மருதமுனையின் குறைபாடுகளை நேரில் ஆராய்ந்த முஷாரப் எம்.பி

கல்முனை பிரதேச செயலக அபிவிருத்திக்குழுக் கூட்டம் கல்முனை பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுத் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி எஸ்.எம்.எம்.முஷாரப் தலைமையில் அண்மையில் கல்முனை பிரதேச செயலகத்தில் நடைபெற்றது. கல்முனை பிரதேச செயலாளர் ஜே.லியாக்கத் அலி இக்கூட்டத்திற்கான ஏற்பாடுகளை செய்திருந்தார்.

இக்கூட்டத்தில் கல்முனை பிரதேச செயலகப் பிரிவிற்குப்பட்ட பல்வேறு பிரச்சினைகள் ஆராயப்பட்டன. இதற்கமைவாக இக்கூட் டத்தில் எடுக்கப்பட்ட விசேட தீர்மானங்களுக்கு அமைவாக பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எஸ்.எம்.எம்.முஷாரப் மருதமுனைக்கு வருகை தந்து மக்கள் பிரச்சினைகள் பலவற்றை ஆராய்ந்தார்.

இதற்கமைவாக மருதமுனை 65 மீட்டர் சுனாமி வீட்டுத்திட்டத்தைப் பார்வையிட்டு எஞ்சியிருக்கின்ற வீடுகளை எதிர்வரும் சித்திரைப் புத்தாண்டுக்கு முன்னர் உரிய பயனாளிகளிடம் கையளிக்கத் தீர்மானிக்கப்பட்டது. ஒரு வார காலத்திற்குள் பயனாளிகளின் பட்டியலைப் பூர்த்தி செய்யுமாறு பிரதேச செயலாளரை பாராளுமன்ற உறுப்பினர் முஷாரப் கேட்டுக் கொண்டார்.

வீட்டுத் திட்டத்தின் நிலைமை கண்டு வியப்படைந்த அவர், "முதலில் உரிய பயனாளிகளுக்கு வீடுகளை வழங்குவோம். நாட்டின் பொருளாதார நிலைமை சீரடைந்ததன் பின்னர் திருத்த வேலைகளைச் செய்து கொடுப்போம். அதற்கிடையில் முடியுமானவர்கள் வீடுகளை படிப்படியாக திருத்திக் கொள்ள முடியும். அவர்களுக்கு வீடுகள் சொந்தமானாலே அவர்கள் தமது வீடுகளை திருத்தம் செய்ய முன்வருவார்கள்" எனத் தெரிவித்தார்.

சுனாமி இடம்பெற்று 19 வருடங்கள் கடந்து விட்ட நிலையிலும் - இதுவரை உரிய பயனாளிகளுக்கு வீடுகளைக் கையளிக்காமல் இருப்பது ஆரோக்கியமான செயற்பாடு அல்ல என்றும் அவர் குறிப்பிட்டார்.

அதைத் தொடர்ந்து நீண்டகாலப் பிரச்சினையாக இருக்கின்ற பெரியநீலாவணை இஸ்லாமிக் றிலீப் தொடர்மாடி வீட்டுத்திட்டத்தின் கழிவுநீர் அகற்றல் பிரச்சினையை நேரில் சென்று பார்வையிட்ட அவர், அங்குள்ள பிரச்சினைகளை மக்களிடம் கேட்டறிந்து இப்பிரச்சினைக்கு விரைவில் பொருத்தமான தீர்வொன்றைக் காண்பதாகத் தெரிவித்தார்.

அதன் பின்னர் ஷம்ஸ் மத்திய கல்லூரி தேசிய பாடசாலை மற்றும் அல்மனார் மத்திய கல்லூரி தேசிய பாடசாலைகளுக்குச் சென்று அங்குள்ள பிரச்சினைகளையும் ஆராயும் விசேட கலந்துரையாடலிலும் கலந்து கொண்டார்.

இவருடன் கல்முனை பிரதேச செயலாளர் ஜே.லியாகத் அலி,முஹம்மட்ஷா,ஜௌபர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

பி.எம்.எம்.ஏ. காதர்
(மருதமுனை தினகரன் நிருபர்)


Add new comment

Or log in with...