- 2030 இல் 500 ஜிகா வோல்ட் மின்சக்தியே இலக்கு
பசுமை எரிசக்தி துறையில் உலகை வழிநடத்துவதோடு பசுமை தொடர்பான தொழில்களை உருவாக்கக்கூடிய ஆற்றல்களைக் கொண்டுள்ள ஒவ்வொரு எரிசக்தி நிறுவனமும் இந்தியாவில் முதலீடு செய்ய முன்வர வேண்டும் என்று இந்திய மத்திய அரசு அழைப்புவிடுத்துள்ளது.
2030 ஆம் ஆண்டுக்குள் 500 ஜிகா வோல்ட் புதுப்பிக்கத்தக்க மின்சாரத்தை உற்பத்தி செய்யக்கூடிய திறனை அடைந்து கொள்வதற்கான வேலைத்திட்டங்களை ஆரம்பித்துள்ள இந்தியா, 2021 இல் 100 ஜிகா வோல்ட் மின்சக்தியை உற்பத்தி செய்துள்ளது என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இவ்வருட வரவு செலவுத்திட்டத்தில் மத்திய அரசு அறிவித்துள்ள பசுமை அபிவிருத்தி குறித்த கலந்துரையாடலொன்று இந்திய எரிசக்தி அமைச்சினால் இணைய வழி ஊடாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இக்கலந்துரையாடலிலேயே மேற்படி விடயங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
'பொருளாதார அபிவிருத்தி மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பது தொடர்பில் உலக நாடுகளுடன் கைகோர்த்து செயற்படவென இந்தியா உத்வேகத்துடன் வளர்ந்து வருகின்றது. இன்று பாரியளவில் உற்பத்தி செய்கின்ற சூரிய சக்திக்கு உலகிலேயே மிகவும் குறைவாகவே இந்தியா செலவிடுகிறது. பசுமை எரிசக்திக்காக உலகிற்கு தலைமை தாங்கும் ஆற்றல் இந்தியாவுக்கு உள்ளது. காலநிலை மாற்றத்தின் சவால்களை சமாளிப்பதற்கான முன்முயற்சிகள் அல்லது ஐக்கிய நாடுகள் காலநிலை மாற்றங்கள் குறித்து கிளஸ்கோவில் நடைபெற்ற மாநாட்டு பிரகடனம் தொடர்பிலும் இந்தியா முன்மாதிரியாக செயற்படுகிறது' என்றும் இக்கலந்துரையாடலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கைத்தொழில், கல்வி, மாநில அரச நிர்வாகத்தினர் என சம்பந்தப்பட்ட தரப்புக்களை உள்ளடக்கிய ஆயிரத்துக்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் பங்குபற்றிய இக்கலந்துரையாடலில் பசுமை அபிவிருத்தி திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கான வேலைத்திட்டங்களை இறுதி செய்வதற்கான ஆலோசனைகளும் இடம்பெற்றுள்ளன என்று ஏ.என்.ஐ தெரிவித்துள்ளது.
Add new comment