ஹொங்கொங் கிரிக்கெட்டில் சமரி அத்தபத்து பங்கேற்பு

பாகிஸ்தானில் அண்மையில் கண்காட்சி கிரிக்கெட் போட்டியில் ஆடிய இலங்கை மகளிர் அணித் தலைவி சமரி அத்தபத்து ஹொங்கொங்கில் 2023 பெயார் பிரேக் அழைப்பு கிரிக்கெட் தொடரில் ஆடவுள்ளார். இந்தத் தொடர் அடுத்த மாதம் நடைபெறவுள்ளது.

இதன்படி ஹொங்கொங்கில் உள்ள கொவ்லூன் கிரிக்கெட் மைதானத்தில் வரும் ஏப்ரல் 3 ஆம் திகதி தொடக்கம் 16 ஆம் திகதி வரை இந்தத் தொடர் நடைபெறவுள்ளது.

33 வயதான துடுப்பாட்ட சகலதுறை வீராங்கனையான சமரி அத்தபத்து கடந்த ஆண்டு ஐக்கிய அரபு இராச்சியத்தில் இந்தத் தொடர் நடைபெற்றபோதும் அதில் பங்கேற்றிருந்தார்.

“இதுவரையில் இந்தத் தொடரில் பங்கேற்கும் ஒரே இலங்கை வீராங்கனையாக இவர் உள்ளார்” என்று இலங்கை கிரிக்கெட் சபை வட்டாரம் தெரிவித்துள்ளது.

எனினும் இந்தத் தொடரில் 36 நாடுகளைச் சேர்ந்த 90 கிரிக்கெட் வீராங்கனைகள் பங்கேற்கவுள்ளனர். ஹொங்கொங் கிரிக்கெட் சபையால் நடத்தப்படும் இந்தத் தொடர் ஐக்கிய அரபு இராச்சியம், நேபாளம், தாய்லாந்து, மலேசியா, பூட்டான், குவைட் மற்றும் ஹொங்கொங் உட்பட ஆசியாவின் திறமைகளை கண்டறிய உதவும் என்று கூறப்பட்டுள்ளது.


Add new comment

Or log in with...