சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தை கலைக்க அரசாங்கம் தயாரில்லை

சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தைக் கலைப்பதற்கான எவ்வித ஏற்பாடுகளும் அரசாங்கத்திடம் இல்லையென தேசிய பாதுகாப்பு  தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க  தெரிவித்தார். 

 2015 ஆம் ஆண்டு  அமைச்சரவை பத்திரத்திற்கமைய  சிவில் பாதுகாப்பு சேவை,   (Depreciating service) காலாவதியாகும் சேவையாக அங்கீகரிக்கப்பட்ட போதிலும், அதன் காலம்  நிறைவடைந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

 அதன் பிரகாரம், சிவில் பாதுகாப்புத் திணைக்கள உறுப்பினர்களுக்கு  60 வருட  சேவைக்காலத்தை பூர்த்தி  செய்வதற்கு,  55 வருடங்களில்  சேவைக்கால நீடிப்பைக் கோர முடியும் எனத் தெரிவித்த சாகல ரத்நாயக்க, அவ்விடயங்கள் எதுவும் மாறவில்லை எனக் குறிப்பிட்டதுடன், எதிர்காலத்திலும் மாற்றம்  செய்யும்  நோக்கம் இல்லையென்றும் அவர் வலியுறுத்தினார்.

மொரட்டுவ கட்டுபெத்தவில் அமைந்துள்ள சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தின் தலைமையகத்தில்  அத் திணைக்கள அதிகாரிகளால் ஆற்றப்படும் சேவையை பாராட்டும் வகையில் நேற்று (24) பிற்பகல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பாராட்டு நிகழ்வில் கலந்துகொண்டபோதே அவர்  மேற்கண்டவாறு தெரிவித்தார்.  

பாதுகாப்பு  இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் சிவில் பாதுகாப்புத் திணைக்களம், தாய்நாட்டிற்கு ஆற்றி வரும் சேவை பாராட்டப்பட்டது. 

சாகல ரத்நாயக்க, சிவில் பாதுகாப்புத் திணைக்கள உறுப்பினர்களின் தகவல்களைக் கேட்டறிந்து அவர்களுடன் சிநேகபூர்வ உரையாடலில் ஈடுபட்டதுடன், சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் (ஓய்வு பெற்ற) ரஞ்சித் லமாஹேவகேவினால்  இந்த விஜயத்தை முன்னிட்டு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் மற்றும் சாகல ரத்நாயக்க ஆகியோருக்கு நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன.

பின்னர் இராஜாங்க அமைச்சர் மற்றும் சாகல ரத்நாயக்க ஆகியோர், சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தின் விவகாரங்கள் தொடர்பில் அவதானம் செலுத்தியதுடன் அதன் பணிப்பாளர் நாயகம் உள்ளிட்ட சிரேஷ்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டனர். 


Add new comment

Or log in with...