முன்னாள் எம்.பி. பியசேன மோட்டார் சைக்கிள் விபத்தில் பலி

ஆலையடிவேம்பு பகுதியில் நேற்று சம்பவம்

அம்பாறை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பி.எச்.பியசேன விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார். நேற்றுக் காலை 7.30 மணியளவில் அக்கரைப்பற்று - பொத்துவில் பிரதான வீதியில் ஆலையடிவேம்பு பொதுமயானத்துக்கு முன்பாக இடம்பெற்ற  விபத்தில் சிக்கியே அவர் உயிரிழந்துள்ளார்.

மோட்டார் சைக்கிளில் நேற்றுக் காலை பயணித்துக்கொண்டிருந்த அவர், மயானத்தின் பக்கம் திரும்ப முற்படுகையில் பொத்துவில் பிரதேசத்திலிருந்து பொலன்னறுவை நோக்கிப் பயணித்த தனியார் பஸ்ஸில் மோதுண்டு அவர் விபத்துக்குள்ளானார்.

விபத்தில் படுகாயமடைந்த அவர், அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தபோதும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளதாக, வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

அக்கரைப்பற்று பொலிஸார், விபத்துத் தொடர்பான விசாரணையை ஆரம்பித்துள்ளனர். வழமையாக இவர் மயானங்களுக்குச் சென்று துப்புரவு பணிகளில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

சம்பவ தினமான நேற்று வெள்ளிக்கிழமையும் அவர் மயானத் துப்புரவுப் பணிக்காக ஆலையடிவேம்புக்குச் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.

1961ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 3ஆம் திகதி பிறந்த பொடி அப்புஹாமி பியசேன, 2010ஆம் ஆண்டு அம்பாறை மாவட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் போட்டியிட்டு 11,139 வாக்குகளைப் பெற்று பாராளுமன்ற உறுப்பினராக தெரிவானார்.

2015 ஆம் ஆண்டு ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி சார்பில் போட்டியிட்டு 4,901 வாக்குகளை அவர் பெற்றுக்கொண்டார். எனினும், அவருக்கு பாராளுமன்ற உறுப்பினராகும் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. அதன் பின்னர், அரசியலிலிருந்து ஒதுங்கி சமூகசேவைகளில் ஈடுபட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.

வாச்சிக்குடா வி​சேட நிருபர்


Add new comment

Or log in with...