தொழிற்சங்க போராட்டத்தை இடைநிறுத்திய பல்கலை ஆசிரியர்கள் சங்கங்களின் சம்மேளனம்

- திங்கட்கிழமை முதல் கற்பித்தல் நடவடிக்கையில்
- A/L வினாத்தாள் திருத்தும் பணியில் பங்கேற்பது இழுபறி

வேலை நிறுத்தப் போராட்டத்தை பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் சம்மேளனம் (FUTA) தற்காலிகமாக இடைநிறுத்த தீர்மானித்துள்ளது.

அதற்கமைய எதிர்வரும் ஏப்ரல் 17ஆம் திகதி முதல் கற்பித்தல் நடவடிக்கைகளில் மீண்டும் இணைய தீர்மானித்துள்ளனர்.

தமது சம்மேளன உறுப்பினர்களிடையே இடம்பெற்ற கலந்துரையாடலை அடுத்து இத்தீர்மானத்தை எட்டியுள்ளதாக அச்சம்மேளனம் தெரிவித்துள்ளது.

சமீபத்திய அரசாங்கத்தின் வரிக் கொள்கை, வரித் திருத்தம், மின்சாரக் கட்டண அதிகரிப்பு உள்ளிட்ட அரசாங்கத்தின் மக்கள் விரும்பத்தகாத பல முடிவுகளுக்கு எதிராக மார்ச் 15 அன்று தொழில் வல்லுநர்களின் தொழிற்சங்கக் கூட்டின் தலைமையில் நாடு தழுவிய ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தில் FUTA இணைந்தது.

அதனைத் தொடர்ந்து அதற்கு அடுத்த நாள் அடையாள வேலைநிறுத்தம் வாபஸ் பெறப்பட்டதையடுத்து சேவைகள் வழமைக்கு திரும்பிய போதிலும், தமது கோரிக்கைகளுக்கு திருப்திகரமான தீர்வுகள் வழங்கப்படாததால் FUTA தனது தொழிற்சங்கப் போராட்டத்தைத் தொடர முடிவு செய்தது.

இதன் காரணமாக, 2022 க.பொ.த உயர்தரப் பரீட்சை வினாத்தாள்கள் திருத்தும் பணி சுமார் 50 நாட்கள் தாமதமானதால், மாணவர்களின் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் எதிர்காலம் குறித்து கவலை வெளியிட்டிருந்தனர்.

இந்தப் பின்னணியில், க.பொ.த. உயர்தரப் பரீட்சை வினாத்தாள்களை திருத்தும் செயன்முறையை முடிவு செய்வதற்காக FUTA நேற்று இரவு ஒரு விசேட கூட்டத்தைக் கூட்டியதைத் தொடர்ந்து குறித்த முடிவை அறிவித்துள்ளது.

ஆயினும் தங்களுக்கு சிறந்த முடிவை எடுக்கும் வரை க.பொ.த. உயர்தரப் பரீட்சை வினாத்தாள்களை திருத்தும் பணிகளில் பங்கேற்பது தொடர்பான தீர்மானத்தை ஒத்திவைப்பதாக சம்மேளனம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, 2023 மே 15 ஆம் திகதி ஆரம்பமாகவிருந்த 2022 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சை இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டு மே 29 ஆம் திகதிக்கு பிற்போடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் திங்கட்கிழமை (10) அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...