லங்கா பிரீமியர் லீக் தொடரின் வீரர்கள் ஏல விபரம் வெளியீடு

நான்காவது லங்கா பிரீமியர் லீக் தொடருக்கான வீரர்கள் ஏலம் எதிர்வரும் ஜூன் 14 ஆம் திகதி கொழும்பு, ஷங்ரிலா ஹோட்டலில் நடைபெறவு ள்ளது.

சர்வதேச வீரர்களை ஒன்றிணைத்த இலங்கையின் முன்னணி டி20 லீக் தொடரான லங்கா பிரீமியர் லீக்கில் (எல்.பி.எல்) வீரர்கள் ஏலம் விடப்படுவது இது முதல் முறையாகும்.

வீரர்களை ஏலம் எடுப்பதற்கு ஒவ்வொரு அணிக்கும் 500,000 டொலர்களை செலவிட அனுமதிக்கப்பட்டிருப்பதோடு இதன்படி ஐந்து அணிகளும் மொத்தமாக 2.5 மில்லியன் டொலர்களை செலவிடும்.

ஏற்கனவே இந்த ஐந்து அணிகளும் தலா நான்கு வீரர்களை நேரடி ஒப்பந்தம் செய்துள்ளன. இதில் இரு சர்வதேச வீரர்கள் மற்றும் இரு உள்ளூர் வீரர்கள் அடங்குவர். எஞ்சிய வீரர்கள் வீரர் ஏலத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நேரடி ஒப்பந்தம் செய்யப்பட்ட வெளிநாட்டு வீரர்களில் டேவிட் மில்லர், பாபர் அசாம், டப்ரைஸ் ஷம்சி, நசீம் ஷா, மத்தியு வேட் மற்றும் ஷகிப் அல் ஹசன் ஆகிய முன்னணி வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.

இதில் தம்மை வாங்குவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது என்று நம்பும் தமது அடிப்படை விலையை தீர்மானிக்க உள்ளூர் மற்றும் சர்வதேச வீரர்களுக்கு முடியுமாக உள்ளது.

எனினும் மூன்று வகை கிரிக்கெட்டில் ஒன்றிலேனும் சர்வதேச அனுபவம் இல்லாத வீரர்களின் அடிப்படை விலை உள்ளூர் கிரிக்கெட்டில் அவர்களின் அனுபவத்தை பொறுத்து 5,000 தொடக்கம் 20,000 டொலர்கள் வரை நிர்ணயிக்க முடியும்.

வீரர்கள் ஏலத்தில் அணி ஒன்றுக்கு நான்கு வெளிநாட்டு வீரர்கள் வரை வாங்க அனுமதி உள்ளது. இதன்மூலம் அணி ஒன்றில் அதிகபட்சம் ஆறு வெளிநாட்டு வீரர்களுக்கு அனுமதி உள்ளது. குழாத்தில் எஞ்சிய இடங்கள் உள்ளூர் வீரர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. ஓர் அணியில் அதிகபட்சம் 24 வீரர்களுக்கு இடம் உள்ளது.

லங்கா பிரீமியர் லீக் தொடர் எதிர்வரும் ஜூலை 30 தொடக்கம் ஓகஸ்ட் 20 வரை இடம்பெறவுள்ளது.


Add new comment

Or log in with...