சர்வதேச அணுசக்தி நிறுவனத்தால் காணாமல்போனதாக அறிவிக்கப்பட்ட இரண்டரைத் தொன்கள் யுரேனியம் தாதுவை கண்டுபிடித்ததாக கிழக்கு லிபியாவின் ஆயுதப் படைகள் தெரிவித்துள்ளன.
சாட் நாட்டுடனான எல்லைப் பகுதியில் இந்தத் தாதுக்களைக் கொண்ட பத்து பீப்பாய்களை கண்டுபிடித்ததாக அந்தப் படைகளின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இந்த ஊடகச் செய்தியை உறுதி செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டிருப்பதாக சர்வதேச அணுசக்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த வாரம் ஆரம்பத்தில் இடம் குறிப்பிடப்படாத தளத்திற்கு சென்று கண்காணிப்பில் ஈடுபட்ட நிறுவனம் யுரேனியம் காணாமல்போயிருப்பது குறித்து எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்தப் பகுதி அரச கட்டுப்பாட்டில் இல்லாத இடமாகும்.
இயற்கையில் பெறப்படும் கனிமமான யுரேனியத்தை சுத்திகரிப்பது அல்லது செறிவூட்டுவதன் மூலம் அணு சக்தி செயற்பாடுகளுக்கு பயன்படுத்த முடியும்.
காணாமல்போன இந்த யுரேனியம் அதன் தற்போதைய நிலையில் அணு ஆயுதம் தயாரிக்க பயன்படுத்த முடியாது என்றபோதும் அணு ஆயுதத் திட்டம் ஒன்றுக்காக மூலப்பொருளாக பயன்படுத்த முடியும் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். 2003 டிசம்பரில், இராணுவ ஆட்சியாளர் முஅம்மர் கடாபியின் கீழ் லிபியா அணு, உயிரியல் மற்றும் இரசாயன ஆயுதங்கள் தயாரிக்கும் திட்டங்களை வெளிப்படையாகக் கைவிட்டது.
எனினும் 2011 ஆம் ஆண்டு கடாபி பதவி கவிழ்க்கப்பட்டது தொடக்கம் அந்த நாடு இராணுவ மற்றும் அரசியல் தரப்புகள் இடையே பிளவுபட்டு காணப்படுகிறது.
Add new comment