அமைதியின்மையால் இறந்தவர்களை நினைவுகூர தூபி

- மும்மொழிகளிலும் “கொம்பனித் தெரு” நடவடிக்கை
- இவ்வார அமைச்சரவையில் 12 முடிவுகள்

இலங்கையில் ஆயுத மோதல்கள், அரசியல் அமைதியின்மைகள் அல்லது குடியியல் குழப்பங்களின் விளைவாக உயிர்நீத்தவர்களை நினைவுகூரும் நினைத் தூபி ஒன்றை அமைக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

நேற்று (22) இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்திலேயே இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

சுதந்திரத்தின் பின்னர் இலங்கை குடியியல் குழப்பங்கள், அரசியல் அமைதியின்மைகள், இன மோதல்கள் மற்றும் நீண்டகால ஆயுத மோதல்கள் போன்ற வரலாறுகளுக்கு முகங்கொடுத்துள்ளதுடன், குறித்த காலப்பகுதியில் அனைத்து இன, மத, தொழில் மற்றும் ஏனைய தனித்துவங்களைக் கொண்ட பிரஜைகள் அவ்வாறான அபாயங்களுக்கும் சொல்லொணாத் துயரங்களுக்கும் ஆளாகியுள்ளனர்.

இன ரீதியான, மத ரீதியான, அரசியல் ரீதியான கருத்தாக்கங்கள் அல்லது வேறு காரணங்களின் அடிப்படையில் எந்தவொரு வகையான மோதல்களும் மக்களின் நல்வாழ்க்கையில் மிகவும் பாதிப்புக்களை ஏற்படுத்துவதுடன், தேசத்தின் முன்னோக்கிய பயணத்திற்கு தடையாகவும் அமைகின்றமை கடந்தகால கசப்பான அனுபவங்கள் எமக்குப் பறைசாற்றுகின்றன.

எவ்வாறாயினும் மக்களின் அமைதியையும் பாதுகாப்பையும் ஆபத்துக்குள்ளாக்கி சமூக பொருளாதார கட்டமைப்புக்களை சீரழிக்கின்ற அத்தகைய சம்பவங்கள் அடிக்கடி தோன்றுகின்ற போக்குகள் தொடர்ந்த வண்ணமே இருக்கின்றன. 2018 ஆம் ஆண்டின் 34 ஆம் இலக்க இழப்புக்கான எதிரீடுகள் பற்றிய அலுவலகச் சட்டத்தின் மூலம் நினைவேந்துகை மற்றும் ஏனைய உட்கட்டமைப்பு வசதிகள் மூலம் கூட்டாக இழப்புக்களை வழங்குவது அழுத்தங்களுக்கு உள்ளாகிய நபர்களின் சமூகங்களுக்கும் குழுக்களுக்கும் ஏதுவான வகையிலான உரிமை என ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

அதற்கமைய இலங்கையில் ஆயுத மோதல்கள், அரசியல் அமைதியின்மைகள் அல்லது குடியியல் குழப்பங்களின் விளைவாக உயிர்நீத்த பொதுமக்கள், முப்படையினர் மற்றும் பொலிஸ் அலுவலர்கள் மற்றும் முன்னாள் போராளிகள் உள்ளிட்ட அனைத்து நபர்களையும் நினைவு கூறுவதற்கான நினைவகத்தை நல்லிணக்கம் மற்றும் மீளிணைப்பின் அடையாளமாக கொழும்பு நகரில் பொருத்தமன இடமொன்றில் நிர்மாணிப்பதற்காக ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

2. கொழும்பு “கொம்பனித் தெரு” கிராம உத்தியோகத்தர் பிரிவை மும்மொழிகளிலும் அவ்வாறே அறிமுகப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்தல்
கொழும்பு பிரதேச செயலகப் பிரிவில் “கொம்பனித் தெரு” கிராம உத்தியோகத்தர் பிரிவு சிங்கள மொழியில் “கொம்பனித் தெரு” எனவும் தமிழ் மொழியில் “ஸ்லேவ் ஐலண்ட்” எனவும், ஆங்கில மொழியில் “Slave Island" எனவும்  பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. குறித்த கிராம உத்தியோகத்தர் பிரிவின் பெயர் மும்மொழிகளிலும் “கொம்பனித் தெரு” என அறிமுகப்படுத்துவது மிகப் பொருத்தமானது என முன்மொழியப்பட்டுள்ளது.

