வானுயர்ந்த கட்டடங்களின் அழுத்தம் காரணமாக, அமெரிக்காவின் நியூயோர்க் நகரம் மூழ்கி வருவதாக ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன.
‘எர்த்ஸ் ப்யூச்சர்’ என்ற இதழில் இதுகுறித்த ஆய்வு தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன. நியூயோர்க் நகரில் உள்ள ஐந்து முக்கிய பகுதிகளில் சராசரியாக 10 இலட்சத்திற்கும் மேற்பட்ட கட்டடங்கள் உள்ளன.
அவை, தோராயமாக 1.7 ட்ரில்லியன் பவுண்டகள் எடையிலான (140 மில்லியன் யானைகளின் எடைக்கு சமம்) அழுத்தத்தை பூமிக்குக் கொடுக்கின்றன. இவற்றின் காரணமாக ஆண்டுக்கு 1 முதல் 2 மில்லிமீற்றர் அளவு நியூயோர்க் நகரம் மூழ்கிவருவதாக கூறப்படுகிறது.
செயற்கைக்கோள் தரவுகள் மூலம் இந்த ஆய்வு முடிவுகள் தெரிவிக்கப்பட்டு உள்ளன. புவி வெப்பமயமாதல் காரணமாக கடல் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருவதால், நியூயோர்க் நகரத்திற்கு வெள்ள அபாயம் அதிகரித்து உள்ளதாகவும் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 1950 முதல் நியூயோர்க் நகரத்தை சுற்றியுள்ள நீர் சுமார் 9 அங்குலம் உயர்ந்துள்ளது. உயரும் நீர் மட்டம் நகரின் 8.4 மில்லியன் மக்களுக்கு அச்சுறுத்தலாக உள்ளது.
கடலோர வெள்ள அபாயத்தை எதிர்கொள்வதில் உலகளவில் நியூயோர்க் நகரம், 3ஆவது இடத்தில் இருக்கும் நிலையில், அட்லாண்டிக் பெருங்கடலில் இருக்கும் மற்ற பகுதிகளை காட்டிலும் 3 முதல் 4 மடங்கு கடல் மட்ட உயர்வு பிரச்சினையை அதிகம் சந்தித்து வருகிறது.
Add new comment