யாழ். மாவட்டத்தில் நாடகம், தெருக் கூத்து, கிராமிய கலைகளுக்கு புத்துயிர் அளிக்கும் காவேரிக் கலாமன்றம்

ஓய்வு பெற்ற பச்சிளப்பள்ளி பிரதேச செயலாளரும் காவேரிக் கலா மன்றத்தின் பொருளாளர் சுப்பிரமணியம் புத்திரசிகாமணி காவேரிக் கலாமன்றத்தின் இயக்குனர் வண. பிதா யோசுவா அடிகளாரின் செயற்பாடுகளுக்கு விருப்புடன் உறுதுணையாக இருந்து செயற்படுவர்களுள் மிக முக்கியமானவர்.

கல்வி, இலக்கியம், சமூக சேவைகளில் பெரும் பங்காற்றி வரும் இவர் காவேரி கலாமன்றத்தின் 25 ஆவது ஆண்டு விழாவில் சிறந்த நிதி முகாமைத்துவத்திற்கான விருதும் யாழ்ப்பாணம் எம்.சீ.ஏ நிறுவனத்தின் 125 ஆவது ஆண்டு விழாவில் அர்ப்பணிப்பான தலைவருக்கான விருதும், பருத்தித்துறை கல்வி வலயத்தின் நிறைமதி விழாவில் நாடகத்துறைக்கான 'கலைவாரிதி' விருதும் பெற்றவர்.இவர் தினகரன் பத்திரிகைக்கு வழங்கிய செவ்வி.

கேள்வி :- உங்களைப் பற்றிய அறிமுகத்தை வாசகர்களுக்கு கூறுங்கள்?

யாழ்ப்பாண மாவட்டம் வடமராட்சியை பிறப்பிடமாகவும் சுண்டிக்குளி யாழ்ப்பாணத்தை வசிப்பிடமாகவும் கொண்டவன்.மனைவி ஆசிரிய ஆலோசகராகவிருந்து இளைப்பாறியுள்ளார். மூன்று ஆண் பிள்ளைகள்.நான் 1953.04.27 ஆம் திகதி பிறந்தேன். கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் கலாநிதிப் பட்டம் பெற்ற நான் பிரதேச செயலாளராக கடமையாற்றி ஓய்வு பெற்றுள்ளேன்.

கேள்வி :கலை உங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்திய மாற்றம்?

பதில் :வல்லிபுரம் அண்ணாவியார் பரம்பரையில் வந்த துரைச்சாமி அண்ணாவியாரின் 'நாம்' என்னும் சமூக நாடகத்தில் குழந்தை பாத்திரத்தில் 1959ம் ஆண்டு நடித்தேன.1961ம் ஆண்டு 'நீதிபதி' என்னும் சமூக நாடகத்திலும் நடித்தேன். அப்பொழுது எனது வயது ஆறாகும். தொடர்ந்து 1984ம் ஆண்டுவரை சமூக நாடகங்களில் நடித்துள்ளேன்.

1974ம் ஆண்டு அண்ணாவியார் கே.துரைராஜா என்பவரின் 'ஒளியைத்தேடி' என்னும் போட்டி நாடகத்தில் பெண் வேடம் ஏற்று நடித்தேன். இந்நாடகம் இரு தடவைகள் தங்கப்பதக்கம் வென்றது. நான் கடமையாற்றிய அரச அலுவலகங்களிலும் நாடகங்கள் அரங்கேற்றியுள்ளேன்.

கேள்வி : தற்பொழுது சமுதாயத்திற்கு நீங்கள் செய்யும் கலைச்சேவை பற்றி எடுத்துக்கூற முடியுமா?

