நோன்பின் தாற்பரியங்கள்

இஸ்லாத்தின் ஐம் பெரும் கடமைகளில் ஒன்றான நோன்பு தனித்துவமான சிறப்புக்களைக் கொண்டிருக்கின்றன. இறைவனுக்கு முழுமையாகக் கட்டுப்பட்டு நடக்கும் மனிதர்களை உருவாக்குவதற்கான ஒரு பயிற்சிப் பாசறையாக இது மிளிர்கிறது.

அறபு மொழியில் நோன்பை குறிக்கும் 'ஸவ்ம்' எனும் சொல் விலகியிருத்தல், தவிர்ந்துகொள்ளல் என்பதைக் குறிக்கும். ஒரு முஸ்லிம் அல்லாஹ்வுக்காக என்ற தூய எண்ணத்தோடு உண்ணல், பருகல், உடலுறவு கொள்ளல் போன்ற அனுமதிக்கப்பட்ட காரியங்களிலிருந்து அதிகாலை முதல் சூரியன் மறையும் வரையும் விலகியிருத்தலைக் குறிக்க இச்சொல் பயன்படுகிறது.

நோன்பானது தட்டி கழிக்க முடியாத ஒரு கட்டாயக் கடமை. நியாயமான காரணமின்றி ஒருவர் ரமழானில் நோன்பை விட்டுவிடுவது பெரும் பாவம் என்ற கருத்தை இமாம்கள் கொண்டுள்ளனர். நோன்பு கடமை என்பதை பின்வரும் அல்குர்ஆன் வசனம் தெளிவுபடுத்துகிறது. 'ஈமான் கொண்டவர்களே... உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதியாக்கப்பட்டிருந்தது போன்று உங்கள் மீதும் (அது) விதியாக்கப்பட்டுள்ளது. (அதன் மூலம்) நீங்கள் இறையச்சமுடையோர் ஆகலாம்'.

(பகரா - 183)

'ரமழான் மாதம் எத்தகையதென்றால் அதில் தான் மனிதர்களுக்கு (முழுமையான வழிகாட்டியாகவும், தெளிவான சான்றுகளைக் கொண்டதாகவும் (நன்மை - தீமை) களைப் பிரித்தறிவிப்பதுமான அல்-குர்ஆன் இறக்கியருளப் பெற்றது. ஆகவே , உங்களில் எவர் அம்மாதத்தை அடைகிறாரோ , அவர் அம்மாதம் நோன்பு நோற்க வேண்டும். எனினும் எவர் நோயாளியாகவோ அல்லது பயணத்திலோ இருக்கிறாரோ (அவர் அக்குறிப்பிட்ட நாட்களின் நோன்பை) வேறு நாட்களில் நோற்க வேண்டும். அல்லாஹ் உங்களுக்கு இலகுவானதை நாடுகிறானே தவிர, உங்களுக்கு சிரமமானதை அவன் நாடவில்லை. குறிப்பிட்ட நாட்கள் (நோன்பில் விடுபட்டுப் போனதைப்) பூர்த்தி செய்யவும் உங்களுக்கு நேர்வழி காட்டியதற்காக அல்லாஹ்வின் மகத்துவத்தை நீங்கள் போற்றி நன்றி செலுத்துவதற்காகவுமே (அல்லாஹ் இதன் மூலம் நாடுகிறான்.)

(அல் பகரா:185)

நோன்பு பல்வேறு வழிகளில் சிறப்புப் பெறுகிறது. அவற்றில் நோன்பும் அல்குர்ஆனும் அடியானுக்காக மறுமையில் மன்றாடும். 'என் இரட்சகனே.... பகலில் இவனை உணவை விட்டும் ஆசைகளை விட்டும் தடுத்தேன். இவனது விடயத்தில் எனது பரிந்துரையை ஏற்றுக்கொள் என நோன்பு கூறும். இரவில் இவனைத் தூக்கத்தை விட்டும் தடுத்தேன். இவனது விடயத்தில் எனது பரிந்துரை ஏற்றுக்கொள் என குர்ஆன் கூறும். அவ்விரண்டினதும் பரிந்துரைகள் ஏற்கப்படும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: அஹ்மத்)

மேலும் யார் ரமழானில் ஈமானுடனும் அல்லாஹ்விடத்தில் கூலியை எதிர்பார்த்த நிலையிலும் நோன்பு நோற்கிறாரோ அவரது முன்னைய பாவங்கள் மன்னிக்கப்படும்.

