விழிப்புலனற்றோர் தொழில்புரியும் ஆடைத்தொழிற்சாலை ஆரம்பம்

சிந்திக்கும் ஆற்றல் கொண்ட விழிப்புலனற்றவர்கள் பணிபுரிவதற்காக நவீனமுறையில் அமைக்கப்பட்ட ஆடைத் தொழிற்சாலையொன்று அனுராதபுரம் கஹட்டகஸ்திகிலிய பகுதியில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்த விழிப்புலனற்றவர்களின் ஆடைத் தொழிற்சாலையின் உரிமையாளர் சீதுவை பகுதியைச் சேர்ந்த 51 வயதுடைய பெண் ஒருவராவர். இவரது கணவர் கஹட்டகஸ்திகிலிய பகுதியைச் சேர்ந்தவர். அப்பெண் ஒரு வருடத்திற்கு முன்னர் குறித்த இடமொன்றுக்குச் சென்றிருந்த வேளையில் கண்பார்வையற்றவர்கள் தொடர்பில் கவனம் செலுத்தியுள்ளார். கண்பார்வையற்றவர்களுக்கு எதிர்கால நம்பிக்கையை ஊட்டும் வகையிலேயே இத்தொழிற்சாலை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இங்கு விழிப்புலனற்றோர் மாத்திரம் பணிபுரிகின்றனர். அது சிறிய ஆடைத் தொழிற்சாலையாகும். 'நேத்ரஞ்சலா' என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

தற்போது 07 பேர் இந்நிலையத்தில் பணிபுரிகின்றனர். கண்பார்வையுள்ள ஒருவரும் பணிபுரிகின்றார். அவரது காலில் ஏற்பட்ட குறைபாடு காரணமாக அவர் சக்கர நாற்காலியின் துணையுடன் நிறுவனத்தின் பயிற்சி ஆலோசகராக பணிபுரிந்து வருகிறார். ஏனையோர் விழிப்புலனற்ற இளைஞர், யுவதிகளாவர். மிகவும் சுறுசுறுப்பாக கண்பார்வையுடையோர் போன்று அவர்கள் பணிபுரிந்து வருவதை அவதானிக்க கூடியதாகவுள்ளது.

தற்போது அங்கு பலவிதமான ஆடைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இவர்கள் நாளொன்றுக்கு 12 இற்கும் மேற்பட்ட ஆடைகளை உற்பத்தி செய்து வருவதுடன் இவைகள் அனைத்தும் உள்ளூர் உற்பத்திகளை கொண்டு உற்பத்தி செய்யப்படுகின்றமை விசேட அம்சமாகும்.

மேலும் அவர்கள் சுற்றுச்சூழலுக்கு உகந்த பைகளையும் உற்பத்தி செய்து வருகின்றனர். அதற்குள் மரங்களின் விதைகள் உள்வாங்கப்பட்டுள்ளன. பைகளின் பாவனை முடிந்து அது வீசப்பட்டதன் பின்னர் அதன் மூலம் ஒரு தாவரம் முளைத்து, வளர்ந்து நிழல் தரக்கூடியதாகவும் பயன்தரக் கூடியதாகவும் இருக்கும் என்பதற்காக விதைகள் இணைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மதார் தம்பி ஆரிப்
(அநுராதபுரம் மேற்கு தினகரன் நிருபர்)


Add new comment

Or log in with...