அதற்கமைய 1992.12.01 ஆம் திகதிய 743/5 அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலை திருத்தம் செய்து புதிய வர்த்தமானி அறிவித்தலை வெளியிடுவதன் மூலம் “கொம்பனித் தெரு” என்பதை அவ்வாறே மும்மொழிகளிலும் வெளியிடுவதற்காக பொது நிருவாக, உள்நாட்டலுவலகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சராக கௌரவ பிரதமர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை உடன்பாடு வழங்குவதற்கு தீர்மானித்துள்ளது.

3. கப்பல் தொழிற்றுறை உள்ளிட்ட விநியோக சேவைகள் அபிவிருத்திக்கான கொள்கை சட்டகத்தை தயாரித்தல்
கப்பல் தொழிற்றுறை உள்ளிட்ட விநியோக சேவைகள் துறையில் போட்டித்தன்மையானது, எந்தவொரு நாட்டின் பொருளாதார அபிவிருத்திக்காக முக்கியமான காரணியாக அமைவதுடன், சிங்கப்பூர் மற்றும் ஹொங்கொங் போன்ற நாடுகளிலிருந்து பெற்றுக்கொண்ட அனுபவங்களைக் கருத்தில் கொள்ளும் போது, இலங்கை போன்ற தீவகப் பொருளாதாரத்திற்கு அது மிகவும் ஏற்புடையதாக அமையும்.

இலங்கையில் கப்பல் தொழிற்றுறை உள்ளிட்ட விநியோக சேவைகள் துறைக்கு ஏற்புடைய வகையில் தற்போது காணப்படுகின்ற கொள்கைகள் மற்றும் ஒழுங்குறுத்தல்கள் சட்டகம் மிகவும் பாதுகாப்பாக அமைவதுடன், அது குறித்த தொழிற்றுறை அபிவிருத்திக்கான முதலீடுகளைப் பாதுகாப்பதற்கோ அல்லது போட்டித்தன்மை/ செலவு பயனுறு வகையிலான விநியோக சேவைகளைப் பயன்படுத்துகின்றவர்களுக்கு அவ்வாறான சேவைகளை விநியோகிப்பதற்கான நேயமிகு நிலைமைகளை உருவாக்குவதற்குப் போதுமானதல்ல என்பது கண்டறியப்பட்டுள்ளது.

இந்நிலைமையைக் கருத்தில் கொண்டு விநியோக சேவைகள் தொழிற்றுறை தொடர்பான கொள்கைச் சட்டகத்தை உருவாக்க வேண்டிய தேவை 2023 ஆம் ஆண்டு வரவு செலவுத்திட்டத்தின் மூலம் முன்மொழியப்பட்டுள்ளது. அதற்கமைய, கப்பல் தொழிற்றுறை உள்ளிட்ட விநியோக சேவைகளுக்கு ஏற்புடைய வகையில் தற்போது காணப்படுகின்ற கொள்கைகள் மற்றும் கட்டளைகளை ஆராய்ந்து சர்வதேச நியமங்களுக்கு இணங்க 2023-2027 காலப்பகுதிக்கான விநியோக சேவைகள் அபிவிருத்தி வேலைத்திட்டத்தைத் தயாரிப்பதற்காக திறைசேரி செயலாளர் அவர்களின் தலைமையில், ஏனைய ஏற்புடைய நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் கூடிய கொள்கைக் குழுவொன்றை நியமிப்பதற்காக நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக ஜனாதிபதி சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

