மனிதனைப் பிரமிக்கச்செய்யும் அல்லாஹ்வின் படைப்பாற்றல்

அல்லாஹ் சர்வ வல்லமை படைத்தவன். உலகம் உள்ளிட்ட முழுப் பிரப ஞ்சத்தையும் மனிதன் உள்ளிட்ட அனைத்து படைப்புக்களையும் படைத்து பரிபாலித்து நிர்வகித்து வருபவன் அவன். இந்த மாபெரும் பிரபஞ்சத்தில் மனிதன் ஒரு அங்கம் தான்.

என்றாலும் இப்பிரபஞ்சத்தினதும் மனிதன் உள்ளிட்ட எல்லா படைப்புக ளதும் அனைத்து விவகாரங்களும் அவன் வசமே உள்ளது.

அதனை 'அவனே வானங்களையும் பூமியையும் அவற்றுக்கு மத்தியிலுள்ளவற்றையும் படைத்து வளர்ப்பவன்' (37:05) என்ற அல் குர்ஆன் வசனம் எடுத்தியம்புகிறது. அவனது ஆற்றல்களையும் சக்தியையும் தெளிவுபடுத்த இந்த ஒரு வசனமே போதுமானது. அதனால் அல்லாஹ்வின் நிர்வகிப்பும் கண்காணிப்பும் இன்றி முழு பிரபஞ்சத்திலும் எந்தப் படைப்பும் கிடையாது என்பதோடல்லாமல் அவனது நிர்வகிப்பிலும் கணிகாணிப்பிலும் இருந்து தூரமானதாகவும் விடுபட்டதாகவும் படைப்புக்கள் எதுவுமில்லை.

இதனை அல் குர்ஆனின், 'நிச்சயமாக பூமியிலோ வானத்திலோ (உள்ள) எதுவும் அல்லாஹ்வுக்கு மறைவானதன்று' (03:05) என்ற வசனம் உறுதிப்படுத்திக் கொண்டிருக்கின்றது.

அதேநேரம், 'மறைவானவற்றின் சாவிகள் அவனிடமே இருக்கின்றன. அவற்(றில் உள்ளவற்)றை அவனையன்றி வேறு எவரும் அறிய மாட்டார். நிலத்திலும் நீரிலும் உள்ளவைகளையும் அவன் நன்கறிவான். அவன் அறியாமல் யாதொரு இலையும் உதிர்வதில்லை. பூமியின் (ஆழத்தில்) அடர்ந்த இருளில் (புதைந்து) கிடக்கும் (கடுகு போன்ற சிறிய) வித்தும் பசுமையானதும் உலர்ந்ததும் அவனுடைய தெளிவான (பதிவுப்) புத்தகத்தில் இல்லாமலில்லை' (06:59) என்றும் அல் குர்ஆன் குறிப்பிட்டிருக்கிறது.

இவ்வசனங்கள் ஒவ்வொரு மனிதனுக்கும் மாபெரும் செய்தியை வழங்கிக் கொண்டிருக்கின்றன. அவை சாதாரணமான செய்திகள் அல்ல. அந்த செய்திகளின் ஆழ அகலத்தைப் புரிந்து கொள்ள வேண்டிய பொறுப்பு மனிதனுக்குரியதாகும். அதற்கு அல் குர்ஆனே சாட்சியமாக உள்ளது.

பூமி, வானங்கள் உள்ளிட்ட முழு பிரபஞ்சத்திலும் பல்வேறு விதமான படைப்புகள் காணப்படுகின்றன. அவற்றில் சிறியவை, பெரியவை, நடுத்தரமானவை, கண்களுக்கு புலப்படாதவை என எண்ணிறைந்தவை உள்ளன. பூமியை எடுத்துக்கொண்டாலும் கூட நிலத்திலும் நீரிலும் காற்றிலும் விண்ணிலும் என பலவிதமான படைப்புகள் காணப்படுகின்றன. அவற்றில் மனிதன் இன்னும் கண்டறிந்திராத படைப்புகளும் இருக்கவே செய்கின்றன.

ஆனால் பூமி உள்ளிட்ட முழு பிரபஞ்சத்திலும் அல்லாஹ் அறியாமலும் அவனுக்கு மறைவாகவும் எந்தவொரு படைப்பும் இல்லை. அதனை இற்றைக்கு 1400 வருடங்களுக்கு முன்பே அவன் எடுத்துக்கூறியுள்ளான். என்றாலும் பூமி உள்ளிட்ட முழு பிரபஞ்சமும் எவ்வளவு விசாலமானது. ஆழ அகலமானது. பரந்து விரிந்தது என்பதை எண்ணிப் பார்ப்பது அவசியம்.

