ரஷ்யா மீது மேலும் ஊடுருவி தாக்க துணைப் படை குழுவினர் எச்சரிக்கை

உக்ரைனில் இருந்து ரஷ்யாவுக்குள் ஊடுருவி தாக்குதல் நடத்திய ரஷ்ய துணை இராணுவக் குழு, மேலும் அவ்வாறான தாக்குதல்களை நடத்தப்போவதாக குறிப்பிட்டுள்ளது.

“ரஷ்யாவுக்குள் எம்மை மீண்டும் உங்களால் காண முடியும் என்று நான் நினைக்கிறேன்” என்று ரஷ்ய தன்னார்வப் படைத் தலைவர் டெனிஸ் கபுஸ்டின் தெரிவித்துள்ளார்.

இந்த ஊடுருவலை முறியடித்ததாகக் குறிப்பிட்டிருக்கும் ரஷ்யா, 70க்கும் அகதிமான நாசகாரர்களை கொன்றதாகவும் கூறியது. எதிர்காலத்தில் இடம்பெறும் இவ்வாறான ஊடுருவல்களுக்கு கடும் பதில் அளிக்கப்படும் என்று ரஷ்ய பாதுகாப்பு அமைச்சர் செர்கி சொய்கு எச்சரித்தார்.

இந்தத் தாக்குதலுடன் தமக்கு தொடர்பு இல்லை என்று உக்ரைன் மறுத்துள்ளது. ரஷ்ய தேசியவாதி ஒருவராக அறியப்படும் டெனிஸ் கபுஸ்டின், ஒற்றை இன ரஷ்ய நாடு ஒன்றை உருவாக்க விரும்புவதாக கூறி வருகிறார். ரஷ்யாவின் பெல்கொரோட் பிராந்தியத்தின் மீது கடந்த திங்கட்கிழமை (22) நடத்தப்பட்ட தாக்குதலுக்கு ரஷ்ய சுதந்திரப் படையணியுடன் ரஷ்ய தன்னார்வப் படை உரிமை கோரியது.

ரஷ்ய எல்லைக்கு அருகில் உக்ரைன் பக்கமாக இருந்து செய்தியாளர்களிடம் கடந்த புதன்கிழமை (24) பேசிய கபுஸ்டின், “(தாக்குதல்) முடிவுகள் பற்றி நாம் திருப்தி அடைகிறோம்” என்றார்.

தமது குழுவினரால் சில அயுதங்களை கைப்பற்ற முடிந்ததாகவும் சிலரை கைதிகளாக பிடிக்க முடிந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் இந்த குழுவினரை உக்ரைனிய இராணுவத்தினர் என்று ரஷ்யா குறிப்பிட்டபோதும் உக்ரைன் அதனை மறுத்துள்ளது.


Add new comment

Or log in with...