4. 2021 ஆண்டின் 11 ஆம் இலக்க கொழும்பு துறைமுக நகரப் பொருளாதார ஆணைக்குழுச் சட்டத்தின் கீழ் செயல்நுணுக்க முக்கியத்துவம் வாய்ந்த வியாபாரங்களுக்கு விலக்களிப்புக்கள் மற்றும்  ஊக்குவிப்புக்களை வழங்கல்
2021 ஆண்டின் 11 ஆம் இலக்க கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழுச் சட்டத்தின் மூலம் துறைமுக நகரம் விசேட பொருளாதார வலயமாக நிறுவப்பட்டுள்ளது.

இலங்கையை நவீனமயமாக்கல், பொருளாதார உறுதிப்பாட்டை ஏற்படுத்தல், மற்றும் சேவைகள் ஏற்றுமதியின் முன்னோடியாக எமது நாட்டை மாற்றுதல் போன்ற நோக்கங்களை அடைவதற்காக சர்வதேச ரீதியில் போட்டித்தன்மையுடன் கூடிய வர்த்தகங்களை மேற்கொள்வதற்கு இயலுமான சூழலை உருவாக்குவதற்காக கொழும்பு துறைமுக நகரத்தை மேம்படுத்த வேண்டிய தேவை கண்டறியப்பட்டுள்ளது.

சட்டத்தின் ஏற்பாடுகளுக்கமைய ஜனாதிபதி அவர்கள் அல்லது கொழும்பு துறைமுக நகரத்தின் விடயதானம் ஒப்படைக்கப்பட்டுள்ள அமைச்சருடன் ஆலோசித்து ஆணைக்குழுவால் செயல்நுணுக்க முக்கியத்துவம் வாய்ந்த வியாபாரங்களெனப் பெயர் குறிப்பிடும் வியாபாரங்களை அடையாளங்கண்டு விலக்களிப்புக்கள் அல்லது ஊக்குவிப்புக்களை வழங்குவதற்காக செயல்நுணுக்க முக்கியத்துவம் வாய்ந்த முதல்நிலை வியாபாரங்கள் மற்றும் செயல்நுணுக்க முக்கியத்துவம் வாய்ந்த இரண்டாம்நிலை வணிகங்களென இரண்டு வகையாக அடையாளங் காணப்பட்டுள்ளது.

அதற்கமைய, குறித்த விலக்களிப்புக்கள் மற்றும் ஊக்குவிப்புக்களை வழங்குவதற்காக முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சராக ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

5. ‘புதிய மைல்கல் பயணம்’ - முதலாவது சர்வதேச சுரங்க அகழ்வு மற்றும் கனிமங்கள் பற்றிய மாநாடு, முதலீட்டு ஒன்றியம் மற்றும் கண்காட்சி
இலங்கையில் சமகால மற்றும் எதிர்கால சுரங்க அகழ்வு மற்றும் கனிமங்கள் தொழிற்றுறையில் ஈடுபடுகின்ற அனைத்துப் பங்கீடுபாட்டாளர்களுக்கும் ஒரு தளத்தை வழங்கும் நோக்கில் ‘புதிய மைல்கல் பயணம்’ எனும் பெயரிலான சர்வதேச சுரங்க அகழ்வு மற்றும் கனிமங்கள் மாநாடு, முதலீட்டு ஒன்றியம் மற்றும் கண்காட்சி பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடாத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.

இலங்கையின் சுரங்க அகழ்வு மற்றும் கனிமங்கள் தொழிற்றுறைக்கு உலகளாவிய வணிக அடையாளத்தின் பெறுமதியைக் கட்டியெழுப்புதல் மற்றும் பாரியளவிலான முதலீடுகள் மற்றும் பொருளாதார வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொள்ளல் போன்ற விடயங்கள் எதிர்பார்க்கப்படுகின்றது.

