- திணைக்கள பெண் உத்தியோகத்தர் மற்றும் தரகர்கள் 16 பேர் கைது
வீட்டிலிருந்தே 3 தினங்களுக்குள் கடவுச்சீட்டு பெறும் புதிய நடைமுறைக்கு அமைய, பிரதேச செயலகங்களில் புகைப்படங்கள் மற்றும் கைரேகைகளை பெறும் வகையில் 50 நிலையங்களை அமைக்கவுள்ளதாக, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அளஸ் தெரிவித்துள்ளார்.
பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சில் இன்று (22) இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அவர் இதனைத் தெரிவித்தார்.
இதேவேளை, கடந்த வாரம் கடவுச்சீட்டு பெறுவதற்காக ஏற்பட்ட நெரிசல் தற்போது தணிந்துள்ளதாக அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.
எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தரகர்களிடம் சிக்க வேண்டாம் எனத் தெரிவித்த அவர், கடவுச்சீட்டு பெறுவதற்காக இலஞ்சம் மற்றும் தரகு பெற்ற சம்பவம் தொடர்பில் குடிவரவு, குடியகல்வு திணைக்கள பெண் அதிகாரி ஒருவர் மற்றும் தரகர்களாக செயற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
கடந்த வெள்ளிக்கிழமை மாத்திரம் 16 பேர் கைது செய்யப்பட்டதாக அவர் இதன்போது குறிப்பிட்டார்.
இதேவேளை, இரண்டு கடவுச்சீட்டுகளுடன் நாட்டிற்குள் பிரவேசித்ததாகக் கூறப்படும் சீனப் பிரஜை இன்று வரவழைக்கப்படவுள்ளதாகவும், இலங்கையிலுள்ள சீனத் தூதரகத்துடன் கலந்தாலோசித்து அவர் தொடர்பான மேலதிக நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் டிரான அளஸ் மேலும் தெரிவித்தார்.
குடிவரவு குடியகல்வு திணைக்களத்திற்கு வரும் அனைவருக்கும் எந்தவித அசௌகரியமும் இன்றி தேவையான சேவையை வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் ஹர்ஷ இலுக்பிட்டிய தெரிவித்தார்.
பிராந்திய அலுவலகங்களிலும் ஒரு நாள் சேவை ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும், ஆனால் பிரதான அலுவலகத்திற்கு மட்டுமே மக்கள் அடிக்கடி வருவதால் கடும்மையான நெரிசல் நிலை ஏற்படுவதாகவும் குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளர் மேலும் தெரிவித்தார்.
தற்போது பொதுமக்கள் இடைத்தரகர்களை தொடர்பு கொள்ள வேண்டிய அவசியம் இல்லை எனவும், நேரடியாக திணைக்களத்திற்கு வருமாறு அவர் மேலும் குறிப்பிட்டார்.
கடவுச்சீட்டுக்காக திகதியை ஒதுக்கிய விண்ணப்பதாரர்கள் அதிகாலையில் திணைக்களத்திற்கு வருவதன் மூலம் அவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு, சம்பந்தப்பட்ட கவுன்டருக்கு அனுப்பப்படுவார்கள். ஒரு சில மணிநேரங்களில், அவர்களால் கடவுச்சீட்டை பெற முடியும்.
புதிய திட்டம் ஜூன் மாதம் அமுலுக்கு வந்ததும், எமது அலுவலகத்தில் ஒன்றிற்குச் சென்று புகைப்படம் எடுத்து, கைரேகையை வழங்கி, வீட்டிலிருந்தே கடவுச்சீட்டை பெற்றுக்கொள்ளலாம் என தான் எதிர்பார்ப்பதாகவும், இதன்மூலம் இடைத்தரகர்களின் தலையீட்டை முற்றாக நிறுத்த முடியும எனவும் அவர் குறிப்பிட்டார்.
Add new comment