மல்வானை அல் மஹ்மூத் பாடசாலைக்காக தன்னை அர்ப்பணித்த அதிபர் உஸ்மான்

அதிபராக பணியாற்றிய எம்.ரி.எம். உஸ்மான் அவர்கள் மொஹமட் தாலிப்_ ஜமீலா உம்மா தம்பதிகளுக்கு இரண்டாவது மகனாக 1970.06.04 அன்று இறக்குவானையில் பிறந்தார். இறக்குவானை அஸ்ஸலாம் முஸ்லிம் மகாவித்தியாலயத்தில் ஆரம்பக் கல்வி கற்ற இவர் பேராதனை பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை வெளிவாரியாக பூர்த்தி செய்துள்ளார். பின்னர் தான் கற்ற பாடசாலையிலேயே இளம் வயதில் ஆசிரியராக சேவையாற்றிய சிறிது காலத்தில் உபஅதிபராக நியமிக்கப்பட்டார்.

இவர் இறக்குவானை சென்ஜோன்ஸ் தேசிய பாடசாலை மற்றும் ரத்னாலாலோக்க தேசிய பாடசாலை ஆகியவற்றில் ஆசிரியராக சேவையாற்றியதுடன், அட்டுலுகம அல் கஸ்ஸாலி தேசிய பாடசாலையில் பிரதி அதிபராக நியமிக்கப்பட்டிருந்தார். பின்னர் 2008ஆம் ஆண்டு அதிபர் பதவி கிடைக்கப்பெற்று நாப்பாவல முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் 3வருடங்கள் சேவையாற்றிய நிலையில் 2011 ஜூன் மாதம் மாதம் மல்வானை, உலஹிட்டிவல அல் மஹ்மூத் மகா வித்தியாலயத்திற்கு அதிபராக நியமிக்கப்பட்டார்.

மல்வானை உலஹிட்டிவல பிரதேசத்தில் அமைந்துள்ள அல் மஹ்மூத் பாடசாலையின் இரண்டாவது அதிபராக எம்.ரீ.எம். உஸ்மான் அதிபர் 2011 ஜூன் மாதம் தனது பாரியார் ஹலீமா ஆசிரியையுடன் இப்பாடசாலையில் இணைந்துகொண்டார்.

அதிபர் உஸ்மான் மேற்கொண்ட முயற்சியின் பயனாக இதுவரைக்கும் 105 மாணவர்கள் இப்பரீட்சையில் சித்தியடைந்துள்ளனர். கனிஷ்ட பாடசாலையாக இருந்து வந்த இப்பாடசாலை வித்தியாலயமாக தரம் உயர்த்தப்பட்டது. 2015ஆம் ஆண்டு க,பொ.த. சாதாரண தர பரீட்சைக்கு முதல் தடவையாக தோற்றி 90வீதமான மாணவர்கள் சித்தியடைந்திருந்தனர். அவரது முயற்சியின் பயனாக க.பொ.த. உயர்தரம் கற்கைக்கு 2020ஆம் ஆண்டு அனுமதி கிடைக்கப் பெற்றதன் மூலம் அல் மஹ்மூத் வித்தியாலயம் மகா வித்தியாலயமாக தரம் உயர்த்தப்பட்டது. சுமார் 12வருட காலம் இந்த பாடசாலைக்காக தன்னை அர்ப்பணித்த அதிபர் உஸ்மான், தனது இடமாற்றத்துக்காக காத்துக் கொண்டிந்த வேளையில் திடீர் சுகவீனமுற்று காலமானார். அவரது சேவைகள் என்றும் மக்கள் மனத்தில் நிலைத்திருக்கும்.

எம்.ஆர்.எம். வசீம்
உலஹிட்டிவல, மல்வானை


Add new comment

Or log in with...