பதில் : காவேரி கலைமன்றத்தில் நிறைவேற்று இயக்குநராக பணியாற்றும் கலாநிதி வண.யோசுவா அடிகளாரின் KKM அமைப்பில் 20 வருடங்களுக்கு மேல் பொருளாளராக சேவை ஆற்றுகின்றேன். காவேரி கலாமன்றமானது கிளிநொச்சி மாவட்டத்தின் நான்கு பிரதேச செயலக பிரிவுகளிலும் யாழ்ப்பாண மாவட்டத்தின் வலிகாமம் மேற்கு, வலிகாமம் தென்மேற்கு பிரதேச செயலக பிரிவுகளிலும், சமுதாய விழிப்புணர்வு நாடகக்குழுக்களை உருவாக்கியுள்ளது. கடந்த மூன்று வருடங்களில் 45 குழுக்களுக்கு பயிற்சிகள் வழங்கப்பட்டன. இக்குழுக்கள் உருவாக்கத்திற்கு வண. யோசுவா அடிகளாருடன் இணைந்து நானும் பங்காற்றியுள்ளேன்.

கேள்வி: உங்கள் அமைப்பில் உருவாக்கப்பட்ட சமுதாய விழிப்புணர்வு வீதி நாடகங்களில் பயன்படுத்தப்படும் இசைக் கருவிகள் பற்றி கூற முடியுமா?

பதில் : பாரம்பரிய தமிழ் இசைக்கருவியான 'தப்பிசை' முரசு இந்நிகழ்வில் பயன்படுத்தப்படுகின்றது. தமிழ் நாட்டிலிருந்து வருகைதந்த தப்பிசை கலைஞர் ஒருவரால் இந்த அமைப்பின் பணியாளர்களான இளம் யுவதிகளுக்கும், வாலிபர்களுக்கும் பயிற்சிகள் வழங்கப்பட்டன.

கேள்வி : காவேரி கலாமன்றம் கலையை தவிர்த்து சமுதாயத்திற்கு தேவையான சுகாதாரம் சம்பந்தமான செயற்பாடுகளை முன்னெடுக்கின்றதா?

பதில் : தொழுநோயால் பாதிக்கப்பட்ட மக்கள் தாம் பாதிக்கப்பட்டதை கூற மாட்டார்கள். எனவே அவர்களை கண்டுபிடித்து சிகிச்சை அளிப்பதும் விழிப்புணர்வு செய்வதுமான செயற்பாட்டை நீண்டகாலமாக எமது அமைப்பு செய்கிறது. இதற்கு பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களின் உதவியும் நாடப்படுகின்றது.

யாழ்ப்பாண மாவட்டத்தில் ஆரம்பிக்கப்பட்ட இச்சேவையானது தற்பொழுது வடமேல் மாகாணமான அனுராதபுரம் மற்றும் கிழக்கு மாகாண பகுதிகளிலும் வவுனியா மாவட்டத்திலும் நடைபெறுகின்றது. இச்செயற்பாட்டை சிறப்பாக செய்வதற்கு பணியாளர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. இந்தியாவில் தமிழ்நாடு, உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களிலும் நேபாளத்திலும் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. பயிற்சி பெற்ற பணியாளர்கள் சுகாதாரப் பகுதியுடன் இணைந்து சிறப்பாக செயற்படுகின்றார்கள்.மேலும் போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான வாழ்வாதாரப் பணிகளும் 2009ம் ஆண்டின் பின் செய்யப்படுகின்றன. கலைப்பணியும் தேவை ஏற்படின் செய்யப்படுகின்றது.

கேள்வி : தங்கள் அமைப்பினால் வாழ்வாதாரப்பணி, கலை மூலம் விழிப்புணர்வு பணி, மற்றும் தொழு நோயாளர்களுக்கான சிகிச்சை வழங்கும் பணி என்பவற்றுடன் கல்விப் பணியும் செய்யப்படுவதாக கூறுகின்றீர்கள். இவற்றில் தொழு நோயாளருக்கான பணிகள் இலங்கையில் வேறு அமைப்புக்களும் செய்கின்றனவா?