அதற்கமைய, முன்மொழியப்பட்டுள்ள சர்வதேச சுரங்க அகழ்வு மற்றும் கனிமங்கள் மாநாடு, முதலீட்டு ஒன்றியம் மற்றும் கண்காட்சியை 2023 ஒக்டோபர் மாதத்தில் நடாத்துவதற்காக சுற்றாடல் அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

6. ஆயுர்வேத சட்டத்தை திருத்தம் செய்தல்
நிறைபெறுதகு அபிவிருத்தி இலக்குகளை அடைவதற்கு இயலுமான வகையிலும் சமகால தேவைகளுக்கு பொருத்தமான வகையிலும் 1961 ஆம் ஆண்டின் 31 ஆம் இலக்க ஆயள்வேத சட்டத்தை திருத்தம் செய்வதற்காக 2022.10.31 ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

அதற்கமைய சட்டவரைஞரால் தயாரிக்கப்பட்டுள்ள சட்டமூலத்திற்கு சட்டமா அதிபரின் ஒப்புதல் கிடைத்துள்ளது. குறித்த சட்டமூலத்தை அரச வர்த்தமானியில் வெளியிடுவதற்கும், பின்னர் பாராளுமன்ற அங்கீகாரத்திற்காக சமர்ப்பிப்பதற்கும் சுகாதார அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

7. இலங்கையில், மேல் மாகாண பிரதேசத்தில் பெருநகர பிரதான திட்டம் - 2048  நடைமுறைப்படுத்தல்
2015 ஆம் ஆண்டில் நகர அபிவிருத்தி அதிகார சபையால் தயாரிக்கப்பட்டுள்ள மேல்மாகாண பிரதேசங்களில் பெருநகர பிரதான திட்டங்களை மீளாய்வு செய்வதற்கு சிங்கப்பூரின் ஜுரோங் (பிரைவேட்) லிமிட்டட் நிறுவனத்திற்கு வழங்குவதற்கு 2023.05.08 ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

அதற்கமைய ஆரம்ப பிரதான திட்டத்தில் அடையாளம் காணப்பட்டுள்ள கருத்திட்டங்களின் முன்னுரிமையின் அடிப்படையில் நடைமுறைப்படுத்துவதற்கு இயலுமான வகையில் குறித்த திட்டம் மீளாய்வு செய்யப்பட்டு “மேல்மாகாண பிரதேச பெருநகர பிரதான திட்டம் - 2048” தயாரிக்கப்பட்டுள்ளது.

அவ்வாறு தயாரிக்கப்பட்ட குறித்த திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு தேவையான வழிகாட்டல்கள் மற்றும் வசதிகளை ஒருங்கிணைப்புச் செய்வதற்காக கௌரவ பிரதமர் அவர்களின் தலைமையில் அமைச்சர் குழுவொன்றை நியமிப்பதற்கு கௌரவ ஜனாதிபதி, கௌரவ பிரதமர் மற்றும் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் ஆகியோர் கூட்டாக சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

8. பசுமைப் பத்திரங்கள் சட்டகம் (Green Bonds Framework)
பசுமை முதலீடுகளில் ஈடுபடுதல் தொடர்பான அரசாங்கம் தனது எதிர்பார்ப்பை 2023 ஆம் ஆண்டு வரவு செலவுத்திட்டத்தின் மூலம் வெளியிட்டுள்ளது. அவ்வாறான பசுமைப் பத்திரங்களை வெளியிடுவதன் மூலம் கிடைக்கின்ற நிதியை மீள்புதுப்பிக்கத்தக்க வலுசக்தி, வலுசக்தி வினைத்திறன், பசுமைக் கட்டிடங்கள், தூய போக்குவரத்து, நிலைபெறுதகு நீர் முகாமைத்துவம் மற்றும் கழிவுநீர் முகாமைத்துவம், சுற்றாடல் மாசடைவதைத் தடுத்தல், கட்டுப்படுத்தல் மற்றும் சுழற்சிப் பொருளாதார நடவடிக்கைகள், காலநிலை மாற்றங்களுக்கான தகவமைப்புக்கள், உயிர்ப்பல்வகைமைப் பாதுகாப்பு போன்ற நடவடிக்கைகளில் பயன்படுத்தக்கூடிய இயலுமை காணப்படுகின்றது.

