எதிர்க்கட்சி ஒருபோதும் ஒத்துழைப்பு வழங்கியதில்லை

சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து அரசாங்கம் பெற்றுக் கொள்ளும் கடன் தொடர்பில் ஒருபோதும் எதிர்க்கட்சியினரின் ஒத்துழைப்பு கிடைத்ததில்லை என சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேற்று பாராளுமன்றத்தில் உரை நிகழ்த்தியதன் பின்னர் அதனைப் பாராட்டி குமார வெல்கம எம்பி சபையில் முன் வைத்த கூற்றுக்களுக்கு பதிலளிக்கும் வகையிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

அது தொடர்பில் சபையில் மேலும் தெரிவித்த அமைச்சர்: சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து அரசாங்கம் பெற்றுக் கொள்ளவுள்ள கடன் விவகாரம் தொடர்பில் ஒருபோதும் எதிர்க்கட்சி தனது ஒத்துழைப்பை வழங்கவில்லை.

சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து கடன் பெற்றுக் கொண்டாலும் அதனை அரசாங்கத்தினால் மீள செலுத்த முடியாது என்றும் எதிர்க்கட்சியின் சிலர் மேடைகளில் பேசி வந்தனர்.

பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சியின் முன்வரிசையில் உள்ளவர்கள் சிலரும் கூட சர்வதேச நாணய நிதியம் ஒருபோதும் கடன் வழங்கப் போவதில்லை என்றும் தெரிவித்து வந்தனர்.  ஆனால் தற்போது அந்த நிதியத்தின் கடன் எமக்கு கிடைத்துள்ளது.

இப்போது பாராளுமன்றத்தில் குமார வெல்கம போன்றவர்கள் அதற்காக ஜனாதிபதியைப் பாராட்டும் நிலை உருவாகியுள்ளது என்பதையும் குறிப்பிட விரும்புகின்றேன் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

லோரன்ஸ் செல்வநாயகம்


Add new comment

Or log in with...