உலகின் தமிழ் இலக்கியவாதிகளுக்கு பாலமாக திகழ்பவர் நித்தியானந்தன்

கல்வியியலாளர், எழுத்தாளர், ஊடகவியலாளர், திறனாய்வாளர் என்றெல்லாம் பன்முகத்திறமை மிகுந்த மு. நித்தியானந்தன் இன்று தனது எழுபத்தைந்தாவது பிறந்ததினத்தைக் கொண்டாடுகின்றார். இலங்கையின் மலையகத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட நித்தியானந்தன் அவர்கள், பல தசாப்த காலத்துக்கு முன்னரே இங்கிலாந்தின் லண்டன் நகரில் குடியேறி அங்கு வசித்து வருகின்றார்.

தமிழ் கூறும் நல்லுலகில் இலக்கியம் மற்றும் கல்விப் பரப்பில் நித்தியானந்தனைத் தெரியாதவர்கள் இருக்க முடியாது. இலங்கையிலிருந்து துயரவடுக்களுடன் புலம்பெயர்ந்து சென்றாலும், தாம் வாழும் தேசத்தில் மிடுக்குடன் மீண்டெழுந்து உலகெங்கும் வாழ்கின்ற இலக்கிய நெஞ்சங்களுக்கிடையே நல்லுறவுப் பாலமாகப் பணியாற்றி வருகிறார் அவர்.

அக்கால நண்பர்கள் மற்றும் இலக்கிய அன்பர்களுடன் நெருங்கிய தொடர்பை ஏற்படுத்திக் கொண்டு இன்றுவரை படைப்பிலக்கியத்துறையில் உத்வேகத்துடன் செயற்பட்டு வருகின்றார் நித்தியானந்தன். பத்திரிகைகள், இணையத்தளங்கள் மற்றும் சமூக ஊடகங்களில் இலக்கிய ஆக்கங்களையும் விமர்சனங்களையும் அவ்வப்போது பதிவிட்டு, இலக்கியவாதிகளுக்ேக புதுத்தென்பூட்டி வருகின்றார் அவர்.

நித்தியானந்தனுக்கும் எமது தினகரனுக்கும் நெருங்கிய தொடர்பு அக்காலம் தொடக்கம் இன்றுவரை இருந்து கொண்டே வருகின்றது. தினகரன் பத்திரிகையில் ஆர்.சிவகுருநாதன் பிரதம ஆசிரியராகப் பணியாற்றிய காலத்தில், தினகரனில் நித்தியானந்தன் துணை ஆசிரியராகப் பணியாற்றினார். அப்போது, தினகரனில் வெளியாகி வந்த 'தொழிலாளர் உலகம்' என்ற சிறப்புப் பகுதிக்குப் பொறுப்பாக அவர் இருந்தார்.

அவர் மிகவும் எளிமையான சுபாவம் கொண்டவர். தினகரனில் பணியாற்றிய காலப்பகுதியில், மிகவும் நலிவுற்ற மக்களும் இலகுவாக அணுகக் கூடிய ஒருவராக நித்தியானந்தன் விளங்கினார். எழுத்தார்வம் கொண்டவர்களை ஊக்குவித்தும், அவர்களுக்கு தினகரனில் களம் அமைத்துக் கொடுத்தும் பெரும் உதவிகள் புரிந்தார். சாதாரண எழுத்தாளர்கள் அனுப்புகின்ற சிறிய ஆக்கங்களைக் கூட தனது கையினால் மீண்டும் விரிவாக எழுதி தினகரனில் பிரசுரித்து அவர்களை மகிழ்வித்து, அந்த மகிழ்ச்சியில் திருப்தியடையும் சிறந்த சுபாவத்தை அவர் கொண்டிருந்தார். அது அவருக்கேயுரிய தனித்துவப் பண்பாக இருந்தது.

