நாட்டில் இப்போதெல்லாம் தேர்தல் பற்றியோ அல்லது அரசியல் தொடர்பாகவோ அலட்டிக் கொள்கின்ற மக்கள் மிகவும் குறைவென்றே கூற வேண்டியுள்ளது. அரசியல்வாதிகள் மாத்திரமே அவை பற்றி பேசிக் கொள்கின்றார்கள். அவர்களிலும் எதிரணியைச் சேர்ந்த அரசியல்வாதிகளே தேர்தல் அவசியமென்றும், ஆட்சியை மாற்ற வேண்டுமென்றும் கூறுகின்றார்கள். ஆனால் மக்களோ அதுபற்றிப் பேசுவதில்லை.
மக்கள் மத்தியில் அரசியல் மீதான ஆர்வம் மிகவும் குன்றிப் போயுள்ளதற்கான காரணத்தைத் தேடுவது கடினமான காரியமல்ல. மக்கள் மத்தியில் தேர்தல் மீதான ஆர்வம் உண்மையிலேயே இப்போது கிடையாது. வாழ்க்கைச் சுமையும் பொருளாதார நெருக்கடியும் மிக வேகமாகக் குறைந்து கொண்டு வருவதனால், தேர்தல் பற்றிப் பேசுவதற்கான அவசியம் தற்போது கிடையாதென்பதே மக்கள் மத்தியிலுள்ள அபிப்பிராயமாக இருக்கின்றது.
நாட்டில் கடந்த ஆண்டில் பொருளாதார நெருக்கடி நிலவிய காலப்பகுதியை மக்களெல்லாம் இலகுவில் மறந்துவிட முடியாது. அவ்வாறான பொருளாதார நெருக்கடியொன்றை எமது நாடு முன்னெப்போதுமே சந்தித்திருக்கவில்லை. எமது மக்களுக்கு அது புதியதொரு அனுபவமாகவே இருந்தது. மக்கள் அனுபவித்த இன்னல்கள் கொஞ்சநஞ்சமல்ல.
சமையலுக்கான எரிவாயுவையும் மண்ணெண்ணெயையும் பெற்றுக் கொள்வதற்காக இரவுபகலாக நாட்கணக்கில் மக்கள் தெருக்களில் நீண்ட கியூவரிசையில் காத்துக் கிடக்க வேண்டியிருந்தது. அவ்வாறு இரவுபகலாக கியூவரிசையில் காத்துக் கிடந்த மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்ல வேண்டியுமிருந்தது. எரிவாயு அல்லது மண்ணெண்ணெய் கிடைக்காத காரணத்தினால் வீடுகளில் சமையல் செய்ய முடியாத நாட்களும் இருந்தன.
அதேபோன்றுதான் பெற்றோலுக்கும் டீசலுக்கும் மக்கள் திண்டாட வேண்டியிருந்தது. வாகன உரிமையாளர்கள் தங்களது வாகனத்துக்கான நான்கு லீற்றர் பெற்றோலைப் பெற்றுக் கொள்வதற்காக காலை முதல் மறுநாள் காலை வரை எரிபொருள் நிரப்பு நிலையங்களில் காத்துக் கிடந்தனர். அவ்வாறு காத்துக் கிடந்தும் கூட இறுதிநேரத்தில் பெற்றோல் கிடைக்காமல் ஏமாற்றத்துடன் திரும்பியவர்கள் அநேகம்.
எரிபொருள் பற்றாக்குறை காரணமாக தூர இடங்களுக்கான வாகனப் போக்குவரத்துகளும் முடங்கிக் கிடந்த நாட்கள் ஏராளம். அவசர நோயாளர்களை உரிய நேரத்துக்கு வைத்தியசாலைக்குக் கொண்டு செல்ல முடியாத காரணத்தினால் நோயாளர்கள் ஒருசிலர் பரிதாபமாக உயிரிழக்க வேண்டிய சந்தர்ப்பங்களும் நிகழ்ந்துள்ளன.
இவ்வாறான பரிதாபங்களெல்லாம் தற்போது கிடையாது. எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நீண்ட கியூவரிசையெல்லாம் இப்போது இல்லை. தற்போது எரிபொருளுக்காக வழங்கப்பட்டுள்ள கோட்டா தங்களுக்கு ஓரளவுக்குப் போதுமானதென்று வாகன உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர். கியூஆர் கோட்டாவுக்குக் கிடைக்கின்ற பெற்றோல் மூலம் தங்களால் சமாளிக்க முடிவதாக மோட்டார் சைக்கிள் உரிமையாளர்கள் கூறுகின்றனர். எனவே வாகன உரிமையாளர்கள் தற்போது நிம்மதிப் பெருமூச்சு விடுகின்றனர்.
சமையல் எரிவாயு விடயமும் அவ்வாறானதுதான். சமையல் எரிவாயு தற்போது எங்கும் தாராளமாகவே கிடைக்கின்றது. அதன் விலையும் குறிப்பிடத்தக்களவு குறைந்திருக்கின்றது. எரிவாயுவுக்கான கியூவரிசையென்பதை நாட்டில் காண முடியாதிருக்கின்றது.
பால்மாவின் விலை அதிகரித்துள்ளதென்பது உண்மைதான். ஆனால் பால்மாவுக்கு தற்போது எங்குமே தட்டுப்பாடு கிடையாது. கடைகளில் பால்மா தாராளமாகவே கிடைக்கின்றது. அதேவேளை பால்மாவின் விலையைக் குறைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவ்வாறு பால்மாவின் விலை குறைவடையுமானால் மக்களுக்கு ஓரளவு நிம்மதியாகவிருக்குமென்பது உண்மை.
ஒட்டுமொத்தத்தில் பார்க்கையில், மக்கள் பொருளாதார நெருக்கடி காரணமாக கடந்த ஒன்றரை வருட காலமாக அனுபவித்து வந்துள்ள துன்பங்கள் படிப்படியாகக் குறைவடைந்து கொண்டு வருகின்றன என்பதே யதார்த்தமாகும். நாட்டின் பொருளாதார நெருக்கடியானது மேலும் குறைவடைந்து கொண்டு செல்லுமானால் மக்கள் விரைவில் நிம்மதியடைவரென்று எதிர்பார்க்க முடியும்.
நாட்டின் பொருளாதார நெருக்கடி இத்தனை தூரம் சீரடைந்து கொண்டு வருவதற்குக் காரணமானவர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆவார். அவர் பாராளுமன்றத்தின் பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவுடன் ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னரே பொருளாதார நெருக்கடியானது வேகமாகக் குறைவடைந்து மக்கள் நிம்மதிப் பெருமூச்சு விடத் தொடங்கினரென்பது தெரிந்த விடயமாகும். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் நீண்டகால அரசியல் அனுபவம், ஆற்றல் மற்றும் ஆளுமை காரணமாகவே நாட்டில் நெருக்கடி நிலைமை தணிவடைந்தது என்பதே உண்மை.
இவ்வாறான நிலைமையில் தேர்தல் பற்றியோ, எதிர்ப்பு அரசியல் தொடர்பாகவோ மக்கள் அக்கறை கொள்வதில்லை. நாட்டில் அத்தனை நெருக்கடிகளும் நீங்கி சகஜநிலைமை ஏற்பட வேண்டுமென்பது மட்டுமே மக்களின் விருப்பமாகும்.
Add new comment