நீலப் பசுமை மற்றும் நிலைபெறுதகு வகையிலான நிதிச்சாதனங்கள் மூலம் முதலீடுகளை அணுகுவதற்கான சர்வதேச ரீதியாக ஏற்றுக்கொண்ட சட்டகத்தை நிறுவுவதற்காக அரசுக்கு ஒத்துழைப்பு வழங்குவதற்காக ஆசிய பசுபிக் பிராந்தியத்திற்கான ஐக்கிய நாடுகள் சபையின் பொருளாதார மற்றும் சமூகப் பேரவை (UNESCAP), ஐக்கிய நாடுகள் சபையின் அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டம் (UNDP) மற்றும் உலகப் பசுமை விருத்தி நிறுவனம் (GGGI) போன்ற நிறுவனங்கள் உடன்பாடு தெரிவித்துள்ளது. அதற்கமைய, தற்போது பசுமைப் பத்திரங்கள் சட்டகம் வரைவாக்கம் செய்யப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் பொருளாதார மற்றும் சமூகப் பேரவை (UNESCAP), மற்றும் உலகப் பசுமை விருத்தி நிறுவனத்தின் (GGGI) ஒத்துழைப்புடன் தற்போதைய சட்டவரைபை அங்கீகாரம் பெற்ற ஆவணமாக மாற்றுவதற்கு இயலுமை கிட்டும் வகையில் இரண்டாம் தரப்பினரின் அபிப்பிராயத்தை (Second Party Opinion – SPO)) பெற்றுக்கொள்வதற்காக நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக ஜனாதிபதி சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

9. வெளிவிவகார அமைச்சு மற்றும் சவுதி அரேபிய இராச்சியத்தின் வெளிவிவகார அமைச்சுக்குமிடயில் அரசியல் ஆலோசனை தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம்.
வெளிவிவகார அமைச்சு மற்றும் சவுதி அரேபிய இராச்சியத்தின் வெளிவிவகார அமைச்சுக்குமிடையில் அரசியல் ஆலோசனை தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மேற்கொள்வதற்கு முன்மாழியப்பட்டுள்ளது.

குறித்த புரிந்துணரவு ஒப்பந்தத்தின் மூலம் ஏனைய சர்வதேச நிறுவனங்களின் நேர்மய வகிபாங்குகள் மற்றும் பிராந்திய மற்றும் உலகளாவிய விவகாரங்கள், அரசியல் போக்குகள் மற்றும் பரஸ்பர ரீதியான முக்கியமான விடயங்கள் பற்றி கருத்துக்களை பரிமாறிக்கொண்டு இருதரப்பு தொடர்புகளை மேம்படுத்துவதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது.

அதற்கமைய குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிடுவதற்காக வெளிவிவகார அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. 

10. காபன் அடிச்சுவடு இலங்கை மற்றும் சிங்கப்பூரிற்கு இடையிலான ஒத்துழைப்பு ஒப்பந்தத்தில் கையொப்பமிடல்
பரிஸ் ஒப்பந்தத்தின் 6ஆவது உறுப்புரை மூலம் சர்வதேச காபன் வணிகத்தில் பச்சைவீட்டு விளைவு வாயுக்கள் வெளியேற்றத்தைக் குறைக்கும் நோக்கில் இலாபகரமான வகையில் ஒத்துழைப்புடன் செயலாற்றுவதற்கு நாடுகளுக்கு வாய்ப்புக்கள் வழங்கப்பட்டுள்ளன.