தன்னுடைய பதவியில் மற்றவருக்கு உதவுவதற்கு எவ்வளவு தூரம் அப்பால் செல்ல முடியுமோ, அந்த எல்லைக்கு அப்பாலும் சென்று உதவக் கூடியவர் நித்தி. எல்லாச் சந்தர்ப்பங்களிலும் அந்த உயர்பண்பை அவர் பேணி வந்திருக்கிறார்

அதேசமயம் நித்தியிடம் கல்வித்தகைமை மாத்திரமன்றி, பெரும் ஆற்றல்களும் குடிகொண்டிருந்தன. யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்திற்கு அவர் பொருளியல்துறை விரிவுரையாளராகச் சென்றபோது, மலையகத்தின் முக்கிய எழுத்தாளர்களின் படைப்புகளை தனது சொந்தச் செலவிலேயே புத்தகமாக்கி வெளியிட்டார்.

நித்தி வெளியிட்ட நூல்களுக்கு மக்கள் மத்தியில் பெரும் ஆதரவு இருந்தது. அவரால் யாழ் பல்கலைக்கழகத்தில் நெடுங்காலம் பணியாற்ற முடியவில்லை. ஆயுதப் போராட்டமும், உள்நாட்டு யுத்தமும் படிப்படியாக வளரத் தொடங்கியதும் அதன் விளைவினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டவர்களில் நித்தியானந்தனும் ஒருவராவார். அவர் முதலில் தமிழ்நாட்டுக்கு இடம்பெயர்ந்தார். அதன் பின்னர் இங்கிலாந்துக்குப் புலம்பெயர்ந்து சென்று அங்கேயே நிரந்தரமாக வாழத் தொடங்கினார்.

மலையக எழுத்தாளர்களின் ஆக்கங்களை நூலுருவில் வெளிக்ெகாணர்ந்தவர்களில் நித்தியானந்தன் குறிப்பிட்டுக் கூறக்கூடியவர். சி.வி. வேலுப்பிள்ளையின் 'நாடற்றவர் கதை' என்ற நூலை வெளியிட்டவர் நித்தி ஆவார்.அமரர் இர. சிவலிங்கம் அவர்களுடன் நெருக்கமானவராக இருந்தார். இர. சிவலிங்கம் அவர்களின் மறைவுக்குப் பின் அவரின் முழு ஆக்கங்களையும் தேடிச் சேகரித்து, அவற்றுக்கு அழகிய தலைப்புகள் இட்டு அதனை நூலுருப் பெறச் செய்ததில் நித்திக்குப் பெரும் பங்குண்டு. அவர் லண்டனில் வாழ்ந்தாலும் மலையகம் மீதான தனது அபிமானத்தை என்றுமே பேணி வருகின்றார்.

நித்தி எப்போதுமே மிகுந்த இரக்க சுபாவம் படைத்தவர். எழுத்தாளர்கள் கஷ்டமுறும்போது ஆதரவளிக்கத் தவறியதில்லை. இலக்கியம் சம்பந்தப்பட்ட பணிகளில் அவர் ஒருபோதுமே சளைத்ததில்லை. அவர் அயராது பணியாற்றக் கூடியவர். நூலாக்கப் பணிகளின் போது அந்நூல்

நேர்த்தியாக வரவேண்டுமென்பதில் நித்தி உறுதியாக இருப்பார். சிறுகதை மற்றும் நாவல்களை நூலாக்கும் போது மிகவும் திருத்தமாக ஒப்புநோக்கி, பிழைகளைத் திருத்துவதில் அவர் போல வேறு எவரையும் காண முடியாது. அச்சுப்பிழைகளின்றி நூல்கள் வெளிவர வேண்டும் என்பதில் உறுதியானவர் அவர்.

தனது தாயகமான இலங்கையிலும், தமிழகத்திலும், தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழும் அனைத்து நாடுகளிலும் வாழ்கின்ற கலை இலக்கிய ஆளுமைகளுடன் தொடர்புகளை வலுப்படுத்தி கலைப்பாலமாக நித்தி திகழ்ந்து வருகின்றார்.

முப்பது வருட காலம் நீடித்த உள்நாட்டுப் போரானது சிதைத்து சீரழித்து விட்ட துறைகளில் இலக்கியமும் ஒன்றாகும். ஈழத்து தமிழ் இலக்கியத்துறைக்கு புத்துயிரூட்டி உயிர்ப்பித்தவர்களில் குறிப்பிட்டுக் கூறக்கூடியவரான நித்தியானந்தனை இன்றைய அகவை 75 இல் வாழ்த்துவதில் தினகரன் பெருமை கொள்கின்றது.


Add new comment

Or log in with...