(ஆதாரம்: புஹாரி, முஸ்லிம்)

மேலும் நோன்பு கணக்கற்ற கூலியைப் பெற்றுத்தரக்கூடியது. மனிதனின் செயல்கள் அனைத்துக்கும் பன்மடங்கு கூலி வழங்கப்படும். ஒரு நன்மைக்குப் பத்து முதல் எழுநூறு மடங்கு வரை கூலி வழங்கப்படும். நோன்பைத் தவிர, அது எனக்குரியது .அதற்குரிய கூலியை நானே வழங்குவேன். அவன் தனது ஆசையையும் உணவையும் எனக்காக விட்டு விடுகிறான் என அல்லாஹ் கூறுவதாக நபி (ஸல்) அவர்கள் குறிப்பிட்டார்கள்.

(ஆதாரம்: புஹாரி, முஸ்லிம்)

நோன்பாளிக்கு இரு சந்தோஷங்கள் உள்ளன. ஒன்று நோன்பு திறக்கும் போது அடையும் சந்தோஷம் மற்றையது தன் இரட்சகனைச் சந்திக்கும் போது அடையும் சந்தோஷம். (ஆதாரம்: புஹாரி, முஸ்லிம்)

மேலும் சுவனத்தில் ரய்யான் என அழைக்கப்படும் ஒரு வாயில் உண்டு. மறுமையில் நோயாளிகள் அவ்வாயினூடாக சுவனம் நுழைவர். அவர்களைத் தவிர வேறு யாராலும் அவ்வாயிலினால் சுவனம் நுழைய முடியாது. நோன்பாளிகள் எங்கே? என அழைப்பு விடுக்கப்படும். அவர்கள் எழுந்து சுவனத்தில் நுழைவர். அவர்கள் நுழைந்தவுடன் அவ்வாயில் மூடப்பட்டுவிடும். அவ்வாயிலினால் வேறு எவரும் உட்புக முடியாது. (ஆதாரம்: புஹாரி, முஸ்லிம்)

நோன்பு காலத்தில் ஒவ்வொரு நாளும் ஒரு முஸ்லிம் ஏறத்தாழ பதினான்கு மணித்தியாலங்கள் உண்ணாதிருக்கிறான். பருகாதிருக்கிறான். ஆசைகளை விட்டும் விலகியிருக்கிறான். இப்பயிற்சி தொடர்ந்து ஒரு மாதத்துக்கு கிடைக்கிறது. எனவே பொறுமைக்கான நீண்டதொரு பயிற்சியாக இந்நோன்பு அமைகிறது. பொறுமையின் மாதத்தில் நோன்பு நோற்பதும் உள்ளத்தில் அக்கினியை அழிந்து விடும்.

(ஆதாரம்: இப்னு மாஜா)

மனிதன் ஆன்மீக ரீதியில் தன்னை வளர்த்துக் கொள்வதற்கான சூழல் நிலவும் மாதமே ரமழான். அம்மாதத்தில் ஆன்மீக விருத்தி, அருட்கொடைகளை உணர்தல், ஏழைகளின் துயரத்தை விளங்குதல், உடல் ஆரோக்கியம் கிட்டல், இறைவனுக்கு முழுமையாக அடிபணியப் பயிற்சி போன்ற ஆன்மீக பயிற்சிகளை அடைந்து கொள்ள முடியும்.

வாழ்கையின் அனைத்து சந்தர்பங்களிலும் இறை கட்டளைகளை சிரமேற்கொண்டு தொழிற்படுவது ஒரு முஸ்லிமின் சிறபுப் பண்பாகும்.

இப்பண்பை வளர்க்க ஒரு நீண்ட களப்பயிற்சியை வழங்குகின்றது நோன்பு.

எனவே இந்த அருமையான சந்தர்ப்பங்களை நழுவ விடாமல் நோன்பின் உண்மையான தாத்பரியங்களையும் சிறப்புகளையும் அறிந்து இவ்வருட ரமழானை கழிப்பது இன்றியமையாததாகும்.

மௌலவி

எம்.யூ.எம்.வாலிஹ்...

(அல் அஸ்ஹரி, பாரி)


Add new comment

Or log in with...