வங்கி கடன்களில் எவருக்கும் சலுகை வழங்க அரசு தீர்மானிக்கவில்லை

தெரிவிக்கப்படும் கூற்று பொய்த் தகவல்

வங்கிக் கடன்களில் அரசாங்கமானது தமது நண்பர்கள் 10 பேருக்கு சலுகைகளை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படும் கூற்றை முற்றாக நிராகரிப்பதாகவும் அவ்வாறான எந்த தீர்மானமும் மத்திய வங்கியினாலோ, அரச வங்கிகளினாலோ மேற்கொள்ளப்படவில்லை என்று, பதில் நிதியமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்தார்.

இது ஒரு பாரதூரமான கூற்று என்பதால்

அது தொடர்பில் ஆராய்வதற்காக தாம் திறைசேரியின் செயலாளர் மற்றும் அனைத்து அரச வங்கிகளுடனும் தொடர்பு கொண்டு வினவியதாக குறிப்பிட்ட அமைச்சர், எந்த வங்கிகளும் அவ்வாறான தீர்மானங்களை மேற்கொள்ளவில்லை என்றும் உறுதியாகத் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற நிதி ஒழுங்குபடுத்தல் கட்டளைகள் மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். நாட்டு மக்கள் மற்றும் வங்கி வாடிக்கையாளர்கள், நெருக்கடிகளை எதிர்நோக்கியுள்ள இவ்வாறான சந்தர்ப்பத்தில் இத்தகைய கூற்று மிகவும் பாரதூரமானது என குறிப்பிட்ட அவர், நாடு முக்கியமான காலகட்டத்தில் பயணித்துக்கொண்டிருக்கும் நிலையில் நான் அது தொடர்பில் பிரதான வங்கிகள் இரண்டிடமிருந்து அறிக்கைகளையும் பெற்றுக்கொண்டுள்ளேன் என்றும் தெரிவித்தார். தேசிய பத்திரிகைகளில், பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம் தெரிவித்ததாக செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன. அந்த செய்தியில் அரசாங்கமானது தனது நண்பர்களின் வங்கிக் கடனை இல்லாதொழிக்க நடவடிக்கை எடுக்கப் போவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இது மிக மோசமான ஓர் அறிவிப்பாகும். வட்டி அதிகரிப்பு, வருமானம் குறைவடைந்துள்ளமை தொடர்பில் பலரும் பாதிப்புற்ற நிலையிலுள்ள இந்தச் சந்தர்ப்பத்தில் நண்பர்கள் 10 பேருக்கு விசேட சலுகை வழங்கப் போவதாக வெல்கம குறிப்பிட்டுள்ளார். இது முற்றிலும் தவறான கூற்றாகும் என்றும், அவர் தெரிவித்தார்

லோரன்ஸ் செல்வநாயகம்


Add new comment

Or log in with...