பிஃபா தலைமைப் பதவிக்கு இன்பன்டினோ மீண்டும் தெரிவு

சர்வதேச கால்பந்து சம்மேளனத்தின் தலைவராக கியானி இன்பன்டினோ மேலும் நான்கு ஆண்டுகளுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். ருவாண்டா தலைநகர் கிகாலியில் நடந்த பிஃபா மாநாட்டில் 52 வயதான அவர் போட்டியின்றி தெரிவானார்.

2016 ஆம் ஆண்டு இடை நிறுத்தப்பட்ட ஜோசப் பிளாட்டருக்கு பதிலாக பிஃப தலைமை பதவியை ஏற்ற நிலையில் அவருக்கு 2027 தொடக்கம் 2031 வரை மற்றொரு தவணைக்கு போட்டியிட முடியும் என பிஃபா குறிப்பிட்டுள்ளது.

தலைமை பதவிக்காக வேறு ஒருவரும் போட்டியிடாத நிலையில் சம்பிரதாயமாகவே இந்த தேர்வு இடம்பெற்றது. உறுப்பு நாடுகளிடையே அவரது செல்வாக்கு அதிகரித்திருந்தபோதும் ஜெர்மனி, நோர்வே மற்றும் சுவீடன் உட்பட பல ஐரோப்பிய நாடுகள் இன்பன்டினோ தொடர்பில் அதிருப்தியில் உள்ளமை குறிப்பிடத்தக்கது. எனினும் தலைவரை தேர்வு செய்யும் வாக்கெடுப்பில் அதிருப்தி வாக்குகள் கணக்கெடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

“பிஃபா தலைமை பொறுப்பு என்பது கெளரவம் மற்றும் சிறப்பு வாய்ந்தது என்றபோதும் அதிக பொறுப்பு வாய்ந்ததுமாகும். எனது கடப்பாட்டை உங்களால் தொடர்ந்து நம்பலாம்” என்று இன்பன்டினோ 73ஆவது பிஃபா மாநாட்டில் தெரிவித்தார்.


Add new comment

Or log in with...