அரசியல் பழிவாங்கல்களை ஆராயும் ஆணைக்குழுவின் நடவடிக்கை நிறுத்தம்

சட்ட மா அதிபர் நேற்று உயர் நீதிமன்றத்திற்கு அறிவிப்பு

அரசியல் பழிவாங்கல் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள விசாரணை ஆணைக்குழு மூலம் முன்வைக்கப்பட்டுள்ள பரிந்துரைகள் மற்றும் ஆய்வுகள் உட்பட்ட எதிர்கால நடவடிக்கைகளை இடைநிறுத்துவதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக சட்டமா அதிபர் நேற்று உயர் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.

அதேவேளை அந்த ஆணைக்குழுவின் பரிந்துரைகளை செல்லுபடியற்றதாக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மனுமீதான விசாரணை, நேற்று நீதிமன்றத்தில் இடம்பெற்ற சந்தர்ப்பத்திலேயே சட்டமா அதிபர் சஞ்சய் இராஜரட்ணம் மேற்படி தகவலை நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.

குறித்த ஆணைக்குழுவின் பரிந்துரைகளை செல்லுபடியற்றதாக்கக் கோரி உயர் நீதிமன்றத்தில் பல்வேறு தரப்பினராலும் ஒன்பது அடிப்படை உரிமை மனுக்கள் தாக்கல்செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

முன்னாள் உயர் நீதிமன்ற நீதிபதி உபாலி அபேரத்னவின் தலைமையில் அரசியல் பழிவாங்கல் தொடர்பாக ஆராய்வதற்காக விசாரணைக்குழு நியமிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

(லோரன்ஸ் செல்வநாயகம்)


Add new comment

Or log in with...