பதில் : எமது காவேரி கலாமன்றத்தைவிட கொழும்பில் ஒரேயொரு அமைப்பு மட்டும் தொழுநோயாளர் சேவை செய்கின்றது. நாம் மூன்று மாகாணங்களில் இச் சேவையைச் செய்கின்றோம்.இப்பணியை திறம்பட செய்வதினால் எமது பணிப்பாளர் வண.யோசுவா அடிகளாருக்கு விருதுகள் பல கிடைத்துள்ளன.

கேள்வி : தங்களின் கலைச் செயற்பாடு மற்றும் சமூக சேவைகளுக்கு விருதுகள் சான்றிதழ்கள், பாராட்டுக்கள் கிடைத்துள்ளனவா?

பதில் : 2016ம் ஆண்டு வடமராட்சி கல்வி வலயத்தின் நிறைமதி விழாவில் 'கலைவாரிதி' விருது வழங்கப்பட்டது. 2008ம் ஆண்டு வலிகாமம் மேற்கு பிரதேசத்தில் எம்மால் செயற்படுத்தப்பட்ட கலை நிகழ்வுகளுக்காகவும், டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு மற்றும் மாணவர்களுக்கான போட்டிகள் ஆகியவற்றுக்கு காவேரி கலாமன்றத்தால் 'சமூக காவலர்' விருது வழங்கப்பட்டது. அத்துடன் இவ்வருடம் காவேரி கலாமன்றத்தின் வெள்ளிவிழாவையொட்டி “BEST FINANCE MANAGEMENT AWARD” விருதும் வழங்கப்பட்டது. இலக்கியத்துறைக்கும் நாடகத்துறைக்குமான 'கலைசாகரம்' விருதும் 2014ம் ஆண்டு மருதங்கேணி பிரதேச செயலக பண்பாட்டு விழாவில் பிரதேச செயலாளரால் வழங்கப்பட்டது.

பச்சிலைப்பள்ளியில் பிரதேச செயலாளராக கடமையாற்றிய போது 1998ல் கலாசார பேரவை அமைத்து விழாக்கள் நடத்தியமைக்காகவும் இடம்பெயர்ந்த மக்களுக்கு அனர்த்த நிவாரண செயற்பாடுகளுக்காகவும் பிரதேச பொது அமைப்புக்களால் 'கலைமாமணி' விருதும் 'சமூக சேவையாளன்' விருதும் வழங்கப்பட்டன. சர்வோதய அமைப்பினால் 2015ம் ஆண்டு கலைப் பணிக்காக 'கலைச்சுடர்' விருது. 2015ம் ஆண்டு யாழ்ப்பாண YMCA நிறுவனத்தால் இரு விருதுகள் வழங்கப்பட்டன.

இரு தடவைகள் தலைவராகவும் 25 வருடங்கள் தொடர்ச்சியாக பணிப்பாளர் சபை உறுப்பினராகவும் சேவை செய்தமைக்காகவும் 95ஆம் ஆண்டு இடம்பெயர்வின் போது இடம்பெயர்ந்த ஐந்து பிரதேச செயலக பிரிவு மக்களுக்கு YMCA அமைப்பால் நிவாரண உதவிகள் புரிந்தமைக்காக முன்னாள் முதலமைச்சர் C.V.விக்கினேஸ்வரன் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டேன். யாழ்ப்பாண மாவட்ட செயலக கலாசார அதிகார சபையின் செயலாளராக 2018ம் ஆண்டிலிருந்து சேவையாற்றி வருகின்றேன்.

கேள்வி : அரச சேவையில் கலைக்காக தங்களால் செய்யப்பட்ட சேவை பற்றி கூற முடியுமா?

