ரஷ்ய அணு ஆயுதங்கள் பெலாரஸில் நிறுத்தம்

ரஷ்யா மூலோபாய அணு ஆயுதங்களை பெலாரஸில் நிலைநிறுத்தும் என்று ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டி அறிவித்துள்ளார்.

இது அணு பரவல் தடை ஒப்பந்தத்தை மீறுவதில்லை என்று வலியுறுத்தி இருக்கும் புட்டின், ஐரோப்பாவில் அமெரிக்கா தனது ஆயுதங்களை நிலைநிறுத்தி இருப்பதை ஒப்பிட்டு குறிப்பிட்டிருப்பதாக ரஷ்ய அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.

எனினும் தமது ஆயுதங்களின் கட்டுப்பாட்டை பெலரஸிடம் வழங்காது என்றும் அவர் கூறியுள்ளார்.

இந்த அறிவிப்பை அடுத்து கருத்து வெளியிட்டிருக்கும் அமெரிக்கா, அணு ஆயுதத்தை பயன்படுத்த ரஷ்யா தயாராவதாக தாம் நம்பவில்லை என்று தெரிவித்துள்ளது.

‘எமது சொந்த மூலோபாய அணு ஆயுத போக்கை மாற்றிக்கொள்வதற்கான எந்த ஒரு காரணத்தையும் நாம் காணவில்லை’ என்று அமெரிக்க பாதுகாப்புத் திணைக்களம் வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

பெலாரஸ் போர் நடக்கும் உக்ரைனுடன் நீண்ட எல்லையை பகிர்வதோடு நேட்டோ உறுப்பு நாடுகளான போலந்து, லித்துவேனியா மற்றும் லத்வியா நாடுகளுடனும் எல்லையை பகிர்ந்துகொள்கிறது.

1990களின் நடுப் பகுதிக்குப் பின்னர் ரஷ்யா தனது ஆயுதங்களை நாட்டுக்கு வெளியில் நிலை நிறுத்துவது இது முதல் முறையாக உள்ளது.

1991இல் சோவியட் ஒன்றியம் வீழ்ந்ததால், நிலைநிறுத்தப்பட்ட அணு ஆயுதங்கள் ரஷ்யா, உக்ரைன், பெலாரஸ் மற்றும் கசகஸ்தான் ஆகிய நான்கு நாடுகளில் இருந்தன.

எனினும் அந்த ஆயுதங்களை ரஷ்யாவுக்கு எடுத்து வரும் நடவடிக்கை 1996ஆம் ஆண்டு பூர்த்தியானது.

பெலாரஸ் அரசு ரஷ்யாவின் நெருங்கிய கூட்டாளியாக இருப்பதோடு உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்புக்கு அதரவு அளித்து வருகிறது.

ரஷ்ய அரச ஊடகத்திற்கு கடந்த சனிக்கிழமை பேசிய பூட்டின், இந்த ஆயுதங்களை செயற்படுத்தும் பணியாளர்களுக்கான பயிற்சி அடுத்த வாரம் ஆரம்பிக்கப்படுவதாகவும் மூலோபாய அணு ஆயுதங்களுக்கான களஞ்சிய வசதி ஒன்று வரும் ஜூலை 1ஆம் திகதிக்கு பூர்த்தி செய்யப்படும் என்றும் குறிப்பிட்டார்.

அணு ஆயுதங்களை வீசக் கூடிய சிறிய எண்ணிக்கையிலான இனக்தர் மூலோபாய ஏவுகணை அமைப்பு ஏற்கனவே பெலாரஸுக்கு மாற்றப்பட்டிருப்பதாகவும் புட்டின் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் அணு ஆயுதம் எப்போது அங்கு அனுப்பப்படும் என்பது பற்றி அவர் கூறவில்லை.


Add new comment

Or log in with...