அந்த வகையில் மனிதனின் உருவாக்கம், உற்பத்தி, வடிவமைப்பு, ஒழுங்கமைப்பு மற்றும் முழுமைப்படுத்தல் என்பன எவ்வாறு இடம்பெறுகின்றன என்பதையும் அல்லாஹ் குறிப்பிட்டிருக்கின்றான். இச்செயற்பாடு பெண்ணின் கர்ப்பையில் இடம்பெறுகின்ற போதிலும் இந்த உருவாக்கம் எவ்வாறு இடம்பெறுகிறது என்பதை மனிதன் அறிய மாட்டான். ஆனால் அல்லாஹ் அறிகிறான். அதாவது ஒரு சொட்டு இந்திரியம் கர்ப்பப்பையில் எவ்வாறு முழு மனிதனாக வடிவமைக்கப்படுகிறது என்பதை அவன் அல் குர்ஆனில் குறிப்பிட்டிருக்கின்றான்.

'மனிதனை ஒரு இந்திரியத் துளியால்' நாம் படைத்தோம் என்பதை அவன் பார்க்கவில்லையா? (37:77) என்று கேள்வி எழுப்பியுள்ளான்.

உண்மையில் ஒரு சொட்டு இந்திரியத்தைக் கொண்டு தான் ஒரு முழு மனித உருவாக்கமே இடம்பெறுகிறது. ஒன்பது மாதங்கள் நிறைவடையும் போது அந்த இந்திரியத்தின் ஊடாக ஒரு முழு வடிவம் பெற்ற குழந்தை பிறக்கிறது. அந்தப் படைப்பு அற்புதங்களும் ஆச்சரியங்களும் நிறைந்தக் காணப்படுகிறது.

ஒன்பது மாதங்களுக்கு முன்னர் ஒரு சொட்டு திரவமாகக் காணப்படும் இந்திரியத்தின் மூலம் ஒரு முழுமையான மனிதன் படைக்கப்படுகிறான் என்றால் இது எவ்வளவு பெரிய அற்புதம். அப்படைப்பின் ஒவ்வொரு உடலுறுப்பும் அவற்றின் செயற்பாடுகளும் ஆச்சரியங்களும் அற்புதங்களும் நிறைந்தவை. மனிதனைப் பிரமிக்கச் செய்யக்கூடியவை. குறிப்பாக இதயம், மூளை, சிறுநீரகம், கண்கள், நுரையீரல் எல்லாமே அல்லாஹ்வின் ஆற்றல்களை வெளிப்படுத்தி நிற்கும் மாபெரும் அற்புதங்கள். அவற்றின் இயக்கமோ ஆச்சரியத்திலும் ஆச்சரியம்.

அதேநேரம் உடலுறுப்பு ஒவ்வொன்றும் ஒரு மனிதனில் எந்தெந்த இடங்களில் அமைந்திருக்க வேண்டுமோ அந்தந்த இடங்களில் கர்ப்பப்பையில் வைத்தே உருவாகின்றன. அதுவும் அவனது ஏற்பாடே அன்றி வேறில்லை. இதனை சூரா ஆல இம்ரானில் 'அவன் தான் கர்ப்பப்பைகளில் தான் விரும்பியவாறு (ஆணாகவோ பெண்ணாகவோ) உருவம் அமைக்கின்றான்' (03:06) என்று குறிப்பிட்டிருக்கிறான். உண்மையில் அல்லாஹ்வே மனிதனை கர்ப்பப்பையில் அவனுக்கு விரும்பியபடி வடிவமைக்கிறான்.

இவ்வசனத்தின் படி, மனிதன் தான் விரும்பிய படி உருவாகவோ, தம்மை வடிவமைத்துக் கொள்ளவோ முடியாது. அது முற்றிலும் அல்லாஹ்வுக்குரிய விடயம். அவனைத் தவிர வேறு எவராலும் இவ்வாறான நுணுக்கமான திட்டமிடலுடன் மனிதன் உள்ளிட்ட எந்தப் படைப்பையும் படைக்கவே முடியாது.