பதில்: கிளிநொச்சி மாவட்டத்தின் பச்சிலைப்பள்ளி, பளை பிரதேச செயலகத்தில் பிரதேச

செயலாளராகக் கடமையாற்றிய போது 1998ம் ஆண்டு ஏப்ரல் 27ம் திகதி கலாசாரப் பேரவை ஆரம்பிக்கப்பட்டு மூன்று நாட்கள் ஆறு அமர்வுகளில் விழா நடத்தப்பட்டது. இதற்கு முன்னர் கிளிநொச்சி மாவட்டத்தில் கலாசாரப் பேரவை அமைக்கப்பட்டிருக்கவில்லை. 98ஆம் ஆண்டிலிருந்து வருடம் தோறும் கலை பண்பாட்டு விழா தொடர்ந்து நடைபெறுகின்றது. இவ்வருடம் 25ஆவது ஆண்டு வெள்ளிவிழா வருடமாக நான் பார்க்கின்றேன். இதன் மூலம் நான் பெருமிதம் அடைகின்றேன்.

கேள்வி : தங்களின் இலக்கியப்பணி தொடர்பில்,..

பதில் : பளை பிரதேச வரலாறு 'சுவடிகள்' எனும் நூலை வெளியிட்டேன். 2014ம் ஆண்டு விடிவெள்ளி K.P முத்தையா ஞாபகார்த்த நூற்றாண்டு விழாவில் காவேரி கலாமன்றத்தில் ஏற்பாட்டில் 170 வருட உடுத்துறை கிராம வரலாறு 'உடுத்துறையின் வேர்கள்' என்ற நூலையும் எழுதி வெளியிட்டேன்.

2018ஆம் ஆண்டு 'முழக்கம்' என்ற பெயரில் நல்லூர் சென்ஜேம்ஸ் தேவாலய ஏற்பாட்டில் வெளியிடப்பட்டது. 200 வருட வரலாற்றை கொண்ட இந்நூல் என்னால் எழுதப்பட்டது. இவற்றை விட தூது, தெளிவு ஆகிய சஞ்சிகைகளுக்கும் சில ஆக்கங்கள் எழுதியுள்ளேன்.

கேள்வி : காவேரிக் கலா மன்றத்தின் இயக்குனர் வண. பிதா யோசுவா அடிகளார்களுடன் மிக நெருக்கமான உறவைக் கொண்டுள்ள நீங்கள் அவர் குறித்த சமூக இலக்கியச் செயற்பாடுகள்?

1992 இல் சங்கானை பிரதேச செயலகத்திற்கு பதவி உயர்வு பெற்று நிர்வாக உத்தியோகஸ்தராகச் சென்றேன். அங்கு வட்டுக்கோட்டையில் கிறிஸ்தவ தேவாலயத்தில் உதவிப் போதகராக இருந்தவர். இவர் பிரதேச செயலகத்திற்கு வந்து ஒளி விழா செய்வதற்காக அடிக்கடி வந்து போவதால் எங்கள் இருவருக்கிடையே சிநேகிதம் ஏற்பட்டது. அந்த வட்டுக்கோட்டை தேவாலயத்தில் அனாதை இல்லம் ஒன்றை அவர் நடத்தி வந்தார். அதற்குத் தேவையான என்னென்ன உதவிகளைப் பெற்றுக் கொள்ளலாமோ அதற்குத் தேவையான உதவிகளைப் பெற்றுக் கொள்ள இங்கு வருவார். இப்படி பல சமூக சேவைகளைச் செய்து கொண்டிருந்தார்.

பின்னர் எனக்கு பதவி உயர்வு கிடைத்து பளை பிரதேச செயலாளராகச் சென்றேன். அவர் செய்த அனாதை இல்லத்திற்கு நிரந்தரமான கட்டடம் ஒன்றை நிர்மாணித்து அதனைத் திறப்பதற்காக என்னையும் பேராயர் அவர்களுக்கும் அழைப்பு விடுத்து திறந்து வைத்தார்.

