இலங்கை கிரிக்கெட் தொடர்பில் உத்தியோகபூர்வ பேச்சுவார்த்தை ஒன்றுக்காக இணையும்படி சர்வதேச கிரிக்கெட் கெளன்சிலுக்கு விளையாட்டுத் துறை அமைச்சர் அழைப்பு விடுத்துள்ளார்.
இலங்கை கிரிக்கெட் நிர்வாகத்தில் அரசியல் தலையீடு இருப்பது தொடர்பில் விசாரிப்பதற்கு சர்வதேச கிரிக்கெட் கெளன்சில் (ஐ.சி.சி) மூன்று பேர் கொண்ட குழுவை நியமித்திருப்பதாகவும், அது தொடர்பில் உறுதியாகத் தெரிந்து கொள்வதற்கு அவர்களை வரவேற்று தம்மிடம் இருக்கும் தகவல்களை அவர்களுடன் பகிர்ந்து கொள்வதற்கு எதிர்பார்ப்பதாகவும் விளையாட்டுத்துறை அமைச்சர், ஐ.சி.சி தலைவர் கிரேக் பாக்லோவுக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
அதேபோன்று இலங்கை கிரிக்கெட் நிறுவனம் சுயாதீனம் கொண்டதாக இருக்க வேண்டும் என்ற ஐ.சி.சியின் நிலைப்பாட்டை விளையாட்டுக்குப் பொறுப்பான அமைச்சர் என்ற வகையில் தாமும் ஏற்பதாக அமைச்சர் அந்தக் கடிதத்தில் மேலும் வலியுறுத்தியுள்ளார்.
மேலும் விளையாட்டு சங்கங்கள் மற்றும் சம்மேளனங்களின் செயற்பாடுகளில் விளையாட்டு அமைச்சு நாட்டில் இருக்கின்ற சட்டங்களுக்கு அமைவாகவே பங்களிப்புச் செய்கிறது என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அதேபோன்று இறுதியாக தற்போது செய்தியாக மாறியிருக்கும் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் செயற்பாடுகளுக்கு அரசியல் தலையீடு இருப்பதாகக் கூறும் குற்றச்சாட்டு தொடர்பில் விளக்கம் அளிப்பதற்காக சர்வதேச கிரிக்கெட் கெளன்சிலின் அதிகாரிகள் மற்றும் விளையாட்டு அமைச்சு அதிகாரிகள் இடையே உத்தியோகபூர்வ பேச்சுவார்த்தை ஒன்றை நடத்துவது மிகப் பொருத்தமானது என இந்தக் கடிதத்தின் மூலம் விளையாட்டுத் துறை அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
Add new comment