- இந்திய முன்மொழிவை எஸ்.சி.ஒ. நாடுகள் ஏற்பு
ஷங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் (எஸ்.சி.ஒ) அங்கம் வகிக்கும் நாடுகள் மத்தியில் டிஜிட்டல் தொழில்நுட்ப பயன்பாட்டை மேம்படுத்துவது குறித்த இந்தியாவின் யோசனை ஏகமானதாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது என்று இலத்திரனியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்னவ் தெரிவித்துள்ளார்.
கசகஸ்தான், சீனா, கிர்கிஸ்தான், பாகிஸ்தான், ரஷ்யா, தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், இந்தியா ஆகிய நாடுகள் அங்கம் வகிக்கும் ஷங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் கூட்டம் அமைச்சர் அஸ்வினி வைஷ்னவ் தலைமையில் நடைபெற்றுள்ளது. அதனைத் தொடர்ந்து விடுக்கப்பட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில், பின்தங்கிய பிரதேசங்களிலுள்ள கிராமங்களுக்கு மொபைல் இணைப்பை கொண்டு செல்லவென 3 பில்லியன் அமெரிக்க டொலர்களை முதலீடு செய்வது குறித்தும், 250 ஆயிரம் கிராம சபைகளுக்கு புரோட்பேண்ட் இணைப்பைக் கொண்டு செல்லவென 5 பில்லியன் டொலர்களை முதலீடு செய்வது குறித்தும் ஷங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் அங்கத்துவ நாடுகளுடன் கருத்து பரிமாறல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அந்த வகையில் டிஜிட்டல் பொது உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கான எமது முன்மொழிவுகளை ஷங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் அங்கத்துவ நாடுகள் ஏகமானதாக அங்கீகரித்துள்ளதோடு அது தொடர்பான ஆவணத்திலும் கையெழுத்திட்டுள்ளன. உலகளாவிய மட்டத்தில் டிஜிட்டலை உள்ளடக்கிய முன்னேற்றத்தைப் பெறுவதற்கான எமது முயற்சிகளுக்கு கிடைத்துள்ள குறிப்பிடத்தக்க அங்கீகாரம் இது என்று அமைச்சர் குறிப்பிட்டுள்ளார் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
Add new comment