சமுர்த்தி நிவாரணம் பெறும் பயனாளர்கள் மற்றும் குறைந்த வருமானம் பெறும் 20 இலட்சத்துக்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு மாதமொன்றுக்கு 10 கிலோ வீதம் இரு மாதங்களுக்கு இலவசமாக அரிசி வழங்கும் வேலைத்திட்டம் நேற்று உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
2022 ஆம் ஆண்டின் ஆரம்பம் முதல் இந்நாடு கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு முகம்கொடுத்தது. தற்போது அந்நெருக்கடியில் இருந்து கட்டம் கட்டமாக நாடு மீட்சி பெற்றுக் கொண்டிருப்பதும் இங்கு சுட்டிக்காட்ட வேண்டிய விடயம்.
பொருளாதார நெருக்கடியின் விளைவான தாக்கங்களும் பாதிப்புகளும் சாதாரணமானவை அல்ல. அவை குறைந்த வருமானம் பெறும் குடும்பங்கள் மத்தியில் கடும் அழுத்தங்களை ஏற்படுத்தியுள்ளன. இவை மறைக்க முடியாத உண்மையாகும்.
இந்த நிலையில்தான் பொருளாதார நெருக்கடியின் தாக்கங்கள் சமுர்த்தி நிவாரணம் மற்றும் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு சுமையாக அமைவதைத் தவிர்க்கும் வகையில் இலவசமாக அரிசி வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு இருக்கின்றது.
பொருளாதார நெருக்கடி தோற்றம் பெற்றது முதல் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களின் நலன்களை முன்னிலைப்படுத்தி அவ்வப்போது பொருளாதார நிவாரண நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவது மறைக்க முடியாத உண்மையாகும். முற்றிலும் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களின் பொருளாதார நலன்களை முன்னிலைப்படுத்தியே இந்நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. இப்பொருளாதார நெருக்கடியின் தாக்கங்கள் குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கு ஒரு போதும் சுமையாகவும் அழுத்தமாகவும் அமைவதைத் தவிர்ப்பதே இத்திட்டங்களின் இலக்காகும்.
அந்த வகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, சமுர்த்தி நிவாரணம் பெறும் பயனாளர்கள் உட்பட குறைந்த வருமானம் பெறும் இருபது இலட்சம் குடும்பங்களுக்கு மாதமொன்றுக்கு 10 கிலோ கிராம், இரு மாதங்களுக்கு மொத்தம் இருபது கிலோ கிராம் அரிசியை இலவசமாக வழங்கும் திட்டத்தை அமைச்சரவைக்கு முன்வைத்தார். ஜனாதிபதியின் இத்திட்டத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்தது.
அதற்கேற்ப 40 ஆயிரம் மெற்றிக் தொன் அரிசி இத்திட்டத்திற்கு தேவைப்படும் என்று மதிப்பிடப்பட்டதோடு, 61 ஆயிரம் மெற்றிக் தொன்னுக்கும் மேற்பட்ட நெல்லைக் கொள்வனவு செய்யவும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. இந்நடவடிக்கைகள் சிறிய மற்றும் நடுத்தர நெல் ஆலை உரிமையாளர்களின் ஆதரவுடன் மாவட்ட செயலாளர்கள் மற்றும் பிரதேச செயலாளர்கள் ஊடாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.
இத்திட்டத்தின் கீழ் நெல் கொள்வனவுக்கு 6,200 மில்லியன் ரூபாவும், நெல் உலர்த்துவதற்கு 290 மில்லியன் ரூபாவும், கதிரடிக்கும் வாடகைக்கு 590 மில்லியன் ரூபாவும், பொதிச் செலவுக்கு 200 மில்லியன் ரூபாவும், நெல் ஆலை உரிமையாளர்களுக்கு மேலதிக கொடுப்பனவாக 160 மில்லியன் ரூபாவும், அரிசியைக் கொண்டு செல்வதற்கான போக்குவரத்துச் செலவுக்கு 600 மில்லியன் ரூபாவும் என்றபடி 8,040 மில்லியன் ரூபா செலவாகுமென மதிப்பிடப்பட்டது. சந்தை விலைகளில் ஏற்படும் மாற்றங்களைப் பொறுத்து இத்திட்டத்திற்கு மதிப்பிடப்பட்ட செலவில் வித்தியாசங்கள் ஏற்படுமாயின் வரவுசெலவுத்திட்ட நிதி ஒதுக்கீட்டை இதற்குப் பயன்படுத்தவும் தீர்மானிக்கப்பட்டது.
இவ்வாறு பரந்த அடிப்படையில் கவனம் செலுத்தப்பட்டு நாட்டின் குறைந்த வருமானம் பெறும் இருபது இலட்சத்துக்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு மாதத்திற்கு 10 கிலோ வீதம் இரு மாதங்களுக்கு 20 கிலோ அரிசியை வழங்க நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இவ்வேலைத்திட்டத்தை செயலுருப்படுத்தும் நடவடிக்கைகள் நேற்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கமத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.
இத்திட்டத்தை மக்கள் பெரிதும் வரவேற்றுள்ளனர். இலவச அரிசி வழங்கும் இத்திட்டமானது குறைந்த வருமானம் குடும்பங்களுக்கு ஆறுதலாகவும் உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொள்வதற்கான ஒத்துழைப்பாகவும் அமைந்துள்ளது. இதில் ஐயமில்லை.
நாடு முகம்கொடுத்துள்ள பொருளாதார நெருக்கடியின் தாக்கங்கள் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்கள் உள்ளிட்ட அனைத்து மக்களுக்கும் பாதிப்பாகவும் சவாலாகவும் அமைவதைத் தவிர்ப்பதில் அரசாங்கம் விஷேட கவனம் செலுத்தி வருகின்றது. அந்த வகையில் தற்போது இலவசமாக அரிசி வழங்கும் திட்டம் நடைமுறைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது.
நாடு பொருளாதார நெருக்கடிக்கு உள்ளாகி மீண்டு வருகின்ற போதிலும், 08 ஆயிரம் மில்லியன் ரூபாவுக்கும் மேலான பெருந்தொகை நிதியொதுக்கீட்டில் இத்திட்டத்தை முன்னெடுப்பது இலகுவான காரியமல்ல. நாட்டு மக்களின் நலன்களுக்கு முன்னுரிமை அளித்து செயற்படுவதை இத்திட்டத்தின் ஊடாக அரசாங்கம் மீண்டும் வெளிப்படுத்தி நிற்கிறது.
ஆகவே நாடு எதிர்கொண்ட பொருளாதார நெருக்கடியின் தாக்கங்கள் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு சுமையாகவும் பாதிப்பாகவும் அமைவதைத் தவிர்க்கும் வகையில் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்களுக்கு ஆதரவும் ஒத்துழைப்பும் நல்கப்பட வேண்டும். இது அனைத்து தரப்பினரதும் பொறுப்பும் கடமையும் ஆகும்.
Add new comment