அதனால் அல்லாஹ்தஆலா மனிதனின் உருவாக்கம், படைப்பு தொடர்பில் இவ்வாறு குறிப்பிட்டிருக்கிறான். 'பின்னர் அந்த இந்திரியத்தை இரத்தக்கட்டியாக்கினோம். பின்னர் அவ்விரத்தக்கட்டியை மாமிசமாகச் செய்தோம். பின்னர் அம்மாமிசப் பிண்டத்தில் இருந்து எலும்பை உற்பத்தி செய்து அவ்வெலும்புக்கு மாமிசத்தை அணிவித்தோம். பின்னர் அதனை (முழுமையான மனிதப்) படைப்பாக அமைத்தோம். படைப்பாளர்களில் எல்லாம் மிக்க அழகானவனான அந்த அல்லாஹ் மிகப் பாக்கியம் பொருந்தியவன் (23:14). இது எவ்வளவு அற்புதமான விபரிப்பு. ஒரு சொட்டு இந்திரியம் இவ்வாறு விசாலமான படைப்பாக வளர்ச்சி பெறுகிறதென்றால் அது அல்லாஹ்வின் அருளும் ஆற்றலுமே அன்றி வேறில்லை.

இவ்வாறு படைக்கப்படும் மனிதர்கள் அனைவரும் ஒரே விதமான முக அமைப்பையோ, உளப் பாங்கையோ, தன்மைகளையோ கொண்டவர்களாக இல்லை. அவர்கள் ஒவ்வொருவரும் ஆளுக்காள் தனித்தனி பண்புகளையும் இயல்புகளையும் கொண்டவர்களாகவே இருக்கின்றனர். ஆதம் (அலை) முதல் இற்றை வரையும் கோடானு கோடி மனிதர்கள் பூமியில் பிறந்து, வளர்ந்து, மடிந்துள்ளார்கள். அவர்களில் எவரும் ஒரே விதமான இயல்புகளையோ பண்புகளையோ கொண்டவர்களாக இருந்ததில்லை. அவர்கள் ஆளுக்காள் வித்தியாசமாகவே இருந்துள்ளனர். அதுவே இன்று வரையும் தொடரும் ஏற்பாடாக உள்ளது.

அதனால் மனிதனே மனிதனுக்கு மாபெரும் அத்தாட்சியாக இருந்து கொண்டிருக்கிறான். அதனால் தான் அல்லாஹ், 'உறுதி(யாக நம்பிக்கை) கொண்டவர்களுக்கு பூமியில் பல அத்தாட்சிகள் இருக்கின்றன. உங்களுக்கு உள்ளாகவும் (பல அத்தாட்சிகள் இருக்கின்றன. அவைகளை நீங்கள் ஆழ்ந்து கவனித்து பார்க்க வேண்டாமா? (51:21) என்று கேள்வி எழுப்பியுள்ளான்.

அது முற்றிலும் உண்மையானது. பூமியில் மாத்திரமல்லாமல் மனிதனுக்குள்ளும் நிறையவே அற்புதங்கள் இருக்கின்றன. அதற்கு கர்ப்பப்பையில் இடம்பெறும் மனித உருவாக்கமும் வடிவமைப்பும் நல்ல எடுத்துக்காட்டாகும். அதேநேரம் பூமி உள்ளிட்ட முழு பிரபஞ்சத்திலும் எந்தப் படைப்பை எடுத்த நோக்கினாலும் அது மாபெரும் அற்புதமாகவும் அதிசயமாகவும் இருப்பதை அவதானிக்கலாம்.

இவ்வாறு எண்ணிறைந்த படைப்புக்களை படைத்து பராமரித்து நிர்வகித்து கண்காணிப்பது என்பது இலகுவான காரியமா? சாதாரண விடயமா? அல்லாஹ்வின் ஆற்றல்களை அறிந்து கொள்வதற்கு அதுவே போதுமானது. அதனால் தான் மனிதன் அல்லாஹ்வின் படைப்புக்களை நோக்குவதற்கு ஊக்குவிக்கப்பட்டு அறிவுறுத்தப்பட்டுள்ளான். அவனது படைப்புக்களை சரியான கண்ணோட்டத்துடன் நோக்கும் மனிதன் நிச்சயம் பிரமித்துப் போவான். அல்லாஹ்வின் மாபெரும் வல்லமைக்கும் சக்திக்கும் முன்பாக அவனை மெச்சி புகழ்ந்து துதிக்கும் வகையில் வாழ்வை அமைத்துக்கொள்ள வேண்டும். அதுவே நபி (ஸல்) அவர்களின் போதனைகள், வழிகாட்டல்களின் அடிப்படையாகும்.

ஆகவே அல்லாஹ்வை துதிப்போம். புகழுவோம். அவன் நினைவில் வாழுவோம். 'நிச்சயமாக அல்லாஹ்வுடைய அடியார்களில் அவனுக்கு பயப்படுபவர்கள் எல்லாம் (அறிவுடைய) கல்விமான்கள் தாம்' (35:28).

மர்லின் மரிக்கார்...


Add new comment

Or log in with...