தொழிலதிபர் தினேஷ் ஷாப்டரின் மர்ம மரணம்; நீதிமன்ற உத்தரவுக்கமைய சடலம் தோண்டி எடுப்பு

காலி, கராப்பிட்டியில் இன்று 02ஆவது பிரேத பரிசோதனை

பொரளை பொது மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டிருந்த தொழிலதிபர் தினேஷ் ஷாப்டரின் சடலம், கொழும்பு மேலதிக மஜிஸ்திரேட் ரஜிந்திரா ஜயசூரியவின் மேற்பார்வையில் ஐவர் அடங்கிய வைத்தியக் குழு மற்றும் குடும்ப உறவினர்கள் முன்னிலையில் நேற்று (25) மீண்டும் நேற்று தோண்டி எடுக்கப்பட்டது.

தோண்டியெடுக்கப்பட்ட சடலம் இரண்டாவது பிரேத பரிசோதனைக்காக காலி, கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையின் பிரேத அறைக்கு பொலிஸ் பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டது.

நீதிமன்றம் வழங்கிய உத்தரவுக்கமைய கொழும்பு பல்கலைக்கழக சட்ட வைத்திய நிபுணர், பேராசிரியர் அசேல மென்டிஸ் தலைமையிலான ஐந்து விசேட வைத்திய நிபுணர்கள் குழு, கொழும்பு சட்ட வைத்திய அலுவலக வைத்தியர்கள் மற்றும் அதிகாரிகள், பொரளை SOCO பொலிஸ் அதிகாரிகள், ஷாப்டரின் தந்தை, சகோதரர்கள் மற்றும் மைத்துனர், குற்றப்புலனாய்வுத் திணைக்கள விசாரணைக் குழு, அடக்கம் செய்யப்பட்ட இடத்தை அடையாளம் காண்பதற்காக மலர்ச்சாலை தொழிலாளர்கள் ஐவர், மரணமடைந்தவரின் தரப்பை பிரதிநிதித்துவப்படுத்தி ஜனாதிபதி சட்டத்தரணி அனுஜ பிரேமரத்ன மற்றும் சட்டத்தரணிகள் குழு பொரளை பொது மயானத்துக்கு வருகை தந்திருந்தனர்.

நேற்றுக் காலை 8 .45 மணியளவில் சடலத்தை அடக்கம் செய்த இடத்தை அறிந்து, குறிப்பிட்ட இடம் அடையாளப்படுத்தப்பட்டு, மலர்ச்சாலை ஊழியர்களால் சடலம் கவனமாக தோண்டியெடுக்கப்பட்டது. பின்னர் மஜிஸ்திரேட் மற்றும் வைத்தியர்கள் குழு முன்னிலையில் பெட்டியின் முத்திரை அகற்றப்பட்டு ஷாப்டரின் உறவினர்கள் மூலம் அவரது சடலம் தானா என்பது உறுதிப்படுத்தப்பட்டது.

அதன் பின்னர் மீண்டும் முத்திரை இடப்பட்டு மலர்ச்சாலை வாகனத்தில் வைக்கப்பட்டது. பின்னர் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தால் உறவினர்கள் மற்றும் குறிப்பிட்ட தரப்பினரிடம் வாக்குமூலம் பெறப்பட்டு, பலத்த பொலிஸ் பாதுகாப்புடன் பொரளை கனத்தை மயானத்திலிருந்து காலி, கராப்பிட்டிய வைத்தியசாலைக்கு சடலம் கொண்டு செல்லப்பட்டது. ஷாப்டரின் சடலத்தை தோண்டி எடுப்பதை இரகசியமாக மேற்கொள்ள வேண்டுமென குடும்ப உறவினர்கள் நீதிமன்றத்தில் வேண்டுகோள் விடுத்திருந்த போதிலும், நீதிமன்றம் அதனை நிராகரித்திருந்தது. அவ்வேளையில், ஊடகவியலாளர்களுக்கும் பொரளை மயானத்துக்குள் நுழைவதற்கு பொலிஸார் அனுமதி அளிக்கவில்லை. சடலத்தை தோண்டியெடுக்கும் ஆரம்ப நடவடிக்கைகள் நிறைவடைந்த பின், சடலம் வண்டியில் வைக்கப்பட்ட பின்னரே ஊடகவியலாளர்களுக்கு அனுமதி கிடைத்தது.

மீண்டும் தோண்டி எடுக்கப்பட்ட ஷாப்டரின் சடலம் தொடர்பான இரண்டாவது பிரேத பரிசோதனை கராப்பிடிய வைத்தியசாலையில் இன்று (26) நடைபெறவுள்ளது. தினேஷ் ஷாப்டரின் மரணம் தற்கொலையா அல்லது கொலையா என்பது தொடர்பில் விசாரணை மேற்கொள்ளும் ஐந்து நபர்கள் அடங்கிய விசேட வைத்திய நிபுணர்கள் குழு இதுவரை மேற்கொண்ட விசாரணை தொடர்பாக பெற்றுக்கொள்ளப்பட்ட சாட்சியங்களின் பேரில் சடலத்தை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை மேற்கொள்ள பரிந்துரை செய்திருந்தது.

இந்த ஐவர் அடங்கிய வைத்தியர்கள் குழுவின் தலைவராக கொழும்பு பல்கலைக்கழக சட்ட வைத்திய விசேட நிபுணர், பேராசிரியர் அசேல மென்டிஸ், ருஹுனு பல்கலைக்கழக பேராசிரியர் டி.சி.ஆர்.பெரேரா, பேராதனைப் பல்கலைக்கழக சட்ட வைத்திய நிபுணர் பேராசிரியர் டி.பெர்ணாந்து, பேராதனை வைத்தியசாலை சிரேஷ்ட நீதிமன்ற வைத்திய அதிகாரி எஸ்.சிவசுப்பிரமணியம் மற்றும் காலி, கராப்பிட்டிய வைத்தியசாலை சிரேஷ்ட நீதிமன்ற வைத்திய அதிகாரி ஜீ.ஆர். ருவன்புர ஆகியோர் அங்கத்தவர்கள் ஆவார்கள்.


Add new comment

Or log in with...