சர்வதேச நாணய நிதியம் சுமார் மூன்று பில்லியன் அமெரிக்க டாலர்களை கடன் மறுசீரமைப்பிற்கு வழங்கியது. இந்த இலகுரக ரயில் திட்டத்தில் ஜப்பான் சுமார்  இரண்டு பில்லியன் டாலர்களை முதலீடு செய்ய எதிர்பார்த்திருந்தது. இந்த  முதலீடு கடனாக இருந்தாலும், அதை மானியமாகவும் எண்ணலாம். இது மிகக் குறைந்த வட்டியில் கிடைத்த சிறந்த முதலீடு. பொதுவாக ஜப்பானியர்களின் உதவிகள் ஒரு நாட்டிற்கு வந்தால், அந்த நாட்டின் மீது  முழு உலகத்தின் கவனமும் திரும்பும். ஜப்பானிய திட்டங்கள் கொத்துக்கள் போன்று தான் வருகின்றன. முதலீடுகள் குவிந்து வரும். அத்துடன் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் ஜப்பான் விஜயம் காரணமாக நம்நாட்டுக்கு இரண்டு பில்லியன் டொலர்கள் முதலீட்டு உதவிகள் கிடைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதனை நமது நாட்டின் பொருளாதார மறுமலர்ச்சிக்கான நல்ல வாய்ப்பாகக் குறிப்பிடலாம்.

எதிர்காலத்தில் இரு தரப்பினரின் இணக்கப்பாட்டின்றி வெளிநாட்டு திட்டங்களை நிறுத்த முடியாத வகையில் சட்டமூலமொன்றை பாராளுமன்றத்தில் முன்வைக்கப் போவதாக ஜனாதிபதி கருத்து  வெளியிட்டுள்ளார். முதலீடுகளின் பலனை நாடு அடைய வேண்டுமானால், அத்தகைய கருத்து  சட்டமாக்கப்படுவது மிகவும் முக்கியமானது. முதலீடுகளுக்கு அழைப்பு விடுக்கும் நாடு  என்ற வகையில் ஏனைய நாடுகளிலிருந்து  முதலீடுகள் வரும்போது இவ்வாறான சட்டம்  மிகவும் முக்கியமானது. நகர் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வாக, 'இலகுரக ரயில் திட்டம்' ஆரம்பிக்கப்பட்டது. தற்போதைய சூழ்நிலையில், இலகுரக ரயில் பாதை அமைப்பது மிகவும் முக்கியமானது. 

அந்த மாநாட்டில் எமது பிரதேச நண்பர்களுடன் கருத்துக்களை பரிமாறிக்கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. இது எமது நாட்டுக்கு கிடைத்த நல்ல சந்தர்ப்பமாகும். அந்த மாநாட்டில் ஜனாதிபதி வரவேற்கத்தக்க உரையொன்றை நிகழ்த்தினார். ஜப்பான் உயர் மாநாட்டில் உரையாற்றிய ஜனாதிபதி, ஆசியா உலகின் எதிர்காலம் என்பதை  விளக்குகிறார். முக்கியமானது என்னவென்றால், நாட்டின் தலைவர் ஒருவர் தனது வெளியுறவுக் கொள்கையை சரியான முறையில் உலகிற்கு முன்வைக்கிறார். அணிசேராக் கொள்கையை அவர் தெளிவாகக் கூறினார். யாருடைய பக்கமும் சாய வேண்டிய அவசியம் இல்லை என்றும் குறிப்பிட்டார்.

ஜப்பான் மற்றும் பிராந்திய நாடுகளிடையே இது பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இதை நம் நாட்டின் பெருமையாகவும், வெற்றியாகவும் குறிப்பிடலாம். நெருக்கடிக்குப் பிறகு உலகை சந்திக்கும் வாய்ப்பாகவும் இந்த வாய்ப்பைக் குறிப்பிடலாம். மேலும் சார்ளஸ் மன்னரின் முடிசூட்டு விழாவிற்கும் ஜனாதிபதி  சென்றார். இவற்றின் ஊடாக எமது சர்வதேச பார்வையை மீளக் கட்டியெழுப்புவதற்கான நல்ல சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.இவ்வாறான சந்தர்ப்பங்களை நாட்டுக்கு திறம்பட பயன்படுத்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவால் முடிந்துள்ளது. அதை மிகச் சிறந்த அணுகுமுறையாகக் குறிப்பிடலாம்.

ஆசியாவின் பாதுகாப்பிற்கு இன்றியமையாத நாடாக இலங்கையைக் குறிப்பிடலாம். நமது டிஜிட்டல் பொருளாதாரம், போக்குவரத்து, துறைமுக நகரம் உள்ளிட்ட முதலீடுகள், முதலீட்டாளர்களுக்கு மிகவும் முக்கியமானவை. டிஜிட்டல் பொருளாதாரத்திற்கு செல்லவில்லை என்றால், ஒரு நாடாக முன்னேற முடியாது.

ஜப்பான் எங்களுடன் கைகுலுக்கி முன்னேற விரும்புகிறது. இரண்டு வருடங்களுக்கு முன்பிருந்ததை விட இப்போது அனைத்தும் சீராகி வருவதைக் காணலாம். எதிர்காலத்தில் அரச நிறுவனங்களை மறுசீரமைப்பதன் மூலம் நமது நாடு பயனடையும். நஷ்டத்தில் இயங்கும் நிறுவனங்களை பராமரிப்பதில் எந்த பயனும் இல்லை. ஜப்பான் ஒரு நாட்டிற்கு கடன் அல்லது உதவி வழங்கினால், அது கவனமாக வழங்கப்படுகிறது. ஜப்பானின் தொழில்நுட்பம், நிதி மற்றும் வெளிவிவகார அமைச்சர்களுடன் ஜனாதிபதி கலந்துரையாடினார். அவர்கள் இலங்கைக்கு உதவ விரும்புகிறார்கள். எதிர்காலத்தில், ஜப்பானுடன் நெருக்கமாகப் பணியாற்றும் வாய்ப்பு கிடைக்கும். எம்மாலும் ஜப்பான் போன்ற நாடாக மாறலாம்.''

என்று  பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்தார்.

1O1 கதா நிகழ்ச்சியின் மூலம் வெளியிடப்படும் புதிய தகவல்களைப் பெற,  (https://tinyurl.com/101Katha) 1O1 கதா வாட்ஸ்அப் குழுவில் இணையலாம்.


Add new comment

Or log in with...