உக்ரைனுக்கு போலந்து போர் விமானங்களை வழங்க முடிவு

உக்ரைனுக்கு போலந்து சோவியட் காலத்து நான்கு மிக் போர் விமானங்களை வழங்கவுள்ளது. உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்புக்குப் பின்னர் அந்த நாட்டுக்கு விமானங்களை வழங்கும் முதல் நேட்டோ நாடாக போலந்து இடம்பிடித்துள்ளது.

எதிர்வரும் நாட்களில் இவை அனுப்பப்படும் என்றும் மற்றவை எதிர்காலத்தில் கையளிக்கப்படும் என்றும் போலந்து ஜனாதிபதி அன்ட்ரெசஜ் டுடா தெரிவித்துள்ளார்.

இது போலந்தின் வான் பாதுகாப்பை பலப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்பட்டபோதும் ரஷ்யாவுடனான போரில் ஒரு திருப்புமுனையாக அமையாது என்று கூறப்பட்டுள்ளது. மற்ற நாடுகளும் இதனை பின்பற்றும் என்று தாம் எதிர்பார்ப்பதாக உக்ரைன் பாராளுமன்ற பிரதிச் சபாநாயகர் ஒலேனா கன்ட்ரட்யுக் தெரிவித்துள்ளார்.

உக்ரைனிய விமானிகள் பயிற்சி பெற்றிருக்கும் சோவிட் காலத்து விமானங்களை உக்ரைனுக்கு வழங்க மற்ற நேட்டோ நாடுகளும் ஆலோசித்து வருகின்றன. எனினும் எப்–16 போன்ற நவீன போர் விமானங்களை தரும்படி உக்ரைன் முன்னதாக மேற்கத்திய நாடுகளை கேட்டிருந்தது.

உக்ரைனிய விமானிகளுக்கு நேட்டோ தரம் கொண்ட விமானங்களை செலுத்த பிரிட்டன் பயிற்சி அளிக்கிறது. எனினும் நீண்ட பயிற்சி காரணமாக நீண்ட கால தீர்வாகவே மேற்கத்திய ஜெட்களை வழங்க முடியுமாக இருக்கும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் இருந்து உக்ரைனுக்கு ஜெட்களை அனுப்புவதை அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் முன்னதாக நிராகரித்திருந்தார்.


Add new comment

Or log in with...