விடைபெற்றார் அலீம் தார்

அதிக சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் நடுவராக பணியாற்றி சாதனை படைத்த பாகிஸ்தானின் மூத்த நடுவர் அலீம் தார் ஐ.சி.சி நடுவர் குழாத்தில் இருந்து விலகியுள்ளார்.

58 வயதான அலீம் தார் 144 டெஸ்ட் மற்றும் 222 ஒருநாள் சர்வதேச போட்டிகளில் நடுவராக செயற்பட்டிருப்பதோடு இவை இரண்டும் நடுவராக பணியாற்றிய அதிக போட்டிகள் என உலக சாதனையாக அமைந்தது. தவிர அவர் 69 டி20 சர்வதேச போட்டிகளிலும் நடுவராக செயற்பட்டுள்ளார்.

“19 ஆண்டுகள் நடுவர் குழாத்தில் பணியாற்றி 435 ஆடவர் சர்வதேச போட்டிகளில் நடுவராக செயற்பட்ட மூத்த நடுவர் தார் தமது பதவியில் இருந்து விலகியுள்ளார்” என்று சர்வதேச கிரிக்கெட் கெளன்சில் வெளியிட்ட ஊடக அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

ஐ.சி.சி நடுவராக தார் 2002 ஆம் ஆண்டு முதல் சர்வதேச போட்டியில் நடுவர் பணியில் செயற்பட்டதோடு அதற்கு அடுத்த ஆண்டு தென்னாபிரிக்காவில் நடைபெற்ற 2003 உலகக் கிண்ணத்திலும் நடுவராக பணியாற்றினார்.

பாகிஸ்தானில் முதல்தர போட்டிகளில் ஆடிய பின்னரே அவர் நடுவர் பணிக்கு வந்தார். சர்வதேச போட்டிகளில் நடுவராக பணியாற்றியது பெரும் கெளரவமாகும் என்று அவர் குறிப்பிட்டார்.

இந்நிலையில் தென்னாபிரிக்காவின் அட்ரியன் ஹோல்ட்ஸ்டொக் மற்றும் பாகிஸ்தானின் அஹ்சான் ராசா இருவரும் ஐ.சி.சி நடுவர் குழாத்தில் சேர்க்கப்பட்டிருப்பதாக ஐ.சி.சி அறிவித்துள்ளது.


Add new comment

Or log in with...