கிளிநொச்சியில் கணிசமானளவு காணிகளை விடுவிக்க தீர்மானம்

அமைச்சர் டக்ளஸின் தொடர் முயற்சிக்கு பலன்

கிளிநொச்சி மாவட்டத்தில் வனவளப் பாதுகாப்புத் திணைக்களம் மற்றும் வனஜீவராசிகள் திணைக்களம் ஆகியவற்றினால் பாதுகாக்கப்பட வேண்டிய பிரதேசங்களாக அடையாளப்படுத்தப்பட்டிருந்த கணிசமான காணிகளையும் நீர்ப்பாசனம் மற்றும் நீர்வேளாண்மைக்கு பொருத்தமான குளங்களையும் விடுவிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கடந்த காலங்களில் யுத்தம் காரணமாக மக்கள் இடம்பெயர்ந்து வாழ்ந்தமையினால் காடுகளாக மாறியிருந்த ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்களும் மக்கள் குடியிருப்புகளும் வனவளப் பாதுகாப்புத் திணைக்களத்தினாலும் வனஜீவராசிகள் திணைக்களத்தினாலும் பாதுகாக்கப்பட வேண்டிய பிரதேசங்களாக அடையாளப்படுத்தப்பட்டு வருகின்றன.

இது தொடர்பாக துறைசார் அமைச்சர்கள் மற்றும் ஜனாதிபதி ஆகியோரின் கவனத்துக்கு கொண்டு சென்ற அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, சம்மந்தப்பட்ட அதிகாரிகளுடனும் ஆவண ரீதியான ஆதாரங்களை முன்வைத்து தொடர்ச்சியான கலந்துரையாடல்களை முன்னெடுத்து வந்ததுடன், நாட்டின் பொருளாதாரத்துக்கு கைகொடுக்கக்கூடிய விவசாயம் மற்றும் நீர்வேளாண்மை செயற்பாடுகள் முடக்கப்பட்டிருக்கின்றதென்ற ஆதங்கத்தையும் வெளிப்படுத்தி வந்தார். இந்நிலையில், வனவளப் பாதுகாப்புத் திணைக்களம் மற்றும் வனஜீவராசிகள் திணைக்களம் ஆகியவற்றின் நிறைவேற்று அதிகாரிகளுக்கும் கிளிநொச்சி மாவட்ட துறைசார் அதிகாரிகளுக்குமிடையில் நேற்று முன்தினம் (25) கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் விசேட கலந்துரையாடல் நடைபெற்றது. இதன்போது, 1985ஆம் ஆண்டுக்கு முன்னர் விவசாய நிலங்களாகவும் மக்கள் குடியிருப்புகளாகவும் இருந்தமையை உறுதிப்படுத்தக்கூடிய ஆவணங்களைக் கொண்ட காணிகளையும் கணிசமானளவு குளங்களையும் விடுவிப்பதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

 

 


Add new comment

Or log in with...