மறைந்த ஜோசப் மைக்கல் பெரேராவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி பாராளுமன்றில் இறுதி அஞ்சலி

- சபாநாயகர், எதிர்க்கட்சித் தலைவர், ஆளும் கட்சி எதிர்க்கட்சி எம்.பிக்களும் அஞ்சலி

தலைசிறந்த அரசியல்வாதியும், இலங்கை பாராளுமன்றத்தின் முன்னாள் சபாநாயகரும், அமைச்சரவை அமைச்சருமான, மறைந்த ஜோசப் மைக்கல் பெரேராவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (30) இறுதி அஞ்சலி செலுத்தினார்.

இன்று, அவரது பூதவுடல் தாங்கிய விஷேட வாகனம், பொலிஸ் வாகன தொடரணியுடன் பாராளுமன்ற வளாகத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

பாராளுமன்றத்தின் பிரதான நுழைவாயில் அருகே பூதவுடல் கொண்டு வரப்பட்ட பின்னர், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள், சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன உள்ளிட்ட ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் செங்கம்பளத்தின் ஊடாக பாராளுமன்ற கட்டிடத்திற்கு முன்னால் உள்ள மண்டபத்தில் அமைந்துள்ள விசேட வைபவ மண்டபத்திற்கு பூதவுடல் எடுத்துச் செல்லப்பட்டு இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

பின்னர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன ஆகியோர் மலர்வலயங்களை வைத்து அவரது பூதவுடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர்.

அதேபோன்று, பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோரும், அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரும் இறுதி அஞ்சலி செலுத்தினர். 

மேலும், முன்னாள் ஜனாதிபதிகளும் பாராளுமன்ற உறுப்பினர்களுமான மஹிந்த ராஜபக்ஷ மற்றும் கௌரவ மைத்ரிபால சிறிசேன, பாராளுமன்றத்தின் முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய ஆகியோரும் இறுதி அஞ்சலி செலுத்துவதற்காகக் கலந்துகொண்டனர். 

அவர்களுக்கு மேலதிகமாக, இராஜதந்திர அதிகாரிகள், பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க உள்ளிட்ட செயலாளர் குழு, பாராளுமன்ற செயலகத்தின் பணியாளர்கள், முன்னாள் பணியாளர்கள், பாராளுமன்றத்துடன் இணைந்த ஏனைய பணியாளர்கள் மற்றும் குடும்ப அங்கத்தவர்களும் இதன்போது கலந்துகொண்டனர். 

இன்று (30) மு.ப 09.00 மணிக்கு மறைந்த ஜோசப் மைக்கல் பெரேராவின் பூதவுடல் தாங்கிய வாகனத் தொடரணி பாராளுமன்றத்தின் பிரதான நுழைவாயிலை வந்தடைந்த போது, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ, கட்சித் தலைவர்கள், பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தசநாயக்க, பாராளுமன்ற பணியாட்தொகுதியின் பிரதானியும் பிரதி செயலாளர் நாயகமுமான குஷானீ ரோஹணதீர ஆகியோரால் பூதவுடல் பொறுப்பேற்கப்பட்டது.

பின்னர் படைக்கலசேவிதர், பிரதிப் படைக்கலசேவிதர், உதவிப் படைக்கலசேவிதர் ஆகியோர் முன்னிலையில் செல்ல பூதவுடல் செங்கம்பளத்தின் ஊடாக பாராளுமன்ற விசேட வைபவ மண்டபத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டு அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. 

அதனையடுத்து, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன மற்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆகியோர் ஜோசப் மைக்கல் பெரேரா அவர்களின் பூதவுடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தியதுடன் இரங்கல் அறிக்கையையும் பதிவு செய்தனர்.

அதனையடுத்து பிரதி சபாநாயகர், எதிர்க்கட்சித் தலைவர், கட்சித் தலைவர்கள், முன்னாள் ஜனாதிபதிகள், பாராளுமன்ற உறுப்பினர்கள், இராஜதந்திர அதிகாரிகள், பாராளுமன்ற செயலாளர் குழு மற்றும் செயலகத்தின் பணியாளர்கள் உள்ளிட்டவர்கள் இறுதி அஞ்சலி செலுத்த இணைந்துகொண்டனர். 

பூதவுடல் சபாநாயகர் உள்ளிட்டவர்களால் செங்கம்பளத்தின் ஊடாக எடுத்துச்செல்லப்பட்டு வாகனத்தில் வைக்கப்பட்ட பின்னர் நிகழ்வு நிறைவடைந்தது. 

1941 செப்டெம்பர் மாதம் 15 ஆம் திகதி பிறந்த ஜோசப் மைக்கேல் பெரேரா, 2001 டிசம்பர் 19 முதல் 2004 பெப்ரவரி 07 வரை இலங்கை பாராளுமன்றத்தின் 17 ஆவது சபாநாயகராகப் பணியாற்றினார்.

  • 1964-1967 ஜா-எல நகர சபை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்
  • 1967-1970 ஜா-எல நகர சபையின் உப தலைவராக நியமிக்கப்பட்டார்
  • 1970-1971 ஜா-எல நகர சபையின் தலைவராக நியமிக்கப்பட்டார்
  • 1971-1976 எதிர்க்கட்சியின் பிரதம கொறடா (முதற்கோலாசானாக) பணியாற்றியிருந்தார். (UNP)
  • 1976-1977 முதலாவது தேசிய அரச பேரவை (பாராளுமன்ற) உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்
  • 1977-1978 இரண்டாவது தேசிய அரச பேரவை (பாராளுமன்ற) உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்
  • 1978-1988 இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் முதலாவது பாராளுமன்றத்திற்கு பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டார்.

Add new comment

Or log in with...