உட்கட்டமைப்பு அபிவிருத்தியில் சாதனை இலக்கை எட்டிய கொழும்பு துறைமுக நகரம்

கொழும்பு துறைமுக நகரமானது, அதன் உட்கட்டமைப்பு அபிவிருத்தி கட்டம் நிறைவடைவதை நெருங்கி வணிகமயமாக்கல் செயல்பாடுகளை ஆரம்பிக்கவுள்ள நிலையில், ஒரு முக்கியமான சாதனை இலக்கினைக் கொண்டாடியுள்ளது. தேசம் மற்றும் திட்டத்தின் வெற்றிக்கான ஆசீர்வாதங்களை வேண்டி நிற்கும் சர்வமத வைபவத்துடன் ஒற்றுமையின் தருணத்தை இந்த நிகழ்வு குறித்து நின்றது. கொழும்பு துறைமுக நகரத்தின் விற்பனைக் காட்சியகம் தற்போது நினைவுப் பலகையுடன் அலங்கரிக்கப்பட்டதுள்ளதுடன், இது திட்டத்தின் முன்னேற்றம் மற்றும் 'எல்லைகளை இணைத்தல், வரையற்ற சாத்தியங்கள்' என்ற தொனிப்பொருளுடன் அதன் மாற்றத்திற்கான சக்தியின் அடையாளமாகவும் அமைந்துள்ளது.

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள், மத்திய வங்கி ஆளுநர், நாணய சபை உறுப்பினர்கள், முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சின் செயலாளர், தூதுவர்கள் மற்றும் வெளிநாட்டு தூதரகங்களின் பிரதிநிதிகள் ஆகியோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு உறுப்பினர்களின் அழைப்பின் பேரில் அவர்களுடன் இணைந்து மேற்குறிப்பிட்ட பிரமுகர்கள் நிகழ்வில் கலந்து கொண்டனர்.

“கொழும்பு துறைமுக நகர விசேட பொருளாதார வலயத் திட்டம், இலங்கை அரசாங்கத்தின் மீது எந்தப் பொறுப்பும் அல்லது செலவையும் சுமத்தாமல் சுமார் 1.3 பில்லியன் அமெரிக்க டொலர்களை வெளிநாட்டு நேரடி முதலீட்டு வடிவத்தில் ஈர்த்துள்ளது. கடலிலிருந்து மீட்கப்பட்ட 269 ஹெக்டேயர் நிலம் 100% இலங்கை அரசாங்கத்திற்கு சொந்தமானது என்பதுடன், ஏற்கனவே மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு சுமார் 3 முதல் 4 பில்லியன் அமெரிக்க டொலர்கள் வரை பங்களித்துள்ளது. மேலும், 12,000 இற்கும் மேற்பட்டவர்களுக்கு நேரடி வேலைவாய்ப்புக்களை வழங்கியுள்ளதுடன், 20 க்கும் மேற்பட்ட இலங்கை துணை ஒப்பந்தக்காரர்கள் மத்தியில் 4,000 க்கும் மேற்பட்ட இலங்கைப் பணியாளர்களுக்கு பயிற்சிகளையும் வழங்கியுள்ளது” என்று கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழுவின் பிரதான செயற்பாட்டு அதிகாரியான ரேவன் விக்கிரமசூரிய தெரிவித்தார்.

கொழும்பு துறைமுக நகரத்தின் அடுத்த கட்டமான நிர்மாணப் பணி ஆரம்பிக்கப்படவுள்ளதுடன், 14 பில்லியன் அமெரிக்க டொலருக்கும் மேலான முதலீட்டை ஈர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சுமார் 4.1 பில்லியன் அமெரிக்க டொலர் உள்நாட்டில் திரட்டப்படும் தொழிலாளர்களின் உழைப்பு மற்றும் மூலப்பொருட்கள் வடிவில் கிடைக்கவுள்ளதுடன், 450,000 க்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகளை உருவாக்கும். இதில் 400,000 க்கும் மேற்பட்டோர் இலங்கையர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. கட்டுமானப் பணியிலிருந்து மட்டும் மொத்த உள்நாட்டு உற்பத்தியானது 24 பில்லியன் அமெரிக்க டொலரை எட்டுமென்று மதிப்பிடப்பட்டுள்ளது.

கொழும்பு துறைமுக நகரமானது முழுமையாகச் செயற்பட ஆரம்பித்தவுடன், இதுவரையில் நாட்டின் மிகப்பெரிய அபிவிருத்தி மற்றும் வெளிநாட்டு நேரடி முதலீடாக, இலங்கையின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வருடாந்தம் 13.8 பில்லியன் அமெரிக்க டொலரை பங்களிக்கத் தயாராக உள்ளதுடன், இது 140,000 க்கும் மேற்பட்டோருக்கு நேரடி வேலைவாய்ப்புகளை வழங்கவுள்ளது.

கொழும்பு துறைமுக நகரமானது உலகளாவிய முதலீடுகளை ஊக்குவித்தல், புத்தாக்கங்களை ஊக்குவித்தல் மற்றும் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குதல், இறுதியில் சர்வதேச அரங்கில் இலங்கையின் போட்டித்தன்மையை மேம்படுத்துதல் போன்ற இலட்சிய நோக்கங்களுடன் தொலைநோக்கு முயற்சியை பிரதிநிதித்துவப்படுத்துகிறது. சமீபத்திய நினைவுப்பலகை திரைநீக்க வைபவமானது, கொழும்பு துறைமுக நகரத்தின் பரிணாம வளர்ச்சியில் ஒரு குறிப்பிடத்தக்க திருப்புமுனையை குறிக்கிறது.


Add new comment

Or log in with...