அனுதாபப் பிரேரணையில் பிரதமர் தினேஷ்
சபாநாயகராகவும் பல்வேறு அமைச்சுப் பதவிகளையும் வகித்த ஜோசப் மைக்கல் பெரேரா சுயாதீனமாகச் செயற்பட்டு, பாராளுமன்ற ஜனநாயகத்துக்கு கௌரவம் சேர்த்தவரென, பிரதமர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்தார்.
இதேவேளை, முன்னாள் சபாநாயகர் ஜோசப் மைக்கல் பெரேரா தம்மை சபாநாயகராக நியமித்த அரசாங்கத்துக்கு எதிராக தீர்மானங்களை வழங்கி, இலட்சக்கணக்கான அரசாங்க ஊழியர்களின் உரிமைகளை பாதுகாத்த பெருமைக்குரியவரென்றும், பிரதமர் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற அமரர் ஜோசப் மைக்கல் பெரேராவின் அனுதாபப் பிரேரணையில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார். பாராளுமன்றத்தில் தொடர்ந்து உரையாற்றிய பிரதமர்,
"ஜோசப் மைக்கல் பெரேராவின் நீண்டகால மக்கள் சேவைக்காக அவருக்கு நாம் எமது கௌரவத்தை தெரிவித்துக்கொள்கின்றோம்.
சிறந்த மனிதாபிமானியும் பல சிறந்த குணாம்சங்களையும் கொண்டவரான மறைந்த சபாநாயகர் ஜோசப் மைக்கல் பெரேரா, சபாநாயகராகவும் அமைச்சராகவும் எதிர்க்கட்சியின் பிரதம கொரடாவாகவும் அவர் பாராளுமன்றத்தில் அனைவருடனும் மிகவும் நட்புறவுடனும் செயற்பட்டமை சிறப்பம்சமாகும்.
சபாநாயகராக அவர் மேற்கொண்ட பல்வேறு தீர்மானங்கள் முன்னூதாரணமானவை.
1976ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெற்ற இடைத்தேர்தலை நாம் விசேடமாக குறிப்பிட வேண்டும். ஜாஎல தொகுதி இடைத்தேர்தல் நாட்டின் அரசியலில் பெரும் திருப்பத்தை ஏற்படுத்தியது.
36 வயதில் அவர் அதன்போது பெற்றுக்கொண்ட வெற்றி அடுத்து வந்த பொதுத் தேர்தலில் பாரிய மாற்றங்களை ஏற்படுத்தியது. ஒரு கிறிஸ்தவர் என்ற வகையில் அவர் அளப்பரிய சேவைகளை செய்துள்ளதுடன், சமூகத்துடன் இணைந்து அவர் மேற்கொண்ட சேவைகள் அவரது வெற்றிகளுக்கு அடித்தளமாகின. விளையாட்டுத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் அவர் மிகுந்த கவனம் செலுத்தி வந்துள்ளார்.
பாராளுமன்ற சபாநாயகராக மிகவும் சுயாதீனமாக அவர் செயற்பட்டார். அதற்கான பல சம்பவங்களைக் கூற முடியும்.
சிறு கட்சிகளுக்கும் பாராளுமன்றத் தெரிவுக்குழுக்கள் மற்றும் உரையாற்றுவதற்கான சந்தர்ப்பங்களை பெற்றுக்கொடுத்ததில் அவருக்கு முக்கிய பங்கு உண்டு. எதிர்க்கட்சிகளுக்கும் சுயாதீனமான சிறப்புரிமைகளை வழங்கி பாராளுமன்ற ஜனநாயகத்துக்கு அவர் மேலும் சிறப்புகளைச் சேர்த்தார். தொழில் அமைச்சராகவும் பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சராகவும் கடற்றொழில் அமைச்சராகவும் பல்வேறு பதவிகளை அவர் வகுத்துள்ளார். அந்தந்தத் துறைகளில் ஏற்பட்ட நெருக்கடிகளின் போது, அவற்றின் தீர்வுகளுக்காக அவர் சிறந்த வழிகளைத் தேர்ந்தெடுத்தார்.
கூட்டுறவுத் துறையை மேம்படுத்துவதற்கு அவர் முன்னெடுத்த நடவடிக்கைகள் சிறப்பானவை" எனத் தெரிவித்தார்.
லோரன்ஸ் செல்வநாயகம்
Add new comment