அதற்கமைய பரிஸ் ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சட்டகத்தில் காபன் அடிச்சுவடு தொடர்பாக இலங்கை அரசு மற்றும் சிங்கப்பூர் அரசுக்கும் இடையில் ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றை கையொப்பமிடுவதற்கு முன்மொழியப்பட்டுள்ளது. குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிடுவதற்காக சுற்றாடல் அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. 

11. ஸ்ரீலங்கன் விமான சேவைக்கான டோஹா சர்வதேச விமான நிலையத்தில் தரையிறக்கச் சேவைகளுக்கான ஒப்பந்தம் மற்றும் டுபாய் சர்வதேச விமான நிலையத்தில் பண்டங்கள் களஞ்சியப்படுத்தல் சேவைகளுக்கான ஒப்பந்தம் வழங்கல்
டோஹா சர்வதேச விமான நிலையத்தில் தரையிறக்கச் சேவைகளை வழங்கல் மற்றும் டுபாய் சர்வதேச விமான நிலையத்தில் பண்டங்கள் களஞ்சியப்படுத்தல் சேவைகளுக்கான ஒப்பந்தம் வழங்கலுக்காக விலைமுறி கோரப்பட்டுள்ளது.

அமைச்சரவையால் நியமிக்கப்பட்டுள்ள நிரந்தர பெறுகைக்குழுவின் பரிந்துரைகளுக்கமைய டோஹா சர்வதேச விமான நிலையத்தில் தரையிறக்கச் சேவைகளை வழங்குவதற்கான ஒப்பந்தம் Qatar Aviation Services W.L.L இற்கு வழங்குவதற்கும், டுபாய் சர்வதேச விமான நிலையத்தில் பண்டங்கள் களஞ்சியப்படுத்தல் சேவைகளை வழங்குவதற்கான ஒப்பந்தம் னுயெவய கம்பனிக்கு வழங்குவதற்கும் துறைமுகங்கள், கப்பல்துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

12. புதிய அபிவிருத்தி கருத்திட்டங்கள்/ வேலைத்திட்டங்களை மதிப்பீடு செய்வதற்காக தேசிய அபிவிருத்திக் குழுவொன்றை அமைத்தல்
சரியான வகையில் அடையாளங் காணப்படாத மற்றும் முறைசார் மதிப்பீடுகளற்ற கருத்திட்டங்கள்/ வேலைத்திட்டங்களை ஆரம்பிப்பதால் கடந்த காலங்களில் அமுல்படுத்தப்பட்ட ஒருசில கருத்திட்டங்கள் மூலம் எதிர்பார்க்கப்பட்ட பெறுபேறுகளை அடைய முடியாமல் போயுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

அதனால், அரசின் புதிய கருத்திட்டங்கள்/ வேலைத்திட்டங்களை மதிப்பீடு செய்யும் செயன்முறைக்கு தேசிய அபிவிருத்திக் குழுவொன்றை நியமிப்பதற்கான முன்மொழிவு 2023 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டம் நிதி விடயதான அமைச்சராக கௌரவ ஜனாதிபதி அவர்களால் சமர்ப்பிக்கப்பட்டது.

அதற்கமைய, அமைச்சரவையால் நியமிக்கப்பட்டுள்ள பெறுகைக் குழுவால் கருத்தில் கொள்ளப்பட்ட மதிப்பீட்டு செலவுகள் அல்லது அதற்கு அதிகமான மதிப்பீட்டு செலவுகளுடன் கூடிய கருத்திட்டங்கள்/ வேலைத்திட்டங்கள் தொடர்பாக தனது பரிந்துரைகளை அமைச்சரவைக்கு சமர்ப்பிப்பதற்காக முன்னாள் திறைசேரி பிரதிச் செயலாளராக கடமையாற்றிய தயா லியனகே அவர்களுடைய தலைமையிலான குழுவொன்றை நியமிப்பதற்காக ஜனாதிபதி சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. 


Add new comment

Or log in with...