காரைதீவில் அரங்கேற்றப்பட்ட சர்வதேச நடன நாட்டிய சங்கமம்

இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் சுவாமி விபுலானந்தர் நாட்டிய நிருத்தியாலய மாணவிகளின் 'திக்கெட்டும் சதிரே' என்ற நாட்டிய சங்கமம் கடந்த திங்கட்கிழமை மாலை காரைதீவில் சிறப்பாக நடைபெற்றது .

சர்வதேச நடன தினத்தையொட்டி காரைதீவு விபுலானந்தா மணிமண்டபத்தில் பிரதேச செயலாளர் சிவ ஜெகராஜன் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் பிரதம அதிதியாக அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வேதநாயகம் ஜெகதீசன் கலந்து சிறப்பித்தார். சீர்பெறு அதிதியாக கிழக்குப் பல்கலைக்கழக சுவாமி விபுலானந்தர் அழகிய கற்கைகள் நிறுவக பணிப்பாளர் கலாநிதி பாரதி ஃப்ளோரன்ஸ் கென்னடி கலந்து சிறப்பித்தார். முதன்மை அதிதிகளாக கிழக்குப் பல்கலைக்கழக அழகியல் கற்கைகள் நிறுவனத்தின் நடனநாடகத்துறை தலைவர் கலாநிதி தாக்க்ஷாயினி பரமதேவன் மற்றும் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி ஷர்மிளா ரஞ்சிதகுமார் கலந்து சிறப்பிக்க, சிறப்பு அதிதிகளாக உதவிக்கல்விப் பணிப்பாளர் வி.ரி.சகாதேவராஜா, ஆசிரிய ஆலோசகர் திருமதி ரீஷா பத்திரண, விபுலானந்த மணிமண்டப தலைவர் வெ.ஜெயநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் சுவாமி விபுலானந்தர் பயிற்சி நிலைய விபுலானந்த நாட்டிய நிருத்தியாலய பரதநாட்டிய வளவாளர் திருமதி சர்மினி சுதாகரன், உதவி வளவாளர் செல்வி ஜெயகோபன் தக்சாளினி ஆகியோர் நடனதின விழாவை நெறியாள்கை செய்தனர். இந்த நிகழ்வில் மேலும் பல அதிதிகள் பங்கேற்க, விபுலானந்த நாட்டிய நிருத்தியாலய மாணவிகளின் கண்கவர் நடன நிகழ்ச்சிகள் மேடையேறின.

கலைத்துறைக்கு அளப்பரிய சேவையாற்றி வரும் கிழக்குப் பல்கலைக்கழக சுவாமி விபுலானந்தர் அழகிய கற்கைகள் நிறுவக பணிப்பாளர் கலாநிதி பாரதி ஃப்ளோரன்ஸ் கென்னடி, நடன நாடகத்துறைத் தலைவர் கலாநிதி தாக்க்ஷாயினி பரமதேவன், சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி ஷர்மிளா ரஞ்சிதகுமார், பரத நாட்டிய வளவாளர் திருமதி சர்மினி சுதாகரன், உதவி வளவாளர் செல்வி ஜெயகோபன் தக்சாளினி ஆகியோர் மேடையில் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டனர்.

மாவட்ட இந்து கலாசார உத்தியோகத்தர் கு ஜெயராஜ் நன்றியுரை ஆற்றினார். விழாவில் பங்கேற்ற 150 நடனத்துறை மாணவர்களுக்கு சான்றிதழ்கள் அதிதிகளால் வழங்கப்பட்டன. நடனத்துறை மாணவர்களின் பெற்றோர்களால் மணிமண்டபம் நிரம்பி வழிந்தது.

வி.ரி. சகாதேவராஜா...

(காரைதீவு குறூப் நிருபர்)


Add new comment

Or log in with...