2008 இல் வலிகாமம் மேற்கு சுழிபுரம் பகுதிக்குப் பிரதேச செயலாளராகச் சென்றேன். அனாதை இல்லத்திற்கு தண்ணீர் இல்லை என்று என்னிடம் வந்து அவர் கோரிக்கை விடுத்திருந்தார். அப்பொழுது பிரதேச சபைக்கு அதிகாரம் இருக்க வில்லை. எல்லா அதிகாரமும் என்னிடம் தான் இருந்தது. அதன் மூலமாக நான் தண்ணீர் வசதியை இலவசமாகப் பெற்றுக் கொடுக்க முயற்சி செய்தேன். அந்தச் சிநேகிதத்துடன் செயற்பட்ட பின்னர் டெங்கு நோய் ஏற்பட்டது. இவர் தன்னுடைய காவேரிக் கலாமன்றத்தில் நடிக்கக் கூடிய கலைஞர் அணியினை வைத்திருந்தார்.அப்பொழுது அவர் 'இந்த டெங்கு தொடர்பில் விழிப்புணர்வூட்டும் வகையில் தெருக் கூத்து ஒன்றை நடத்துவோம். அதற்கு செலவு செய்ய முடியுமா என்று வந்து என்னிடம் உதவி கேட்டார். அவருடைய வேண்டுகோளுக்கு இணங்க பிரதேச சபையின் நிதி ஒதுக்கீடு செய்து டெங்கு தொடர்பில் தெருக் கூத்தை நடத்தினார். பாடசாலை மட்டத்தில் டெங்கு தொடர்பில் போட்டிகள் வைத்தது மட்டுமல்ல, அவர் 'தெருவோரம் காத்திருத்தல்' என்ற புத்தகத்தையும் வெளியிட்டார். அதற்கான புத்தகச் செலவினையும் பிரதேச சபையின் ஊடாகப் பெற்றுக் கொடுத்தேன்.

தெருக் கூத்தின் மூலம் கொஞ்சம் பணம் கிடைக்குமே தவிர பெரியளவில் கிடைக்காது. அப்பொழுது அவரிடம் நிதி இல்லை. அது அவருடைய ஆரம்பம்.

பின்னர் சாவகச்சேரி நகர சபைக்கு செயலாளராகச் சென்றேன்.அங்கு சென்றவுடன் பொதுசனத் தொடர்பாடல் உள்ளூராட்சி மன்றங்கள் மூலம் தெருக் கூத்தினைச் செய்ய வேண்டும் என்று கேட்டார்கள். அப்பொழுது நான் அவர்களிடம் இப்படி ஒருவர் இருக்கிறார். இவரைப் பயன்படுத்த வேண்டும் என்று பரிந்துரை செய்தேன். அப்பொழுது யாழ்ப்பாணத்தில் உள்ள 17 பிரதேச சபைக்கு உட்பட்ட அத்தனை பகுதிகளுக்கும் சென்று பொது சனத் தொடர்பு விழிப்புணர்வுக்காக தெருக் கூத்தினை அவர்கள் அரங்கேற்றினார்கள். இதன் மூலம் அவர்களுக்கு ஒரு தொகை நிதி உதவியினைப் பெற்றுக் கொடுத்தேன்.

இப்படியான உதவிகளை நான் அவருக்குச் செய்த போது என்னை அவருக்குப் பிடித்துக் கொண்டது. அதன் பின் என்னை காவேரிக் கலா மன்றத்திற்குப் பொருளாளராக இருக்கும்படி வேண்டினார். சமூகப் பணிகளுக்கு ஒத்துழைக்க வேண்டும் சிநேகத்துடன் பழகி வருகின்றோம் என்ற அடிப்படையில் நான் இணக்கம் தெரிவித்தேன்.

அந்த நாளில் இருந்து அரசாங்க வேலையுடன் சனிக்கிழமை நாட்களில் உள்ள நேரத்தை ஒதுக்கி அவருக்காக செய்து வந்தேன். பொருளாளர் என்ற வகையில் அவரிடம் காசு இருக்க வில்லை. அங்குமிங்கும் கொஞ்சம் கொஞ்சமாக அடுத்தவரிடம் சேகரிக்கின்ற காசை வைத்துத் தான் செய்தார்.

