IPL இறுதிக்கு முன்னேற மும்பை - குஜராத் பலப்பரீட்சை

சென்னை சுப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான இந்திய பிரீமியர் லீக் இறுதிப் போட்டிக்கு முன்னேறும் அணியை தீர்மானிக்கும் இரண்டாவது தகுதிநிலை போட்டியில் இன்று (26) நடப்புச் சம்பியன் குஜராத் டைடன்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதவுள்ளன. இந்தப் போட்டி அஹமதாபாத்தில் நடைபெறவுள்ளது.

ஏற்கனவே சென்னையிடம் முதல் தகுதிநிலை போட்டியில் தோல்வியை சந்தித்த நிலையிலேயே இறுதிப் போட்டிக்கு முன்னேறும் இரண்டாவது வாய்ப்புக்காக குஜராத் இன்று களமிறங்குகிறது.

இந்நிலையில் சென்னையில் கடந்த புதன்கிழமை நடைபெற்ற பிளே ஓப் போட்டியில் லக்னோ சுப்பர் ஜயன்ட்ஸ் அணியை 81 ஓட்டங்களால் இலகுவாக வீழ்த்தியே மும்பை இந்தியன்ஸ் இரண்டாவது தகுதிநிலை போட்டிக்கு தெரிவானது.

லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய மும்பை அணி 20 ஓவர்களுக்கும் 8 விக்கெட்டுகளை இழந்து 182 ஓட்டங்களை பெற்றது. கெமரூன் கிரீன் அதிகபட்சமாக 23 பந்துகளில் 41 ஓட்டங்களை பெற்றார். சூரியகுமார் யாதவ் 20 பந்துகளில் 33 ஓட்டங்களை விளாசினார்.

பதிலெடுத்தாடிய லக்னோ 101 ஓட்டங்களுக்கே சுருண்டது. மார்கஸ் ஸ்டொயினிஸ் 40 ஓட்டங்களை பெற்றபோதும் அந்த அணியின் ஏழு வீரர்கள் ஒற்றை இலக்கங்களுடனேயே வெளியேறினர்.

அபாரமாக பந்துவீசிய ஆகாஷ் மத்வால் 3.3 ஓவர்களில் 5 ஓட்டங்களை மாத்திரம் விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன்மூலம் அவர் போட்டியின் ஆட்ட நாயகன் விருதையும் வென்றார்.

ஐ.பி.எல் இறுதிப் போட்டி வரும் ஞாயிற்றுக்கிழமை (28) அஹமதாபாத்தல் நடைபெறவுள்ளது.


Add new comment

Or log in with...