கட்டுமரத்தில் மீன்பிடிக்கச் சென்றவர் கடலில் மூழ்கி மரணம்

- நன்றாக நீந்தத் தெரிந்தவர் என மனைவி தெரிவிப்பு
- காப்பாற்ற கடற்படை எடுத்த முயற்சி பலனளிக்கவில்லை

கட்டுமரத்தில் கரையோரமாக மீன் பிடிக்கச் சென்ற மீனவர் ஒருவர் கடலில் மூழ்கியமையால் மரணத்தை தழுவிக் கொண்டார். அவரை காப்பாற்ற கடற்படையினர் எடுத்த முயற்சி பயனளிக்கவில்லை என தெரிவிப்பு.

இச்சம்பவம் நேற்று முன்தினம் (26) பிற்பகல் தலைமன்னார் பியரில்  இடம்பெற்றுள்ளது..

இம்மரணம் தொடர்பாக மரண விசாரனையின் மூலம் தெரியவருவதாவது,

தலைமன்னார் பியரை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட மூன்று பிள்ளைகளின் தந்தையான முகம்மது நஃபில்கான் (வயது 36 ) ஞாயிற்றுக் கிழமை பிற்பகல் தனது சக மீனவ நண்பர் ஒருவருடன் கட்டுமரத்தில் தலைமன்னார் பியர் பாலத்தடியில் மீன்பிடியில் ஈடுபட்டுள்ளார்.

இச்சமயம் இறந்தவர் கட்டுமரத்தில் பின்பக்கமும் இவருடன் சென்ற மற்றைய மீனவர் கட்டுமரத்தில் முன் பக்கமும் இருந்து கொண்டே மீன் பிடியில் ஈடுபட்டுள்ளனர்.

அச்சமயம் இறந்தவர் கட்டுமரத்திலிருந்து; திடீரென கடலுக்குள் கீழே விழுந்ததும் இவர் கடலுக்குள் இருந்து மேலே உடன் வராமையால் இவர்களுக்கு அருகாமையில் பாலத்தின் மேல் இச்சம்பவத்தைக் கண்காணத்துக் கொண்டிருந்த கடற்படையினர் கடலுக்குள் குதித்து இவரை உடன் மீட்டெடுத்தனர்.

அச்சமயம் இவரின் உயிர் பிரிந்திருந்ததை உணரக்கூடியதாக இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருந்தும் இவரை கடற்படையின் தங்கள் வாகனத்தில் தலைமன்னார் வைத்திசாலைக்கு உடன் எடுத்துச் சென்றுள்ளதாகவும் மரண விசாரனையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் பின்னர் இவரின் உடல் மன்னார் பொது வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்கு மரண விசாரணையும் உடற்கூற்று பரிசோதனையும் இடம்பெற்றது.

மரண விசாரணையில் இறந்தவரின் மனைவி சாட்சியம் அளித்துள்ளார்.

இச்சாட்சியத்தில் இறந்தவர் நன்கு நீந்தத் தெரிந்தவர் எனவும் ஆனால் அடிக்கடி இவருக்கு வலிப்பு ஏற்படுவதாகவும் இதனால் இவர் வலிப்புக்கு உள்ளாகி கடலில் மூழ்கியிருக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டது.

மன்னார் மரண விசாரனை அதிகாரி எஸ்.ஈ.குமணகுமார்  இவ்மரண விசாரனையை மேற்கொண்டிருந்தார்.

இறந்தவரின் உடற்கூற்று பரிசோதனை முடிவுற்றதும் உடலை அவரின் உறவினரிடம் ஒப்படைக்கும்படி மரண விசாரனை அதிகாரி பொலிசாருக்கு கட்டளைப் பிறப்பித்திருந்தார்.

(தலைமன்னார் விஷேட நிருபர் - வாஸ் கூஞ்ஞ)


Add new comment

Or log in with...