பின்னர் வெளிநாட்டில் இருந்து தாய் ஒருவர் வந்து காசு கொடுத்து உதவி செய்தார். அதன் பின்பு அநாதை இல்லம் போகப் போக சரியாக செயற்படத் தொடங்கியது.

அப்படி செய்து கொண்டு போகும் போது வலிகாமம் சுழிபுரம் பகுதியிலுள்ள தொழுநோய் நிலையத்தை பார்ப்பதற்கு யார் போவதில்லை. கவனிப்பதுமில்லை. இதற்கு சிறியளவில் அரச உதவிகளை பெற்றுக் கொடுத்தேன். ஆனால் அவர் வெளிநாட்டு உதவிகளைப் பெற்று அந்தந்த சனத்திற்கு உதவி செய்தார். அந்த இடத்திற்கு யாரும் செல்ல மாட்டார்கள். சுகாதாரப் பரிசோதகர்கள் கூடச் செல்ல மாட்டார்கள். ஏனென்றால் வருத்தம் தொற்றி விடும் என்ற பயம் இருந்தது. ஆனால் அந்நோய்க்கு உட்பட்டவர்களை குணப்படுத்தி அவர்களை தன்னுடைய அமைப்பில் இணைத்துக் கொண்டு அவர்கள் மூலமாக அந்த இடத்தை மிகத் திறன்பட பராமரித்து வந்தார். இந்தத் தொழு நோயின் மூலம் யாரும் அச்சப்பட தேவையில்லை என்ற மனோநிலையை முதன் முதலில் உருவாக்கியவர் இவர்தான். இது அவருக்கு பெரு வெற்றியை அளித்துள்ளது.

மூன்று மாவட்டங்களில் தொழுநோய் தொடர்பானவர்களை இனங்கண்டு அவர்களுக்குத் தேவையான விழிப்புணர்வூட்டுதல் ஆலோசனைகளை வழங்கும் பணிகள், நோய்களில் இருந்து மக்களைப் பாதுகாக்கின்ற நடவடிக்கைகளைத் தற்போது பரந்து பட்ட ரீதியில் மேற்கொள்வதையிட்டு நான் பெருமிதம் அடைகின்றேன்.

அது மட்டுமல்ல பிராந்திய சுகாதார வைத்தியப் பணிமனைகளின் பணிப்பாளர்களை வெளிநாடுகளுக்கு அனுப்பி அவர்களுக்கு இது தொடர்பில் தெளிவுகளையும் விளக்கங்களையும் பெற்றுக் கொடுப்பதற்கான முயற்சிகளிலும் ஈடுபட்டு வருகிறார்.

தற்போது இவர் வடக்கு, கிழக்கு, வடமேல், வடமத்திய, மத்திய எல்லா இடங்களிலும் தொழு நோய் தொடர்பில் பெயர் சொல்லக் கூடிய அளவுக்கு உயர்ந்த நிலைக்கு அவர் வந்து விட்டார். பண விடயத்தில் நேர்மையுடன் செயலாற்றக் கூடியவர். ஆரம்பத்தில் அவரிடம் பணம் இருக்க வில்லை. அவருடைய செயற்திறன் வெளிப்பாட்டை அவதானித்து அவருக்கு செயற்படுவதற்கு வெளிநாட்டு உதவிகள் தற்போது கிடைத்து வருகின்றன.

அது மட்டுமல்ல அவர் ரோட்டரி கழகத்தின் தலைவராகவும் செயற்படுகிறார். அவர் தன்னுடைய கிளிநொச்சி மாவட்டத்திற்கு மட்டுமல்ல பரந்துபட்ட ரீதியில் நாடெங்கும் தன்னுடைய மனிதாபிமான உதவிகளைச் செய்து வருவது இது அவருடைய சாதனை என்றுதான் நான் கூறுவேன்.

இக்பால் அலி... "


Add new comment

Or log in with...