தலிபான்களின் தடையையும் மீறி சாதனை படைத்த ஆப்கான் பெண்!

ஆப்கானிஸ்தானில் பெண்களின் கல்விக்கு தலிபான்கள் தடை விதித்திருந்த போதிலும் ஒன்லைன் மூலம் சென்னை ஐஐடியில் எம்.டெக் படித்து முடித்துள்ளார் பெஹிஸ்டா என்ற பெண்.

ஆப்கானிஸ்தானில் கடந்த 2021-ம் ஆண்டு அந்நாடு முழுவதையும் தலிபான்கள் கைப்பற்றினர். அப்போது முதல் பெண்களுக்கான அனைத்து சுதந்திரங்களும் பறிக்கப்பட்டுள்ளன. கல்வி, வெளியில் செல்வது, வேலை போன்ற எதிலும் பெண்கள் ஈடுபடக்கூடாது என்று பெண்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. ஆனால் அத்தனை தடைகளையும் மீறி ஆப்கானிஸ்தானை சேர்ந்த ஒரு பெண் ஐஐடி மெட்ராஸில் தன் எம்.டெக் படிப்பை முடித்துள்ளார்.

தெற்கு ஆப்கானிஸ்தானை சேர்ந்தவர் 26 வயதான பெஹிஸ்டா. இவர் 2021-ம் ஆண்டுக்கு முன்பு, தன் எம்.டெக் கெமிக்கல் என்ஜினீயரிங் படிப்பை மெட்ராஸ் ஐஐடி-யில் தொடர விரும்பி அந்தக் கல்லூரியில் சேர விண்ணப்பித்துள்ளார். அங்கு நுழைவுத் தேர்வில் தேர்ச்சியடைந்த அந்த மாணவிக்கு கல்லூரியில் சேர ஆசனம் கிடைத்துள்ளதாக மின்னஞ்சல் வந்துள்ளது. அந்த நேரத்தில் தலிபான்களால் வீட்டிலேயே சிறைவைக்கப்பட்ட பெஹிஸ்டா, தன் நிலையை விபரித்து ஐஐடி நிர்வாகத்துக்கு பதில் மின்னஞ்சல் அனுப்பியுள்ளார்.

அவரின் நிலை அறிந்து ஐஐடி மெட்ராஸ் நிறுவனம் மற்றும் பேராசிரியர் ரகு ஆகியோர் அந்தப் பெண்ணுக்கு உதவி செய்ய முன் வந்துள்ளனர். இந்த வாய்ப்பை கச்சிதமாகப் பயன்படுத்திக் கொண்ட பெஹிஸ்டா, யாருக்கும் தெரியாமல் தன் வீட்டில் WI-FI இணைப்பு எடுத்து இணையம் மூலமாகவே தன் இரண்டு வருடப் படிப்பை முடித்துள்ளார். அதேபோல் அனைத்து செமஸ்டர்களையும் ஒன்லைனில் எழுதியுள்ளார். தற்போது ஐஐடி மெட்ராஸில் படித்து தேர்ச்சி பெற்ற மாணவர்களில் பெஹிஸ்டாவும் ஒருவராக சாதனை படைத்துள்ளார்.

“பேராசிரியர் ரகு எனக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்து கொடுத்தார். இரண்டு வருடங்கள் ஒன்லைன் மூலம் எனது படிப்பு தொடர்ந்தது. முதல் இரண்டு செமஸ்டர்கள் மிகவும் சிரமப்பட்டேன். பின்னர் கடுமையாகப் படித்து மீதமுள்ள செம்ஸ்டர்களை எளிதாக முடித்தேன். நான் ஆப்கானிஸ்தானில் முடித்த பி.டெக் படிப்புடன் மெட்ராஸ் ஐஐடி படிப்பை ஒப்பிடுகையில் இங்கு நிறைய விஷயங்கள் கற்றுக்கொண்டேன் என்றுதான் சொல்ல வேண்டும். ஆப்கானிஸ்தானிலும் இது போன்ற ஒரு கல்வி முறையின் அவசியத்தை உணர்கிறேன்” என்கிறார் அப்பெண்.


Add new comment

Or log in with...